வழக்கமான நேர்முகத் தேர்வு என்ற விதியை உடைத்தெறியும் FreshDesk நிறுவனம் : பாராட்டப்பட வேண்டிய நிறுவன காலாசாரம்
இண்டர்காம் ஒலித்தது.
“வணக்கம், FreshDesk!”
‘ஜி’ நேர்முகத் தேர்வுக்கானவர்கள் தயார். உள்ளே அனுப்பலாமா?” என்றது எதிர்முனையிலிருந்து ஒலித்த குரல்.
“இன்னும் 2 நிமிடத்தில் வாடிக்கையாளருடனான ஆன்லைன் உரையாடல் முடிந்துவிடும். அதற்குப்பின் அனுப்பலாம்.” என்றபடி இணைப்பைத் துண்டித்தார் ஜி.
‘ஜி’ என்றால் மரியாதை நிமித்தமாக அழைக்கும் வடமொழி ஜி அல்ல. கிரீஷ் மாத்துருபூதம் (girish mathrubhootham)., FreshDesk (பிரெஷ்டெஸ்க்) மென்பொருள் சேவையின் நிறுவனர். தன் சகாக்களை அவர் பாராட்டுவதால் ஏற்பட்ட நெருக்கத்தால் அவருக்கு பணியாளர்களிடையே ஏற்பட்ட செல்லப்பெயர் ‘ஜி’ .
நிறுவனம் விரிவடைய விரிவடைய உயர்மட்ட நிர்வாகத்துடன் இடைவெளி ஏற்படக்கூடாது என்ற திறந்த அணுகுவழித் தலைமையில் தீர்க்கமாக நம்பிக்கை உடையவர்.
Honda, Sony Picture, TOSHIBA, Cisco போன்ற பெரிய பன்னாட்டு ஸ்தாபனங்கள் தொடங்கி உலகின் பல்வேறு சிறு, நடுத்தர நிறுவனங்கள் உட்பட 50, 000 வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளது. உலகளாவிய மென்பொருளையே சேவையாகக் கொண்டு வளர்ந்துவரும் நிறுவனங்களில் (SAAS) FreshDesk ஒரு முன்னோடி.
சென்னை, சான் பிரான்சிஸ்கோ, லண்டன், சிட்னி என்று நான்கு வெவ்வேறு கண்டங்களில் தடம் பதித்து ஆங்கிலம் பேச்சுவழக்கில் இல்லாத நாடுகளிலும் வாடிக்கையாளர்களைக் கவர்ந்துவரும் நிறுவனத்தை வழிநடத்தும் பொருட்டு சதா பயணித்த வண்ணம், முதலீட்டாளர்களுடன் உரையாடிக்கொண்டும், புதிய ஊழியர்களை கலாச்சார இடைவெளிகளைத் தாண்டி அரவணைத்துச் செல்ல வேண்டியுள்ள நிலையிலும் கிரீஷ் மாத்துருபூதம் வாடிக்கையாளருடன் உரையாடுவதற்காக பிரத்யேகமாக “CEO Online” என்ற அறிவிப்புடன் நேரம் ஒதுக்குகிறார்.
இன்றுவரை பிரெஷ்டெஸ்க்கில் மனித வள மேலாளர்களே கிடையாது. தொழில்நுட்ப வல்லுனர்களே தங்கள் பணியிடத் தேர்வுகளை நடத்திக்கொள்வார்கள். அப்படிப்பட்ட ஒரு நேர் காணலுக்காக (interview) அன்று வந்த முதல் நபர் அனிருத் என்பவர்.
முழுக்கை சட்டையும், கழுத்துப்பட்டையும் அணிந்திருந்த அவர் நாம் தவறான அறைக்கு வந்துவிட்டோமோ என்ற சந்தேகத்துடன் வாசற்படியில் கபடியாடிக்கொண்டிருந்தார்.
ஒரு விஸ்தாரமான அறையில் ஜீன்ஸ், டி- ஷர்ட் சகிதம் தன் மடிக்கணினியில் வாடிக்கையாளருடன் உரையாடிக்கொண்டிருந்த கிரீஷை முதல் முறை பார்க்கும் எவருக்கும் இந்த ஆள் வேலை நேரத்தில் மும்முரமாக ஏங்க்ரி பெர்ட் விளையாடுகிறாரோ என்று தோன்ற வாய்ப்பு உண்டு.
“வாங்க அனிருத்! என்ன சாப்பிடறீங்க? டீ? காபி? கூல் ட்ரிங்க்?” என்று தன் பள்ளித்தோழனை உபசரிப்பதுபோல் வாசல் வரை சென்று வாஞ்சையுடன் வரவேற்றார் ஜி.
” இல்ல! பரவாயில்ல!” என்றபடி அசௌகரியமாக கையில் வைத்திருந்த சான்றிதழ்களின் கோப்பை சரிசெய்த அனிருத், தான் இங்கு ஒரு நேர்காணலுக்காக வந்திருப்பதை நினைவூட்டும் வகையில் விறைப்பாக நிமிர்ந்து உட்கார்ந்தார்.
Please Read Also:
கிரீஷ் மாத்துருபூதம் ஆகிய நான், எப்படி Freshdesk-ஐ உலகளாவிய நிறுவனமாக உருவாக்கினேன்
உள்ளே அடியெடுத்து வைத்த மாத்திரத்திலிருந்து திரும்பிய இடமெல்லாம் அவருக்கு திகைப்பு. உடுப்பு நெறிகளை பெருவாரியான மென்பொருள் நிறுவனங்கள் தளர்த்தி வந்தாலும் வேலை நேரம், விடுமுறை, உணவு\ சிற்றுண்டி இடைவேளை, இதர சலுகைகள் போன்ற விஷயங்களில் கராராகத்தான் இருப்பார்கள்.
கான்கிரீட் காடுகளில் முளைத்த கண்ணாடித் தீவுகள்போல் தோற்றமளிக்கும் மென்பொருள் நிறுவனங்களுக்கிடையே பெயருக்கேற்றாற்போல் பிரெஷ்டெஸ்க்கின் உள்வளாகமும் உயிரோட்டத்துடன் இருந்தது.
வழக்கமான வேலை நேரத்திலேயே உணவுக் கூடங்கள் நிரம்பி வழிந்தன. உடற்பயிற்சிக் கூடம், ஸ்னூக்கர் மேஜைகள் எல்லாமே பரபரப்பாக இருந்தது.
“இன்று ஏதாவது விசேஷ நாளா” என்று அனிருத் அடையாள அட்டையணிந்த பணியாளரிடம் அனிருத் கேட்க ,
” இது குழந்தைகள் காப்பகமும் இல்லை, ஆண்டி மடமும் இல்லை. இங்கு இன்ன நேரத்தில் இதுதான் செய்யவேண்டும் என்று எந்தவித நிர்பந்தமும் கிடையாது. அவரவர் வேலையை யாருக்கும் எந்தப் பாதகமும் இல்லாதவண்ணம் அவர்களே நிர்வகித்துக் கொள்ளலாம். இன்னும் சொல்லப்போனால் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித்தரவேண்டிய தாய்மார்கள் சீக்கிரமாக வீடுதிரும்பி எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு வீட்டிலிருந்தபடியே இரவில் அலுவல் சார்ந்த வேலைகளைத் தொடரலாம்.
இங்கு எல்லோரும் எப்போது சொந்த வேலையைச் செய்ய வேண்டும், எப்போது அலுவல் சார்ந்த வேலையைச் செய்யவேண்டும் என்று சுயமாக முடிவெடுக்கக்கூடிய பண்பட்ட தனிநபர்களாகக் கருதப்படுகிறார்கள். இப்போதுகூட நான் கார் ஓட்டக் கற்றுக்கொள்ளத்தான் போய்க்கொண்டிருக்கிறேன். காலை 10-12. எனக்கு அவ்வளவாக வேலை இருக்காது. அடுத்த வாரம் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான தேர்வு இருக்கிறது. வரவா?” என்றபடி அவனைக் கடந்து சென்றிருந்தார்.
ஒரு கணம் ஜி ஏறிட்டார். பின் தன் வேலையைத் தொடர்ந்தவாறே …
“உங்களைப் பற்றி சொல்லுங்கள்” என்றார்.
இது வழக்கமான கேள்விதான் என்று மடைதிறந்த வெள்ளம்போல் தன்னைப் பற்றி அவனால் பாராயணம் செய்ய முடியாது. ஏன் என்றால் அவன் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டவிதம் வழக்கத்திற்கு மாறானது.
எப்போதும் சான்றிதழ்களையெல்லாம் சரி பார்த்து, ஓரிரு தகுதிச்சுற்றுகளைக் கடந்த பின்னரே ஒருவர் நேமுகத்தேர்வைச் சந்திக்க நேரிடும். ஆனால் கடந்த வாரம் தீபாவளியை முன்னிட்டு அமேசான், ப்ளிப்கார்ட் போன்ற முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களைப் பலர் சரமாரியாக சமூக வலைதளங்களில் வசைபாடிக்கொண்டிருக்க, அசராமல் தன்னிச்சையாக முன்வந்து அவர்கள் தரப்பு சிக்கல்களையும், ஞாயங்களையும் விளக்கிய அனிருத்தின் பதிவு அமோக வரவேற்பு பெற்றிருந்தது. அதைத் தொடர்ந்து நேர்காணலுக்கான அழைப்பு வரவே உற்சாகமாகக் கிளம்பி பிரெஷ்டெஸ்க்கின் பெருங்குடி அலுவகத்திற்கு வந்திருந்தார்.
தான் எந்த மாதிரியான வேலைக்குத் தேர்வுசெய்யப்படப் போகிறோம் என்பது அவருக்கே தெரியாது. ஆனால் இங்கு சவால்களுக்கும், அதன் மூலம் ஏற்படும் வாய்ப்புகளுக்கும் எந்தக் குறையும் இருக்காது என்பது மட்டும் நன்றாகப் புரிந்திருந்தது அனிருத்திற்கு.
“என் பெயர் அனிருத். படித்தது என்னவோ பொறியியல்தான். ஆனால் நான் படித்த மின்னணு துறைசார்ந்த வேலை எதற்கும் விண்ணப்பிக்கவில்லை.
நான் ஒரு வலைப்பதிவாளன் (blogger). என்னைப் பெரிதும் கவர்ந்த, பாதித்த நிகழ்வு பற்றியோ, சுற்றுலா தளத்தைப் பற்றியோ, சிற்றுண்டிச்சாலை அல்லது நடப்பு நிகழ்வுகளைப் பற்றியோ பதிவிடுவேன். விளம்பரம் மூலம் ஒரு கணிசமான தொகையை நான் ஈட்டுகிறேன். மற்றபடி ……..”
அனிருத் தொடர்வதற்கு முன் ஜி குறுக்கிட்டு
” எனக்கு எதையாவது உங்களால் கற்றுத்தர முடியுமா?” என்று உற்சாகத்துடன் கேட்டார் கிரீஷ் மாத்துருபூதம். இழப்பதற்கு ஒன்றுமில்லை என்பதால் அனிருத் பதறவில்லை. நிதானமாகத் தன் கழுத்துப்பட்டையக் கழற்றினான். தனக்குத் தெரிந்த எல்லா வகை முடிச்சுகள் பற்றியும் செய்முறை விளக்கம் கொடுத்தான்.
தன் மடிக்கணினியை அனிருத் பக்கம் திருப்பினார் ஜி
” இது என் சமீபத்திய வாடிக்கையாளருடனான உரையாடல். இந்தியாவில் முக்கியமான சுற்றுலா தளங்களில் எல்லாம் உணவகங்களும், தங்கும் விடுதிகளும் நடத்திவருபவர்கள். அவர்களது தேவை. சமூக வலைதளங்களில் அவர்களைப் பற்றிய விமர்சனங்களுக்குப் பதிலளிப்பது, குறை நிறைகளை விளக்குவது. அண்மையில் ஊட்டியில் கீசர் சரியாக செயல்படாததால் எரிச்சலுற்ற அவரது வாடிக்கையாளர் அவதூறாகப் பதிவிட்டுள்ளார். இதை நீங்கள் எப்படி எதிர்கொள்வீர்கள்?”
அந்தப் பதிவை ஊன்றிப் படித்தான் அனிருத்.
“நிறுவனங்கள் மீதான மதிப்பீடானது ஒரே நாளில் உருவாக்கப்படவோ\அழிக்கப்படவோ கூடியதல்ல. எதுவுமே சிறுகச் சிறுகச் சேர்ந்து ஒரு கட்டத்தில் பெருகுவதுதான்…” என்றவன் தொடர்ந்து தன் தீர்வை நோக்கிய அணுகுமுறையை அனிருத் விளக்க விளக்க புன்னகை இழையோட, தலை அசைத்தவாறே ஜி கேட்டுக்கொண்டிருந்தார்.
“நீங்கள் விரும்பினால் இன்றிலிருந்து FreshDesk உடன் சேர்ந்து பயணிக்கலாம். இது வாடிக்கையாளர் சேவையை மைய்யமாகக் கொண்ட நிறுவனம் என்பதால் சந்தைப்படுத்துதல், வலைதளம் சார்ந்த சேவைகளில் பங்குபெறுதல் அல்லது வாடிக்கையாளருடன் உரையாடுதல் போன்ற உட்பிரிவுகள் உங்களுக்கு உகந்ததாக இருக்கலாம்.
இங்கே நாங்கள் ‘work buffet’ என்ற சித்தாந்தத்தைப் பின்பற்றுகிறோம். உங்களால் ஒன்றுக்கும் மேற்பட்ட முறையில் நிறுவன வளர்ச்சிக்குப் பங்களிக்க முடியும் என்று நீங்கள் நம்பினால் அதற்காகத் தங்களை தகவமைத்துக்கொள்ளத் தேவையான எல்லாவிதமான ஒத்துழைப்பையும், அதற்கான சன்மானத்தையும் நிறுவனம் உங்களுக்கு வழங்கும். வரவேற்பு அறையில் தீப்தியைச் சென்று சந்தியுங்கள். மற்ற விவரங்களை நீங்கள் அவரிடமே பெற்றுக்கொள்ளலாம் “
என்ற ஜி வாழ்த்துக்களுடன் விடைபெற்றுக்கொண்டார்.
Please Read Also:
வெறும் 4 இலட்சம் ரூபாயில் தொடங்கப்பட்டு 15.5 பில்லியன் டாலர் நிறுவனமாகிய ப்ளிப்கார்டின் (FlipKart) வெற்றிக் கதை