கிரீஷ் மாத்துருபூதம் ஆகிய நான், எப்படி Freshdesk-ஐ உலகளாவிய நிறுவனமாக உருவாக்கினேன்
பெங்களூரில் நடைபெற்றுக்கொண்டிருந்தது “Your Story” மற்றும் “Mobile Sparks” இணைந்து நடத்திய ஆட்சேர்ப்புக் கூட்டம். அதில் Orangescape, Ventuno Tech, Oyo rooms, FreshDesk போன்ற நிறுவனங்கள் கலந்துகொண்டிருந்தன. தவிர இளம் தொழில் முனைவோர், வெற்றிக்கதைகளைப் படிப்பதில், வெற்றியாளர்கள் பேசக் கேட்பதில் ஆர்வமுள்ளவர்கள் என்று பலர் வந்திருந்தனர்.
” இங்கே எத்தனை பேர் அண்ணாமலை படம் பாத்திருக்கீங்க” என்ற கேட்டார் FreshDesk நிறுவனர் கிரீஷ் மாத்துருபூதம் (girish mathrubhootham).
கூட்டத்தில் பல கைகள் உயர்ந்ததைப் பார்த்தார்.
” அதுல ஒரே பாட்டுல சூப்பர் ஸ்டார் பணக்காரர் ஆவாரே…… ஞாபகம் இருக்கா? அதே மாதிரிதான் எங்கள் ப்ரெஷ்டெஸ்க் கதையும். ஆனால் என்ன ஒன்னுன்னா பாட்டுல 5 நிமிஷத்துல நடக்கறது எதார்த்ததுல எங்களுக்கு 5 வருஷத்தில் நடந்தது.” என்ற பலமான பீடிகையுடன் தொடங்கிய கிரீஷ் (girish mathrubhootham) அதிதீவிர ரஜினி ரசிகர். வாழ்வின் எந்தவொரு இக்கட்டான தருணத்திலும் அதற்குப் பொருத்தமான ஒரு ரஜினி பொன்மொழியை உதிர்ப்பவர். சிறுது இடைவெளிவிட்டபின் தண்ணீர் அருந்திவிட்டு அவர் தொடர்ந்தார்.
FreshDesk தொடங்குவதற்கு முன் Zoho Corporation என்ற நிறுவனத்தில்தான் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். Zoho வில் என் வாழ்க்கை ஓஹோ என்றுதான் போய்க்கொண்டிருந்தது. சாதாரண முன் விற்பனை பொறியாளனாக (PreSales Engineer) வேலைக்குச் சேர்ந்து 9 வருடங்களில் Manage Engine என்ற பகுதியின் தயாரிப்பு மேலாண்மைப் பிரிவின் துணைத் தலைவராக உயர்ந்தேன்.
அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர் உறவு மேலாண்மைத் துறையின் பரிணாம (Customer Relationship Management i.e CRM) வளர்ச்சியை படிப்படியாக கண்முன் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. என் தலைமையில் பல திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி, வாடிக்கையாளர் சேவையில் குறிப்பிடத்தக்க புதுமைகளைப் புகுத்திய மன நிறைவுடன் நான் இருந்த நேரம் அது. என் நேரடிக் கட்டுப்பாட்டில் பெரிய பொருள்\ சேவை நிறுவனங்களுக்கான பிரத்யேக வாடிக்கையாளர் சேவை மையத்தை அப்போது நாங்கள் நிர்மாணித்துக் கொண்டிருந்தோம். கணினியம் (Cloud Computing) தொடர்பான உலகளாவிய முன்னேற்றங்களை என்னால் அப்போது கவனிக்க முடிந்தது.
கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்தைக் கடந்த எனது தொழில்முறை பயணத்தில் முதல் முறையாக நான் ஒரு வெறுமையை உணர்ந்தேன். பரபரப்பாக வேலை பார்த்துக்கொண்டிருந்தாலும் எந்த ஒரு பிடிப்பும் இல்லாத மேம்போக்கான, மெத்தனமாக வாழ்கையை நான் வாழ்ந்து கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றியது.
தொழில்முறை வாழ்வின் ஒரு புதிய சகாப்தத்தை நிர்மாணிக்கும் முடிவுக்கு வந்தபின் வேலைக்கு முழுக்குப் போட்டுவிட்டு நாடு திரும்பினேன். ஆனால் இன்றுவரை நான் யாரிடமும் சொல்லாத ஒரு ரகசியத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். நீங்கள் நம்பினால் நம்புங்கள். நான் கடைசியாக ஒரு பொறியாளன் என்ற நிலையில் இருந்து code எழுதியதை விட்டு 15 வருடங்கள் ஆகிவிட்டன.
என்னுடைய பலம் என்னுடைய தொழில்துறை அனுபவத்தைக் கொண்டு நிறுவனங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் படித்து முடித்துப் புதிதாக வேலைக்கு விண்ணப்பிப்பவர்களைத் தயார் செய்வது என்பதில்தான் இருக்கிறது என்று எனக்கே தெரியும்.
அன்றைய தேதியில் Java, SQL, C, C++ போன்ற தொழில்நுட்பங்களுக்கான வேலைப்பயிற்சி அளிப்பதில் இந்திய அளவில் பெரிய தேவை இருந்தது. அதற்கான பயிற்சி மையத்தை நான் தொடங்க முற்பட்டபோதுதான் நம் சந்தை இந்தப் புதிய துறைக்கான அதிகப்படியான தொடக்கநிலை முதலீடுகளை சமாளிக்கும் அளவிற்கு வளர்ச்சியடையவில்லை என்பது புரிந்தது.
அப்படியொரு சந்தர்ப்பத்தில்தான் Zoho வின் இந்தியக் கிளைகளை நிர்வகிக்கும் பயிற்றுனராக செயல்படுவதற்கு ஒரு மேலாளர் தேவைப்பட்டார். அதனால் அப்போதைக்கு அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். அனால் என் மனதின் மற்றொரு புறத்தில் அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வி என்னைத் தொடர்ந்து துரத்திக் கொண்டேயிருந்தது.
பாரம்பரிய தொழில்களில் ஈடுபட்டவர்கள்கூட கணினியம் சார்ந்த தொழில்துறை தொழில்நுட்ப முன்னேற்றங்களைக் கொண்டு பல மாற்றங்களைச் செய்து வருவதைக் கவனித்தேன் .
அந்தத் துறையில் எனக்கிருக்கும் இத்தனையாண்டு அனுபவத்தைக்கொண்டு ஏதேனும் செய்ய வேண்டும். நமக்கென ஒரு தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கவேண்டும் என்ற ஆசை அப்போதுதான் என்னுள் துளிர்விட ஆரம்பித்தது. ஆனால் அப்போதைய சூழலில் இதைக்குறித்து யாரிடமும் மனம்விட்டு பேசமுடியவில்லை.
ஏற்கனவே தொழில் தொடங்குகிறேன் பேர்வழி என்று சொல்லி அமெரிக்காவிலிருந்து மூட்டை முடிச்சையெல்லாம் கட்டிக்கொண்டு இந்தியாவுக்கு வந்தாகிவிட்டது. எனது தவறான முடிவால் மறுபடியும் வேலைக்குப் போகவேண்டியதொரு அவசியத்தில் அது என்னைக் கொண்டுவந்து விட்டுவிட்டது. மீதமுள்ள காலத்தை இப்படியே கடத்திவிடுவதா? இல்லை துணிந்து இன்னொரு முயற்சி எடுத்துப் பார்ப்பதா என்ற மனப்போராட்டம் பல இரவுகள் என்னைத் தூங்கவிடாமல் செய்தன. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பதுபோல் அலுவல்சார்ந்த நேரம்போக மற்ற நேரங்களில் இதுகுறித்து ஹாக்கர் (hacker) வட்டாரத்தில் எந்த மாதிரியான முன்னெடுப்புகள், முன்னேற்றங்கள் நடைபெற்றுவருகின்றன என்பன பற்றிய செய்திகளைப் படித்துக்கொண்டே வந்தேன் .
இதற்கிடையில் நாங்கள் அமெரிக்காவில் பயன்படுத்திய பொருட்கள் துறைமுகத்தை வந்தடைந்திருந்தன. அவற்றை ஒவ்வொன்றாகப் பிரித்துப் பார்க்கையில் தொலைகாட்சிப் பெட்டியொன்று இடம்பெயர்கையில் சேதம் அடைந்திருப்பது தெரியவந்தது. நான் முறையாக காப்பீடு எடுத்திருந்ததால் அதற்கான நஷ்ட ஈட்டை முறைப்படி கோரியிருந்தேன். கிட்டத்தட்ட ஒரு மண்டலமாக திரும்பத் திரும்ப வெவ்வேறு தளங்களில் என் பிரச்னையைப் பற்றி விளக்கிச் சொல்லியும் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து சரியான பதில் வரவில்லை. அதனால் ஒரு கட்டத்தில் எரிச்சலுற்றேன்.
அமெரிக்காவில் கிட்டத்தட்ட 4 முன்னணி வாடிக்கையாளர் சேவை மையங்களை உருவாக்கிய நமக்கே இந்த கதி என்றால் ஒரு சாமானியனின் நிலை என்ன என்ற கேள்வி என்னைக் குடைந்தெடுத்தது. இதை இப்படியே விட்டால் சரிவராது என்று முடிவெடுத்த நான் விரக்தியின் உச்சத்தில் அயல்நாடுகளிலிருந்து தாயகம் திரும்பும் இந்தியர்களுக்கான வலைத்தளம் ஒன்றில் என் கசப்பான அனுபவத்தை விலாவாரியாக பதிவிட்டேன்.
இனி இதுபோன்று யாருக்குமே நடக்கக்கூடாது. இந்த நிறுவனத்திடம் காப்பீடு எடுத்தவர்கள் கவனமாக இருங்கள் என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டு இருந்தேன். அவ்வளவுதான், அடுத்த 24 மணி நேரத்தில் அந்தக் காப்பீட்டு நிறுவனத்தின் சர்வதேசத் தலைவர்வரை விஷயம் போய்ச் சேர அவரே முன்வந்து பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டிருந்தார். கூடிய விரைவில் என் நஷ்ட ஈட்டைப் பெற்றுத்தருவதாகவும் வாக்களித்திருந்தார்.
என் சிந்தனையில் இந்தச் சமையத்தில்தான் மின்னல் வெட்டியது. இனி வாடிக்கையாளர் சேவையில் சமூக வலைதளங்களின் பங்கு அளப்பெரியதாகப் போகிறது என்பது கண்கூடாகத் தெரிந்தது. இதுதான் நான் களத்தில் குதிக்கச் சரியான நேரம் என்பது என் சிற்றறிவிற்கு எட்டியிருந்தாலும், உள்ளூர ஒரு பயம் இருந்துகொண்டே இருந்தது. அப்போதுதான் that நீங்கள்ளாம் மதுரக்காரன்னா அப்போ நாங்க என்ன மலேஷியாக் காரனாடா? moment. அது என் வாழ்க்கையிலும் வந்தது. தொடர்ச்சியாக ஹாக்கர் செய்திகளைப்(hacker news) படித்துவந்த என் கண்ணில் ஜென்டெஸ்க் என்ற அமெரிக்க நிறுவனம் கிட்டத்தட்ட நான் கற்பனை செய்துவந்த அதே பாணியில்.
அதாவது பாரம்பரிய CRM ticketing சேவை முறையில் சமூக வலைதளங்களின் பின்னூட்டத்துடன் செயல்படும் ஒரு வாடிக்கையாளர் சேவையை பல நிறுவனங்களுக்கு வழங்கிவந்தது. தான் தனிக்காட்டு ராஜா என்பதால் தன்னைக் கேட்க ஆளில்லை என்று தன் சேவைக்கான ஊதியத்தை 5 மடங்காக அது உயர்தியிருந்தது. இந்த அநியாயத்தை தட்டிக்கேட்க யாருமே இல்லையா? என்ற வாடிக்கையாளர்களின் ஓலம் எனக்குள் இருந்த அண்ணாமலையைத் தட்டி எழுப்பிவிட்டது.
அதிரடியாகச் சில முடிவுகளை எடுத்தேன். முதலில் என் செயல்திட்டத்தை விவரித்தது Zoho நிறுவனத்தை தோற்றுவித்தவர்களுள் ஒருவரான, என் மானசீக குரு திரு. ஸ்ரீதர் வேம்பு (sridhar vembu) அவர்களிடம்தான். அவர் என் மீது அபார நம்பிக்கை வைத்து பல முக்கிய பொறுப்புகளை என்னிடம் ஒப்படைத்தவர்.
என் கனவுக்கு செயல்வடிவம் கொடுக்க அவரால்தான் முடியும் என்று நான் நம்பினேன். ஆனால் எதார்த்தம் வேறுமாதிரியாக இருந்தது. என்னை நம்பி முதலீடு செய்ய அவர் தயாராக இல்லை. வியாபாரத்தில் முதலீடு செய்வதைப் பொருத்தவரை அவருக்கென்று சில மாற்றுக்கருத்துகள் இருந்தன. தன் கனவுத் தொழிலைத் தொடங்க எத்தனிக்கும் எவரும் அதற்கான முதலீட்டைத் தானே ஈட்டியிருக்க வேண்டும் (bootstrapping) என்று அவர் தீர்க்கமாக நம்பினார்.
ஆனால் என் உள்ளுணர்வு வேறு விதத்தில் சிந்திக்க வைத்தது. தன் தொழிலுக்கான விதைநெல்லை தானே சம்பாதிப்பதற்கும், அதற்கான நல்லதொரு முதலீட்டாளரை அணுகுவதற்கும் ஆகாசத்திற்கும் பூமிக்கும் இடையிலான வித்தியாசம் இருக்கிறது. இன்னொன்று அது நம் மனநிலையையும் சார்ந்தது. நாம் ராஜாவாக ஆசைப்படுகிறோமா இல்லை சௌகர்யமாக, வசதியாக வேலை செய்ய விரும்புகிறோமா என்பதைப் பொருத்தது அது. சொந்த முதலீட்டில் தொழில் தொடங்குவது என்பது நெடுஞ்சாலையில் ஜட்கா வண்டியில் போவதுபோல. நாம் செயல்படுத்த நினைக்கும் அதே விஷயத்தை ஒரு முதலீட்டாளரின் துணையுடன் செயல்படுத்துபவர்கள் நமக்கு முன் அதைச் சாதித்துவிடுவார்கள்.
அதுபோக வியாபார யுக்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நாம் அதே அளவு அல்லது அதற்கும் மேலே முக்கியத்துவம்வாய்ந்த செயல்அதற்கு செயல்வடிவம் கொடுக்கும் விஷயத்தில் கொடுப்பதில்லை. சுயமாக முதலீட்டை அதற்கு ஈட்டும் முயற்சியில் ஏற்படும் அதிகப்படியான பளு நம் திட்டத்தை செயல்படுத்திலுள்ள வீரியத்தைக் குறைத்துவிடும். பணபலம் வாய்ந்தவர்களிடம் நாம் சரணாகதியடைய வேண்டிய சூழ்நிலையை அது உருவாக்கிவிடும்.
அதனால் முறையாக Zoho வின் எல்லாவிதமான நிர்வாகப் பொறுப்புகளிலிருந்தும் விலகிக்கொண்டு முழுமூச்சாக கோதாவில் குதிக்க நேரிட்டபோது என் ஆரம்ப நாட்களிலிருந்து எல்லா கட்டத்திலும் எனக்கு உறுதுணையாக இருந்த என் நண்பன் ஷானிடம் நிலைமையை விளக்கினேன். நான் மேலாண்மையியலில் கில்லாடி என்றால் அவன் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் சித்தன். என்னுடன் எப்போதும்போல் இப்போதும் கை கோர்க்க ஷான் சித்தமாகவே இருந்தான். நான் நீண்ட நாட்களாகவே நோட்டம் பார்த்துக்கொண்டிருந்த freshdesk.com என்ற domain நல்ல விலைக்கு விற்பனைக்கு வந்தது.
கீழ்க்கட்டளையில் ஒரு சிறிய அறையை வாடகைக்கு எடுத்து FreshDesk அலுவலகத்தை உருவாக்கினோம். மைக்ரோசாப்டின் பிட்ஸ்பார்க் போட்டியில் எங்கள் சேவைக்கான செயல்திட்டம் சிறந்ததாக இருந்ததனால் சிறந்த தொடக்கநிலை நிறுவனமாகத் (startup) தேர்ந்தெடுக்கப்பட்டது எங்கள் முதல் மில்லியன் டாலர் முதலீட்டை(funding) அவர்களிடமிருந்து பெற்றோம்.
அதனால் தொடங்கிய முதல் நாளே ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலிருந்த ஒரு நிறுவனம் எங்களது வாடிக்கையாளராக ஆனார்கள். தொடர்ந்து அயல்நாடுகளிலிருந்து வாடிக்கையாளர்கள் குவிந்தனர். முதல் 100 நாட்களில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நூறைத் தொட்டது. இந்த வளர்ச்சி விகிதத்தை bootstrapp செய்யும் ஒரு தனி நபரோ, நிறுவனமோ கற்பனைகூட செய்து பார்க்க முடியாது.
எங்களுக்கு டாலர்களிலும், பௌண்டிலும் வரும் கட்டணங்களை முறையாவும் சட்டரீதியாகவும் பெற எங்களுக்கு உடனடியாக ஒரு அமெரிக்க அலுவலகமும், வங்கிக்கணக்கும் தேவைப்பட்டது. இங்கு இருந்தபடியே நண்பர் ஒருவர் உதவியுடன் அதற்கான வேலைகளை பிரயானப்படாமலேயே குறைந்த செலவில், குறுகிய நேரத்தில் செய்து முடித்தோம். முக்கியமான கடிதங்களையும், கோப்புகளையும் பிரித்து ஸ்கேன் செய்து மின்னஞ்சலாக அனுப்பப்பெற்றோம்.படிப்படியாக முன்னேறி ப்ரெஷ்டெஸ்க 100 பேர்கொண்ட நிறுவனமாக வளர்ந்தது.
ஒரு ஓட்டலுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தின் ஒரு சிறுபகுதியை வாடகைக்கு எடுத்து பின் ஆட்கள் எண்ணிக்கை கூடக்கூட சுவர்களை இடித்து, இடித்து விசாலப் படுத்திக்கொண்டே வந்த நாங்கள் ஒரு கட்டத்தில் கிட்டத்தட்ட அதன் முழு இடத்தையும் ஆக்கிரமித்துக்கொண்டுவிட்டோம். அடுத்துள்ள சுவற்றை இடித்தால் பக்கத்தில் இருந்த அதித டெக்னாலஜிகாரர்கள் சண்டைக்கு வந்துவிடுவார்கள் என்பதால் தற்போதுள்ள பெருங்குடி mgr சாலைக்கு வந்தடைந்தோம். முடிந்தவரை எல்லோரையும் ஒரே கூரையின்கீழ் பணிபுரிய வைக்க வேண்டும் என்பது என் விருப்பம்.
இன்று உலகம் முழுக்க நாங்கள் 50000 வாடிக்கையாளர்களுக்கு எங்கள் சேவைகளை வழங்குகிறோம். 1Click, friilp என்ற இரு மென்பொருள் சேவை நிறுவனங்களை பிரஷ்டெஸ்குடன் இணைத்துள்ளோம்.
1click மூலம் உலகின் எந்த மூலையிலிருந்தும் வாடிக்கையாளர் எங்கள் சேவை அதிகாரியுடன் காணொளி மூலமாக, வீடியோ கான்பரன்ஸ் முறையில் தொடர்புகொண்டு தங்கள் தேவைகளைக் கூறலாம். இன்று ஒரு பொருள்\சேவையைப் பயன்படுத்திக் கொள்வதற்குமுன் அதை அளிக்கும்நிறுவனத்தின் நிறைகுறைகளைப் பற்றி கேட்டறிந்துகொள்ள இதற்குமுன் அந்த பொருள்\சேவையைப் பயன்படுத்தியவரின் அனுபவங்களை நேரடியாகக் கேட்டுத் தெரிந்துகொள்வதில் வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். friilp மூலம் அவர்களது இந்தத் தேவை பூர்த்தியாகும்.
சமீபத்தில் முடிவடைந்த காலாண்டின் இறுதியில் நாங்கள் ஈட்டியிருக்கும் மொத்த முதலீட்டின் கூட்டுத்தொகை 94 மில்லியன் டாலர். Google Capital, Tiger Global, Accel Partners உள்ளிட்ட பலர் எங்கள் முதளீட்டாளர்கள். உண்மையில் தேவைக்கு அதிகமாகவே எங்களிடம் நிதி உள்ளது. வளர்சிவிகிதத்திற்கு ஈடுகட்டி வருவாய் வரும் வரை முதலீடுகள் ஏறுமுகமாகத்தான் இருக்கும். ஆனால் பெருகிவரும் முதலீட்டாளர்களின் குறுக்கீடோ, அல்லது போட்டி நிறுவனங்களின் பெருக்கத்தாலோ Freshdesk கின் அன்றாட செயல்பாடுகளில் கலாச்சாரரீதியாக எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
நாங்கள் தொடர்ந்து அதே வீரியத்துடன் வளர்ந்துகொண்டே வருகிறோம். 15000 பேர் கொண்ட நிறுவனமாகயிருக்கும் பொழுதே Freshdesk தன் வளர்சிவரம்பை எட்டிவிட்டது என்று Saas தொழில்துறை வல்லுனர்கள் பலர் ஆரூடம் கூறினர்.
மைக்ரோசாப்ட் போன்ற பெருமுதலாளிகள் எங்களை விழுங்கி ஏப்பம் விட்டுவிடுவார்கள் என்று கற்பூரம் அடித்து அவர்கள் சத்தியம் செய்தனர். ஆனால் உண்மை என்னவெனில் ஒரு கட்டத்தில் எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்ய ஆசைப்பட்ட சிலர் இன்று எங்களிடம் பணிபுரிகிறார்கள்.
இந்தக் கூட்டத்தில் இளம் தொழில் முனைவோர்கள் பலர் இருக்கலாம். அவர்களுடன் என் வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்ட முக்கியமான பாடம் ஒன்றைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
என்றுமே நல்ல விலைக்கு விற்றுவிடலாம் என்ற எண்ணத்துடன் ஒரு நிறுவனத்தை உருவாக்க முயலாதீர்கள். உண்மையான ஆதரவாளர்கள் உங்களுடன் இணைந்து பயணிக்க எப்போதுமே தயாராக இருப்பார்கள். அது முதலீட்டாளராகவோ, அல்லது நல்ல பணியாளராகவோகூட இருக்கலாம்.
என் பேச்சைத் தொடர்ந்து இங்கே Freshdesk உள்ளிட்ட இன்னபிற. நிறுவனங்களின் பணியிடத் தேர்வுகள் நடைபெறவுள்ளன. அதற்குமுன் எங்கள் நிறுவனத்தின் பணிச்சூழலைப் பற்றி ஒரு சிறு விளக்கம். அன்னபூர்ணா என்ற பெண் எஞ்சினியரிங் பட்டதாரி என்பதைத் தாண்டி ஒரு திறமையான கதைசொல்லி அவர். நல்ல ஆங்கிலப்புலமை அவரிடமிருந்தது. அவரை முதலில் விற்பனைத்தொடர்புத் துறையில் பணியிலமர்த்தினோம்.
ஆனால் ஏதோ காரணத்தால் அவரால் அந்தப் பதவியில் பெரிதாகப் பிரகாசிக்க முடியவில்லை. அடுத்து அவரை Seo பிரிவிற்கு மாற்றினோம். நிலைமை இன்னும் மோசமானது. தனக்குப் பிடித்த ஒரு நிறுவனத்தில், அங்கு எல்லா வசதிவாய்புகளும் இருந்தும் நம்மால் முழுமையான பங்களிப்பை அளிக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்வால் அவர் உழன்றார். ஒரு நீண்ட கலந்துரையாடலுக்குப் பின் சோதனை முயற்சியாக வாடிக்கையாளர் சேவைப் பிரிவிற்கு மாற்றப்பட்டார். அதிசயக்கத்தக்க மாற்றம் நிகழ்ந்தது.
அண்ணபூர்ணவாகிய அனா எழுதிய தீர்க்கமான மடல்கள் பதட்ட நிலையில் இருந்த வாடிக்கையாளர்களுக்கு புத்துணர்வை ஊட்டியது. தங்கள் பிரதிநிதியாக ஒருவர் ப்ரெஷ்டெஸ்கில் இருந்து உடனுக்கு உடன் மிகையில்லாத சரியான தகவல்களை, விளக்கங்களை நமக்கு அளிக்கிறார் என்று அவரைப் பாராட்டினார்கள். இன்று வாடிக்கையாளர் சேவைப் பிரிவில் சேர்பவர்களுக்கு அனா ஒரு முன்மாதிரி.
நாங்கள் பணியிடங்களில் படிநிலைகளைக் கடைபிடிப்பதில்லை, இங்கே அரசியல் கிடையாது. உங்கள் வேலைப்பற்றிய மதிப்பீடுகளும், பின்னூட்டங்களும் உடனுக்குடன் வழங்கப்படும். அப்பரைசலின்பொழுது ஒருவர் தான் எத்தனை சதவிகிதம் ஊதியஉயர்வு பெற்றுள்ளோம் என்பதை மட்டுமே தெரிந்துகொள்ளும் ஒரே மனநிலையுடன் தான் வருவார்.
நாங்கள் ஒருவரைச் சேர்க்கும்பொழுது அவர்கள் ஏதாவது ஒரு விஷயத்திலாவது வாழ்க்கையில் பற்றுதலுடன் இருக்கிறார்களா, இக்கட்டான சூழ்நிலைகளைக் கடக்கும்பொழுது எப்படி அதை சமாளிக்கிறார்கள், அந்தச் சூழலில் நிதானத்தை இழக்காதிருக்கிறார்களா, அவர் எல்லாவற்றையும் கற்றுகொள்ளும் ஆர்வம் உள்ளவரா, ஒரு நல்ல கதைசொல்லியா, எப்படி அவர்கள் தங்கள் உரையாடல்களை சுவாரஸ்யமானதாக மாற்றக்கூடிய திறனுடையவர்களாக இருக்கிறார்கள்ள் என்றுதான் பார்ப்போம்.
மற்றபடி உங்கள் பட்டப்படிப்புகளோ, சான்றிதழ்களோ எங்களுக்கு எந்தவொரு முக்கியத்துவத்தையும் அளிக்காது. நாங்கள் ஒவ்வொரு பணியாளருக்கும் மகிழ்ச்சியான பணிச்சூழலை அமைத்துத் தருவதிலேயே அதிகபட்சக் கவனத்தை செலுத்துகிறோம். அதாவது தான் செய்யும் வேலை அவர்களுக்குத் தன்னிறைவை அளிக்கிறதா என்பதைப் பார்ப்போம். அந்த வேலை அவருக்கு சரிப்பட்டு வரவில்லையென்றால் நாங்கள் நல்ல நண்பர்களாகவே பிரிவோம்.
நீங்கள் எங்களைத் தவிர்த்து Oyo rooms, Orange scape உட்பட மற்ற எந்த நிறுவனத்திற்கு விண்ணப்பித்திருந்தாலும் உங்கள் எல்லோருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். ஏனென்றால் அவர்களும் எங்கள் வாடிக்கையாளர்கள்தான். அவர்கள் வளர்ந்தால் அவர்களுடன் சேர்ந்து நாங்களும் வளர்வோம். வாய்ப்புக்கு நன்றி.
திரளாக வந்திருந்த மாணவர்கள் டெண்டுல்கர் இரட்டை சதமடித்து விட்டு மட்டையை உயர்த்தினால் ஆர்ப்பரிப்பதுபோல் இடைவிடாது கரவொலி எழுப்பினர் அடுத்த சென்னை விமானத்தைப் பிடிக்கச் சிட்டாய்ப் பறந்தார் கிரீஷ் மாத்துருபூதம் (girish mathrubhootham) .
PLEASE READ ALSO: வெறும் 4 இலட்சம் ரூபாயில் தொடங்கப்பட்டு 15.5 பில்லியன் டாலர் நிறுவனமாகிய ப்ளிப்கார்டின் (FlipKart) வெற்றிக் கதை