ரசனையெனும் ஒரு புள்ளியில் : Gillette ன் சவரக்கத்தி சிந்தனை தோற்றம்
1850களில் ஆப்ரஹாம் லிங்கனுக்கு 11 வயது சிறுமி ஒருத்தி மடல் ஒன்றை வரைந்தாள். அது இப்படி ஆரம்பித்தது :
“மதிப்புக்குரிய ஆப்ரகாம் லிங்கன் (Abraham Lincoln) அவர்களே. நீங்கள் எவ்வளவு பெரிய பொறுப்பை வகிப்பவர். என் அப்பா எப்போதும் உங்கள் சாதனைகளை பட்டியலிட்டுப் பாராட்டி பேசிக் கொண்டே இருப்பார். என் அண்ணன்களில் சிலர் கூட உங்கள் ஆதரவாளர்கள் தான். ஆனால் எனக்கு உங்களிடம் ஒரு குறை எப்போதும் உண்டு. தங்கள் முகத்திற்கு தாடி வளர்த்தால் எடுப்பாக இருக்குமே. இவர் ஏன் தாடி வளர்க்காமல் இருக்கிறார் என்று நான் நினைப்பதுண்டு. அப்படி நீங்கள் தாடி வைத்தால் என் அம்மாவின் வயதை ஒத்த பெண்கள் கூட தங்கள் கணவன்மார்களிடம் உங்களுக்கு வாக்களிக்கும்படி வம்பு செய்வார்கள். உங்களுக்காக வக்காலத்து வாங்குவார்கள். நான் கூட என் மற்ற அண்ணன்களையும் தங்களுக்கே வாக்களிக்கச் சொல்லி நச்சரிப்பேன். இது உண்மை. உங்களுக்கு என் மடலைப் படிக்கவோ, அப்படியே படித்தாலும் அதற்குப் பதில் கடிதம் எழுதும் அளவுக்கு நேரம் ஒதுக்கவோ முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் என் வயதில் உங்களுக்கு ஒரு மகள் இருந்தால் என் அன்பை அவளோடு கடிதம் மூலம் பகிர்ந்துக் கொள்ள நான் விரும்புவேன். அவள் எனக்கு பதில் மடல் வரைந்தால் மகிழ்ச்சியடைவேன்.”
ஒரு செருப்பு தைப்பவரின் மகனாகப் பிறந்திருந்தாலும் லிங்கன் (Lincoln) அமெரிக்காவின் முதலாளித்துவ சித்தாந்தங்களில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவராக இருந்தார். ஒரு தனி மனிதனின் பொருளாதார வெற்றி (self-made-man) அந்த சமூகத்தில் உள்ள மற்ற தனி நபர்களையும் அதேபோல் அயராது உழைப்பதற்கு உந்தித் தள்ளும் என்று அவர் தீர்க்கமாக நம்பினார். அதுவரை இருந்த அமெரிக்க ஜனாதிபதிகள் எல்லாருமே வித விதமான கிருதாக்களும், முடி வெட்டும் கொண்டவர்களாகத் தோற்றமளித்தாலும் சுத்தமாக மீசை, தாடியை சவரம் செய்தவர்களாகவே காட்சி தர விரும்பியதால் லிங்கன் அந்த யோசனையை எளிதில் உதாசீனப்படுத்தியிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமிருந்தன. ஆனால் அந்த மடலிற்கு லிங்கன் என்ன பதில் அனுப்பினார். அந்தச் சிறுமியுடனான அவரின் சந்திப்பு இவை எல்லாமே வரலாறு. டொக்கு விழுந்த கன்னங்களை மறைப்பதற்கே அவதாரம் எடுத்தது போல் திருத்தமாக அவர் முகத்தில் பொருந்திவிட்ட அந்த தாடி காலப்போக்கில் அவரது அடையாளமாகவே மாறிப்போனது. இந்த தாடிக்கு எதிரான ஒரு விஷயத்தை இப்போது பார்ப்போம்.
1894 கிரவுன் கார்க் & சீல் கம்பெனி ( Crown Cork & Seal Company) எனும் சோடா தயாரிக்கும் நிறுவனத்தில் விற்பனையாளராக வேலை பார்த்துக்கொண்டே தன் கனவு நகரம் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றியும் முதலாளித்துவ போக்கை எதிர்த்தும் ஒரு புத்தகத்தை எழுதிக்கொண்டிருந்தார் அந்த இளைஞர். ‘Human Drift’ என்ற அந்தப் புத்தகத்தில் அவர் குறிப்பிட்டிருந்த ‘Metropolis’ என்ற கனவு நகரம் நயாகரா நீர்வீழ்ச்சியின் அருகே அமைய வேண்டும். அதிலும் தேன்கூடுபோல அறுங்கோண வடிவில் அங்குள்ள கட்டிடங்கள் அமைய வேண்டும். அப்பொழுது தான் மையமாக உள்ள ஒவ்வொரு குடியிருப்புக் கட்டிடத்தைச் சுற்றியும் ஒரு கல்வி வளாகமும், கேளிக்கை விடுதியும், மருத்துவமனையும், சந்தையும் ஒரே தொலைவில் அமைவதற்கான வாய்ப்பு ஏற்படும். அந்த நகரத்தின் ஒட்டுமொத்த மின்சாரத் தேவையையும் நீர்வீழ்ச்சியிலிருந்து மின்சக்தி உற்பத்தி செய்யும் ஆலைகளை அமைத்துப் பூர்த்தி செய்து கொள்ளலாம். அங்கு எல்லாவிதமான நுகர்வுப்பொருள்களும் ஒரே கூரையின் கீழ் ஒரே தர அடையாளம் கொண்டவைகளாகத் தயாரிக்கப்படும். உதாரணத்திற்கு ஒரு சவரக்கத்தி தேவையென்றால்கூட எல்லோரும் முதல் போட்டு ஒரே ப்ராண்ட் சவரக்கத்தியை உருவாக்கிக்கொள்வார்கள்…இத்யாதி..இத்யாதி…
அது வெறும் கனவு அல்ல. ஒட்டுமொத்த மானுட சமூகத்தின் வாழ்வியல் முறையையே மாற்றி அமைக்கவேண்டும் என்ற அவரது வேட்கையின் வெளிப்பாடு அது.
கிங் காம்ப் ஜில்லட் ( King Camp Gillette). என்னவொரு வசீகரமான பெயர். பெயரளவில் ராஜாவாக இருந்தாலும் ஜில்லட் பொதுவுடைமை சித்தாந்தத்தில் நாட்டம் கொண்டவராக இருந்தார். பிறப்பால் பிரிட்டிஷரான இவர் வளர்ந்ததென்னவோ ஒரு அமெரிக்கரைப் போலத் தான். இவரது அப்பா, அண்ணன்மார்கள், மற்றும் சில உறவினர்கள் எல்லோரும் ஏதோ ஒரு சாதனத்திற்குத் தங்கள் பெயரில் உரிமம் பெற்று அந்தப் பொருளைப் பெருமளவில் உற்பத்தி செய்து அமெரிக்கா முழுவதும் விற்று வந்தனர். அவர்களின் தாக்கம் நம் ஜில்லட்டின் இயல்பில் இல்லாமல் போகுமா என்ன?
Please Read Also: தொழில் முனைவோர்கள் பிற தொழில் செய்வோரிடம் கற்க வேண்டிய 5 திறமைகள்
இவர் வேலை பார்த்த பால்டிமோர் சோடா கம்பெனியில் தான் கிரவுன் என்பவரும் வேலை செய்து வந்தார். அவர் தான் முதல் முதலில் ஒருமுறை உபயோகித்து விட்டு தூக்கியெறியக் கூடிய மூடிகளை வடிவமைத்தார். இதனால் குறைந்த அடக்க விலையில் அதன் உற்பத்தி பன்மடங்காகப் பெருகியது. நாளடைவில் அது நிறுவத்தின் அடையாளமாகவே மாறியதால் பால்டிமோர் சோடா கம்பெனி அவர் ஞாபகமாகக் கிரவுன் சோடா கம்பெனி என்று அழைக்கப்பட்டது.
அதைப் பார்த்துதான் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் சுழற்சியை உட்புகுத்தி நாமும் புரட்சி செய்ய வேண்டும் என்ற இலட்சியம் ஜில்லட்குள் (gillette) வலுப்பெறத் தொடங்கியது.
கனவா, இலட்சியமா? எதை நோக்கித் தீவிரமாகச் செயல்படுவது? என்ற கேள்வி தன் ஆழ்மனதில் எதிரொலிக்க தன் கழுத்தில் தானே கத்தியை வைத்தபடி கண்ணாடியையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார் கிங்.
அந்நிலையில் அவரை யாராவது பார்த்திருந்தால் அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகச் சந்தேகித்து கூச்சல் எழுப்பியிருப்பார்கள். ஏனென்றால் அப்போதெல்லாம் ஆண்கள் நாவிதர் உதவி இல்லாமல் சவரம் (shave) செய்துகொள்வது என்பது கற்பனைகூட செய்து பார்த்திருக்க முடியாத விஷயம். காரணம் கத்தியைக் கூர் தீட்டும் வேலை என்பதே பெரும் வேலையாக இருந்தது அப்போது. தவிர அப்போதிருந்த சவரக் கத்தியின் கைப்பிடி ஒருவர் சுயமாக சிரைத்துக்கொள்ள ஏதுவானதாக இருக்கவில்லை.
நாவிதர்கள் ஏறத்தாழ மருத்துவர்களுக்கு சம அந்தஸ்து உள்ளவர்களாக மதிக்கப்பட்ட காலமெல்லாம் உண்டு.
அப்போது ஜில்லட்டின் சிந்தனையில் மின்னல் ஒன்று வெட்டியது. கத்தியை செங்குத்தாகப் பிடிப்பதற்கு வசதியாகக் கைப்பிடி அமைந்திருந்தால ஒருவர் சுயமாக சவரம் செய்துகொள்ள வசதியாக இருக்கும்என்று அவர் நினைத்தார். அப்படி சில சோதனை முயற்சிகளும் நடந்து கொண்டுதானிருந்தன. ஆனால் துருப்பிடிக்காமல், இருபுறமும் கூரான, மெல்லிசான , ஒருமுறை உபயோகித்தபின் தூக்கி எறியக்கூடிய ஒரு கத்தியைக் கண்டுபிடித்துவிட்டால் மானுட வரலாற்றில் சுய சவரம் செய்துகொள்ளும் முதல் கத்தி தயார். இதுதான் ஜில்லட் (gillette) செய்த வேறொரு முறை சோடா மூடிப் புரட்சி .
“அலாண்டா! நமக்கான ஆஸ்தி, அந்தஸ்து, அடையாளம் எல்லாம் இப்போது என் கண் முன்னால் தெரிகிறது. ஜில்லட் சவரக் கத்தி” என்று உடனடியாக தன் மனைவிக்குக் கடிதம் தீட்டினார் ஜில்லட். அப்படியே தாடியோடு கிளம்பி அருகில் இருந்த வன்பொருள்(hardware) கடைக்குச் சென்றார். கையில் உள்ள எல்லாப் பணத்தையும் கொடுத்து கடிகார உற்பத்தியின்போது உபயோகிக்கப்படும் எஃகு அரைக்கச்சுகளை வாங்கினார்.
அடுத்த 7 வருட அயராத உழைப்பிற்குப் பின் ஜில்லட்டின் இலட்சியம் செயல்வடிவம் பெற்றது. ஜில்லட் என்ற பெயரிலேயே தன் சவரக்கத்திக்கு உரிமம் வாங்கினார். முதலில் நஷ்டத்தில் விற்றவர் பின் தொடர் வாடிக்கையாளர்களால் லாபம் பார்த்தார். அங்கிருந்துதான் லாபகரமானதொரு வியாபார உத்தியானது முதல் முறையாக உலகிற்கு அறிமுகம் ஆனது. அதாவது முதலில் ரேசரை (razors) அடக்கவிலையை விடக் குறைவான விலைக்கு விற்பது. பின்பு அதன் பயன்பாட்டால் திருப்தியடைந்த வாடிக்கையாளர் சவரக்கத்தியை (Blade) அடுத்தடுத்த முறைகள் வாங்க வைப்பதன் மூலம் அந்த நஷ்டத்தை ஈடுசெய்து லாபப் பாதையில் பயணிப்பது.
இந்த உத்திதான் (Strategy) இன்று பிரிண்டர் போன்ற வன்பொருள் வியாபரம் தொடங்கி மென்பொருள் விற்பனைவரை உபயோகிக்கப்படுகிறது. மாறிவரும் சூழல் கண்டு நாவிதர்கள் துடித்துப் போனார்கள். முன்பெல்லாம் வாரம் இருமுறை புதன் மற்றும் சனிக்கிழமைகளில் சுற்றுவட்டாரத்தில் உள்ள எல்லா ஆண்களும் சவரம் செயதுகொள்ள அவர்களைத் தேடிக் கட்டாயம் வருவார்கள். ஆனால் இப்போது மக்கள் ஜில்லட்டின் சவரக்கத்தி (Gillette Blades) இல்லாத கடையை மொத்தமாகப் புறக்கணித்தார்கள். சுயமாக சவரம் செய்துப் பழகியவர்கள் அது தந்த சுகானுபவத்தை வெகுவாக அனுபவித்தார்கள். அந்த அனுபவத்தால் மிகவும் பரவசம் அடைந்தார்கள். இது வில்கின்சன்ஸன் ஸ்வோர்ட் (Wilkinson Sword) போன்ற பாரம்பரியமான போர்வாள்கள் முதல் சவர பிளேடுகள் வரை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு பெரு நஷ்டத்தை உண்டாக்கியது. பல சரக்குக் கடைகளும் அதிக அளவில் ஜில்லட் ப்ளேடுகளையே இருப்பு வைத்துக் கொள்ளத் தொடங்கினர்.
இந்த வியாபார உத்தி ‘loss leader’ என்று பெயர் பெற்றது. ஒரு பெட்டிக்கடையில் வாழைத்தாரை நன்றாகக் கண்ணில்படும் படி தொங்க விடுவது போல், ஒரு புத்தகக்கடையில் பொன்னியின் செல்வனை கண்ணில்படும் படி காட்சிப்படுத்துவது போல் ஜில்லட் கத்திகளை முன்னிறுத்திக் காட்சிப்படுத்தி பெருமளவில் சந்தைப்படுத்தினர். குறைந்த லாபமே ஒரு வாழைப்பழத்தை விற்பதால் கடைக்காரருக்குக் கிடைத்தாலும், அதை வாங்க வருபவர் வேறு ஏதோ ஒரு பொருளையும் அத்துடன் சேர்த்து வாங்குவார் என்ற உளவிவல் ரீதியான சிந்தனை அங்கே வெற்றிபெற்றது.
போருக்குச் சென்ற வீரர்களுக்குத் தேவையான சவரக்கத்திகளை அரசாங்கம் ஜில்லட் நிறுவனத்திடமிருந்து மட்டுமே வாங்கித் தந்தது. போர்முனையில் பிற நாட்டு வீரர்களுக்கும் ஜில்லட் சவரக்கத்தி (blades) பரிச்சயம் ஆனது. அதனால் வெளிநாடுகளிருந்தும் ஆர்டர்கள் குவிந்தன. ஆங்கிலம் பேச்சு வழக்கில் இல்லாத நாடுகளில் கூட அந்த முகம் படம் போட்ட சவரக்கத்தி ஒரு பாக்கெட் கொடுங்க என்று கேட்டு வாங்கிச் சென்றனர். ஆம் ஜில்லட்டின் முத்திரை-வியாபாரச் சின்னம் எல்லாமே சாட்சாத் அவருடைய முகமேதான். சில பொது இடங்களில் அவரைப் பார்த்தவர்கள் இவர் தானே அவர் என்று வியந்து பேசினர்.
நார்சிஸம் (Narcissm) பெயர்போன முஸோலினிகூட இது மானுட சமூகத்தின் மிகப்பெரிய அறிவியல் கண்டுபிடிப்பு இது என்று ஜில்லட்டைப் பாராட்டினார். அவர் தங்கத்தாலான பிரத்யேக ஜில்லட் சவரக் கத்தியைப் பயன்படுத்தினார். கிங் காம்ப் ஜில்லட் கனவுகண்ட ஐரோப்பிய சந்தையும் இப்போது அவர் கைவசப்பட்டுவிட்டது. மானுட சமூகத்தின் வாழ்க்கைமுறையயே மாற்றி அமைக்கவேண்டும் என்று பெருங்கனவு கொண்டிருந்தவர் இப்போது வியாபாரத்திலும் வெற்றியாளராக விளங்கினார்.
இந்த சமயத்தில்தான் 19ஆம் நூற்றாண்டின் கனவுக்கன்னியான மர்லின் மன்றோ (Marilyn Monroe) ஒரு பரபரப்பான வாசகத்தைக் கூறினார்.
“ கடந்த நூற்றாண்டு மனிதர்களில் என்னை வெகுவாகக் கவர்ந்த அமெரிக்க ஆண்மகன் ஆப்ரகாம் லிங்கன் (Abraham Lincoln) தான். அவரைப் போலவே குறுகலான தாடைகள் கொண்டவராக இருந்ததாலேயே நான் ஆர்த்தர் மில்லர் என்பவரை விரும்பினேன். அவரையே இப்போது மணம் முடிக்கவும் போகிறேன்”
அந்தக் காலகட்டத்தில் உயர்குடி ஆண்களும், பெரிய பதவிகளை வகித்தவர்களும் பெரும்பாலும் மொழுமொழுவென்று தினமும் சவரம் செய்துகொண்டு மிடுக்காக இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகவே அந்தத் தலைமுறையினரின் பொதுபுத்தியில் பதிந்துபோயிருந்தது. லிங்கனைப் போல் குறுகலான தாடைகொண்ட மில்லரும் தாடி வைக்கவில்லை. 1900 களில் எடுத்த வெவ்வேறு மனிதர்களின் ஏனைய பழைய கருப்பு-வெள்ளை புகைப்படங்களைப் பார்த்தால் இந்த ஒற்றுமை புலப்படும்.
இன்று உலகின் சவரக்கத்தியின் 60 விழுக்காடு சந்தைப் பங்கு ஜில்லட்டினுடையது.
இப்படியாக ஒரு தலைமுறையின் மையக் கருத்தோட்டத்தை யார் நிர்ணயிக்கிறார்கள்? இதுபோன்ற ஆளுமைகளின் தோற்றத்திலுள்ள வசீகரத்தன்மை இது தான் என்பதை வரையறுத்தது யார்? அப்படியே சற்று காலச் சக்கரத்தை முன்னோக்கிச் சுழற்றினால் 17ஆம் நூற்றாண்டு வரையுள்ள உயரிய சிந்தனையாளர்கள், மற்றும் பராக்கிரமசாலிகளின் சிலைகள் இவையெல்லாமே லிங்கனைப்போல் தாடியுடையனவாகவே உள்ளன.
அப்படியென்றால் இடைப்பட்ட காலத்தில் நடந்தது என்ன? இவர்களின் சமகாலத்தில் அமெரிக்கர்கள், ஐரோப்பியர்கள், ஆசியர்கள், ஆப்ரிக்கர்கள் எல்லாம் எப்படி இருந்தார்கள்? இந்தியர்கள் இந்தத் துறையில் உள்ள போட்டியை நிகழ்காலத்தில் எப்படி எதிர்கொள்ள வேண்டும்?. அயல்நட்டாவரிடம் உரிமம் உள்ள ஒரு பொருளை இந்தியர்கள் சார்ந்து இருப்பதால் ஏற்படும் பொருளாதாரப் பின்னடைவுகளை அவர்கள் எப்படி எதிர்க்கொள்ள வேண்டும்?
ரசனை எனும் ஒரு புள்ளியில் நம் அடையாளத்தை நாம் எப்படி மீட்டெடுப்பது? இவற்றையெல்லாம் பற்றி அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.
Please Read Also: உங்கள் தொழிலை தொடங்கும் முன் தெரிந்துகொள்ள வேண்டிய 10 விசயங்கள்