சரக்கு மற்றும் சேவை வரி (GST) விதிப்பு : வரமா? சாபமா?
ஒட்டு மொத்தமாக பொதுமக்களை மொட்டையடிக்கத் தான் ஜி.எஸ்.டி. (GST) வரி விதிப்பு வருகிறது என்பது தவறான தகவல். நம்பாதீர்கள்.
நுகர்வோராக நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும்.. அது குண்டூசியாக இருந்தாலும். அதற்காக வரி நாம் செலுத்தி விடுகிறோம். ஆனால் அந்த வரி யாருக்குச் செல்ல வேண்டும்? அரசாங்கத்துக்கு!
நம்மிடம் வரியையும் சேர்த்து வசூலிப்பவர்கள் அந்த வரியை அரசாங்கத்திடம் செலுத்துகிறார்களா?
ஒரு பொருளின் தயாரிப்பாளரிடமிருந்து (manufacturer).. மொத்த விநியோகஸ்தருக்கு (wholesaler) வந்து.. அங்கிருந்து சில்லரை வணிகர்களுக்கு (retailer) வந்து.. அங்கிருந்து நாம் பொருளை வாங்குகிறோம்.
இதில் தயாரிப்புச் செலவு (production cost), மூலப் பொருட்கள் விலை (raw material cost), சேவை அனைத்தும் சேர்த்து தயாரிப்பாளர் தனது லாபத்தையும் சேர்த்து விலை வைத்து மொத்த வியாபாரியிடம் கொடுக்கிறார். வரி உண்டு. அப்படியே சில்லரை வணிகர் வரை அது வருகிறது.
ஒவ்வொரு நிலையிலும் குறைந்தது 20% லாபம் வைக்கப்படுகிறது.
இவர்கள் ஒவ்வொரு நிலையில் செலுத்தும் வரியையும் உள்ளீட்டு வரி வரவாக மீளப்பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால் உபயோகிப்பாளராக, நுகர்வோராகிய நாம் அப்படி வரி மீளப் பெறல் செய்ய முடியாது. ஆகவே நுகர்வோராகிய நாம் தான் உண்மையில் வரி செலுத்துபவர்கள்.
சேவையைப் பெறுவதாக இருந்தாலும் அதற்கும் சேவை வரி என்றெல்லாம் செலுத்தி வந்திருக்கிறோம்.
இப்போது சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax) அறிமுகப்படுத்துவதால் நுகர்வோராகிய நமக்கு இதுவரை செலுத்திய பன்முறை வரிகள் பலவும் ஒன்றிணைக்கப்பட்டு ஒரே வரியாகிறது.
கேரளாவுக்குள் செல்லும் முன் வாளையார் செக் போஸ்டில் நாட்கணக்கில் காத்து நிற்க வேண்டிய சரக்கு லாரிகள் நேற்று நள்ளிரவிலிருந்து அந்தப் பிரச்னை இன்றி ஆர்.டி.ஓ. லைசன்ஸ்களுக்காக மட்டும் காத்திருந்தால் போதும்.
ஏற்கனவே மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் பர்மிட் இருந்தால் உடனடியாகக் கடந்து விடலாம். ஒரு பொருள் ஒரு மாநிலத்திலிருந்து வேறு மாநிலத்திற்கு எடுத்துச் செல்லப்படும் போது இப்படி பல நாட்கள் காத்திருந்தால், அந்தக் காத்திருத்தல் கட்டணங்களும் கூட நுகர்வோராகிய நம் தலையில் தான் விழுந்து கொண்டிருந்தது.
வாளையார் செக்போஸ்ட் காத்திருப்பு பெரும் பிரச்னையாக பல்லாண்டு காலம் இருந்து வந்தது. இதோ..அந்தப்பிரச்னை இனி இல்லை. நாட்டிலேயே மாநிலங்களுக்கிடையேயான எல்லை கடப்பதில் அதிகக் காத்திருப்பு வாளையாரில் தான் என்று பெரும் குற்றச்சாட்டு எழுந்து பல தடவை லாரி ஓட்டுநர்கள் உள்பட பலர் ஸ்ட்ரைக் எல்லாம் செய்திருக்கிறார்கள்.
‘ஒரே நாடு ஒரே வரி’ என்பதால் இனி அந்தப் பிரச்னை இல்லை.
அன்றாடப் பொருட்கள் விலையில் நுகர்வோராக நமக்கு பெரிய அளவில் மாற்றம் வராது. மறைமுகமாக பல வரிகளைச் செலுத்திக் கொண்டிருந்த நாம் இப்போது அதிகபட்சம் 28% வரை வரி செலுத்தப் போகிறோம். பல உணவு பொருட்களுக்கு வரி விலக்கு இருக்கிறது. சிலவற்றுக்கு 5% தான். ஏற்கனவே மறைமுகமாக 35% எல்லாம் கூட வரி செலுத்தியிருக்கிறோம்.
ஆடம்பரப் பொருட்களுக்கு கொஞ்சம் வரி கூடுதல் வரலாம். பெட்ரோல், டீசல் போன்றவற்றையும் இதில் சேர்த்திருக்க வேண்டும். சேர்க்காதது அயோக்கியத்தனம் தான். அதே போல தங்கம் மற்றும் வைரம் இந்த வரிவிதிப்பு வகைகளில் வராமல் தனியே 3% மற்றும் 0.25% என்று கணக்கிடப்படுகிறது.
ஆனால் 28% வரியுமே உயர்வு என்று எண்ணக் கூடாது. ஏற்கனவே 15% வரி செலுத்திக் கொண்டிருந்த தொலைத்தொடர்பு சேவைகளுக்கு 18% வரி.
வரி விதிப்பில் மொத்தமே 5 வகை :
1. வரியற்றவை
2. 5%
3. 12%
4. 18%
5. 28%
இதில் ஒரே மாநிலத்துக்குள் தயாரித்து, விற்பனையாகும் பொருட்களுக்கு மாநில வரி (SGST), மத்திய வரி (CGST) என்று சரி பங்காக மாநில, மத்திய அரசுகளுக்குச் செல்லும்.
இரண்டு மாநிலங்களுக்கிடையேயான பரிவர்த்தனைகள் மத்திய வரி, ஒருங்கிணைந்த வரி (IGST) என்று இரண்டாகப் பிரித்துக் கொள்ளப்படும். இந்த ஒருங்கிணைந்த வரி, பிறகு சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும்.
இதில் குறிப்பிடத்தக்க அம்சம் இத்தனை காலம் எத்தனை வருமானம் வந்தாலும் கணக்கு காட்டாமலேயே ஜல்லி அடித்து நம்மிடமிருந்து வரியையும் சேர்த்து வசூலித்துக் கொண்டிருந்த வியாபாரிகள் இனிமேல் தொடர்ந்து அப்படிச் செய்ய முடியாது. கணக்கு காட்டியாக வேண்டும்.
அவர்கள் காட்டவில்லையென்றாலும் அவர்களுக்கு பொருள் வழங்கும் மொத்த வணிகர்களோ, தயாரிப்பாளர்களோ கணக்கு காட்ட வேண்டும். எந்த வணிகருக்கு வழங்கினார்கள் என்ற விபரத்தினைத் தாக்கல் செய்யும் போது சம்பந்தப்பட்ட சில்லரை வணிகரின் கணக்கில் அது தானாகவே பதியப்பட்டுவிடும்.
ஆண்டுக்கு 20 லட்சத்திற்கு மேல் வர்த்தகம் செய்பவர்கள் கட்டாயம் வரித்தாக்கல் செய்ய நேரிடும்.
எல்லாமே ஆன்லைனில் இணைய தளத்தில் 15 இலக்க GSTIN எனப்படும் தனி அடையாள எண்ணுடன் இணைக்கப்பட்டு சமர்ப்பிக்கப்படுவதால், மொத்த விற்பனையாளர் விட்டாலும், சில்லரை வணிகர் யாரிடமிருந்து வாங்கினோம் என்று குறிப்பிட்டால் அது மொத்த விற்பனையாளரின் கணக்கில் காட்டும். (எதுவும் தவறுதலாக இருந்தால் கோரிக்கை வைத்து திருத்தம் செய்து கொள்ளலாம்). ஆனால் கணக்கில் காட்டாமல் விட முடியாது. 15 இலக்க தனி அடையாள எண் பான் கார்டுடன் இணைக்கப்படும்.
ஒரு நபரின் பான் கார்டுடன் எத்தனை வியாபாரங்கள் இணைக்கப்பட்டாலும் அத்தனையும் சேர்த்து 20 லட்ச மொத்த வருவாயைக் காட்டினால் அவர் GST-யில் பதிவு செய்து மாதந்தோறும் கணக்குகளைச் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகி விடும்.
இதனால் அரசுக்கு வசூலிக்கப்படும் வரிகள் சரியாகப் போய்ச் சேரும். ஆடிட்டர்களின் பம்மாத்துகள் குறையும். இந்த புதிய வரிவிதிப்பினால் மாநில அரசின் உரிமைகள் பறிபோகிறது என்கிறார்கள். ஆனால் அதுவும் முழு உண்மையில்லை. முன்னாள் முதல்வர் ஜெ. அவர்கள் எதிர்க்குரல் எழுப்பி பல மாறுதல்களைக் கோரி அவை ஏற்றுக் கொள்ளப்பட்டன.
ஒவ்வொன்றையும் தனித்தனியே எடுத்துப் பார்த்து அதில் பாதிப்புகளை மட்டும் பட்டியலிட்டால் எப்படி?
ஒட்டு மொத்தத்தையும் பார்த்து அதில் லாபமா, நஷ்டமா என்று தானே பார்க்க வேண்டும். தவிர அரசாங்கச் சட்டமே அவ்வப்போது மாறுதலுக்குட்படும் போது, வரி விதிப்பில் வரும் சிக்கல்களை அவ்வப்போது பேசி சரி செய்து கொள்ள முடியுமே! திருத்தம் செய்து கொள்ள முடியுமே!
சரி… இதில் தில்லுமுல்லு செய்ய முடியாதா?
தாராளமாகச் செய்யலாம். ஏன் முடியாது? ஆனால் எல்லோராலும் செய்ய முடியும் என்று சொல்வதற்கில்லை. ஒட்டு மொத்தமாக வரவே வராத வரி வருவாய் பல சில்லரை வணிகர்களிடமிருந்து இப்போது வர ஆரம்பித்து விடும் அல்லவா?
எனவே நுகர்வோராக நமக்கு இதில் நாம் செலுத்திய வரி மோசடி செய்யப்படாமல் அரசுக்குச் செல்கிறது என்ற திருப்தி கிடைக்கும்.
இது வரை வரி (Tax) என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்த பலருக்கும் வரி என்றால் என்ன என்று தெரியவருவதே நல்ல விஷயம் தான்.
‘அவன் செலுத்தினானா, இவன் செலுத்தினானா’ என்றெல்லாம் அப்புறம் பஞ்சாயத்து வைத்துக் கொள்வோம்.
நாம் ஒவ்வொருவரும் வரி செலுத்துவோம். நாம் (ஏற்கனவே) மறைமுகமாக செலுத்திக் கொண்டிருக்கும் பொருட்கள், சேவைகள் மீதான வரி முறைப்படி அரசுக்குச் சேர வேண்டியது. அது சேருகிறது என்பதை உறுதி செய்து கொள்வோம்.
வரின்னா எத்தனை லைன் அப்படீன்னு இத்தனை நாளா கேள்வி கேட்டுக்கிட்டிருந்தவங்க தான் இதற்குப் பயப்படணும், குறை சொல்லணும். நாம ஏன்?
அனைத்து வர்த்தகர்களும் பதிவு செய்தாக வேண்டிய கட்டாயத்தில் உட்பட்டு விட்டார்கள். வியாபாரம் செய்ய வேண்டுமல்லவா? தயாரிப்பாளர்களும், மொத்த விற்பனையாளர்களும் எத்தனை பதிவு செய்யாத வியாபாரிகளுக்கு சப்ளை செய்வார்கள்? ஈபே உள்ளிட்ட இணைய தளங்களில் விற்பனை செய்யும் தனி நபர்களும் இனி பதிவு செய்தால் மட்டுமே விற்பனை செய்ய முடியும்.
இந்த மாற்றம் இன்றைக்கே 100% அமலாகி இன்றைக்கே 100% பலன் தரும் என்று நம்புவது சரியல்ல.
முக்கியமான விஷயம்.. GST அப்படீன்னு டேக்ஸ் (Tax) சேர்த்து பில் தந்தார்கள் என்றால் அதில் 15 இலக்க GSTIN எண் இருக்கிறதா என்பதைப் பார்த்து விட்டு வாங்கவும்.
முதல் சிலபல நாட்களுக்கு வரி விதிப்பு முறைகளில் சிக்கல்கள், பிழைகள், திருத்தங்கள் வரலாம். புதிதாக நடைமுறைப்படுத்தும் அனைத்திலும் அது வரத்தான் செய்யும். அரசாங்கமே சிலவற்றை கூடுதல் வரிவிதிப்பு செய்திருக்கலாம். நடைமுறையில் அவை சரிபடுத்தப்படும். இன்றைக்கே பொங்க வேண்டாம்.
நான் பொருளாதார மேதையல்ல. வாசிப்பளவில் பலவற்றை ஒப்பிட்டு எனக்குத் தெரிந்த அளவில் விஷயம் பகிர்ந்திருக்கிறேன். இதில் தவறு எதுவுமிருந்தால் தெரியப்படுத்தினால் நான் திருத்திக் கொள்வேன். அதில் எனக்கு எந்தப் பிரச்னையுமில்லை. ஆனால் எதையுமே படிக்காமல், “அதெல்லாம் முடியாது. எல்லாம் தப்பு” என்று சொன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.
இதெல்லாம் செய்து விட்டு நாம் அரசாங்கத்தைக் கேள்வி கேட்கலாம். “வரியை வாங்கிட்டு என்னங்கய்யா கிழிச்சீங்க?” என்று.
நன்றி :
கட்டுரையாளர் : திரு. மாயவரத்தான் கி ரமேஷ்குமார்
Disclaimer: This is an Contributor post from Mr.mayavarathaan ( seythigal.in) . The statements, opinions and data contained in these publications are solely those of the contributors and not of TamilEntrepreneur.com.
Please Read This Article :
வாடிக்கையாளர்களை வாங்க வைக்கக் கூடிய வியாபாரிகளின் சில வியூகங்கள்