உலகத் தமிழ் தொழில்முனைவோர்கள் சங்கமிக்கும் மாநாடு : TAMIL ENTREPRENEURS FORUM (TEFCON 2017) அமெரிக்காவில்
அமெரிக்காவிலுள்ள ஏராளமான தமிழ்ச்சங்கங்களின் ஒன்றியமாய்த் திகழ்வது, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையாகும் (Federation of Tamil Sangams North America (FeTNA)). வட அமெரிக்காவிலிருக்கிற அந்தப்பகுதி தமிழ்ச்சங்கத்தோடு இணைந்து, ஆண்டுதோறும் அமெரிக்கத் தமிழர் விழாவாகத் (FeTNA Annual Convention 2017) தன் ஆண்டு விழாவினைக் கொண்டாடி வருகிறது பேரவை.
அதன் தொடர்ச்சியாக, மின்னசோட்டா தமிழ்ச்சங்கமும் (Minnesota Tamil Sangam), பேரவையுமிணைந்து இவ்வாண்டுக்கான விழாவினை எதிர்வரும் ஜூலை 1, 2 ஆகிய நாட்களில் மினியாபொலிசு நகரில் (Minneapolis Convention Center) நடத்தவிருக்கிறது.
இத்திருவிழாவின் ஒரு அங்கமாக இடம் பெறுவதுதான் அமெரிக்கத் தமிழ் தொழில்முனைவோர் மாநாடு (TAMIL ENTREPRENEURS FORUM (TEFCON 2017)).
TAMIL ENTREPRENEURS FORUM (TEFCON 2017) :
கடந்த ஆண்டுகளில் மிக வெற்றிகரமாக நடந்தேறிய அமெரிக்கத் தமிழ் தொழில்முனைவோர் மாநாடு (TEFCON 2017), ஜூலை 1 தேதி, மினியாபொலிசு மாநாட்டு அரங்கில், இணைநிகழ்ச்சியாக துணையரங்கில் முழுநாள் நிகழ்ச்சியாக நடக்கவிருக்கிறது.
இம்மாநாட்டில் தொழில்முனைவோர், வர்த்தக முன்னோடிகள், முதலீட்டாளர்கள், நிர்வாகவியல் வல்லுநர்கள், பொறியியல் வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், கல்வியாளர், சாதனை புரிந்தவர்கள் என பலரும் கலந்து கொள்ளவிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நடைப்பெறும் நிகழ்வுகள் :
இந்த ஆண்டுக்கான, தமிழ் முனைவோர் மாநாட்டில் (TEFCON 2017) கல்வியியற்துறை, சுகாதாரத்துறை, மருத்துவத்துறை, எரிபொருட்துறை, புத்தாக்க மேம்பாட்டுத்துறை முதலானவற்றின் சிறப்புரைகள், கலந்துரையாடல், இணையமர்வு, பயிற்சிப் பட்டறை, தமிழர் முன்னோடி விருது வழங்கல் உள்ளிட்ட பல நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
நிகழ்ச்சியின் முக்கியம்சம் :
இம்மாநாட்டில் கலந்து கொள்வதன் வாயிலாக சக தொழில்முனைவோர், புத்தாக்க வல்லுநர்கள், துறைத்தலைவர்களோடு கலந்துரையாட, அவர்களிடமிருந்து துறைத்தகவல்களைக் கற்றுக்கொள்ள, தொழில்விரிவாக்கத்திற்கான சூட்சுமங்கள், நெறிமுறைகள், யோசனைகள், பயிற்சி முதலானவற்றை ஈட்டிக்கொள்ள பெரும் வாய்ப்பாக அமையும்.
அதுமட்டுமல்லாது, அந்தந்தத்துறையின் சமகால நிகழ்வுகள், அடுத்து வரப் போகும் தொழில்நுட்பங்கள், வணிகநோக்குகள், மாற்றங்கள் முதலானவற்றை உள்வாங்கித் தத்தம் தொழில் நிலைப்பாடுகளைச் செம்மையாக்கிக் கொள்ளவும் இது வழிவகுக்கும்.
தொடர்புகளை விரிவாக்கிக் கொள்வதன் வாயிலாக புது வாய்ப்புகளுக்குப் பல திறப்புகளும் ஏதுவாக அமையுமென்பதில் இருவேறு கருத்துகளிருக்க முடியாது. செய்திறன், செய்முறை போன்றவற்றைச் சீர்தூக்கிப் பார்த்து, குறைந்த செலவில் நிறைவான பொருளீட்டல் போன்றவற்றை அறிந்து கொள்வதற்கான ஏற்பாடுகளையும் இம்மாநாட்டில் கலந்து கொள்வதன் மூலம் தொழில்முனைவோரும் நுகர்வோரும் செய்து கொள்ள முடியும்.
கலந்துகொள்ளும் வல்லுனர்கள் :
தத்தம் துறையில் கோலோச்சி, தலைவர்களாக விளங்கிவரும் சகதமிழர்களான பல வல்லுநர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.
அவர்களில் சிலரைப் பற்றிய அறிமுகத்தைத் தெரிந்து கொள்வதன் வாயிலாக இம்மாநாட்டின் போக்கினை நாம் அறிந்து கொள்ளலாம்.
திரு சுரேஷ் இராமமூர்த்தி – Chairman and CTO, CBW Bank
CBW வங்கித் தலைவராகவும் முதன்மைத் தொழில்நுட்ப அலுவலராகவும் திகழ்ந்து வருபவர். கூகுள் நிறுவனத்தில் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர். கூடுதலாக சில நிறுவனங்களைத் துவக்கி, அவற்றையும் அதனதன் துறையில் வெற்றிகரமாக்கிக் காட்டியவர். நிதித்துறை, மென்பொருள் தொழில்நுட்பம் முதலானவற்றின் சிறந்த ஆளுமையாக விளங்கி வருபவர்.
திரு. ஐசரி கே கணேஷ் – Chancellor / Chairman of the Vels University
சென்னையில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தை நிறுவியவரும் வேந்தரும் தலைவரும் ஆவார். தமது தந்தை ஐசரி வேலனின் நினைவாக வேல்ஸ் கல்வி அறக்கட்டளையை நிறுவியவர். பச்சையப்பா அறக்கட்டளை குழுவின் தலைவராக உள்ளார்.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இணைந்துள்ள கல்லூரிகளுக்கான கூட்டமைப்பின் செயலாளராகவும் விளங்குகிறார். தொடர்ந்து கல்வித்துறை, பொதுப்பணி, சமூகப்பணிகளில் முனைப்புக் கொண்டு மேம்பாடுகளை ஈட்டிவருபவர்.
முனைவர் இராஜன் நடராஜன் – President of TechnoGen, Inc
திரு. இராஜன் நடராஜன் அவர்கள் மேரிலாந்து மாகாணத்தின் போக்குவரத்துத்துறை ஆணையர் பொறுப்பு வகிப்பவர். இதற்கு முன்னர் மாகாணத்தின் துணைச் செயலராகவும் விளங்கியவர். தொழில்நுட்பம், நிர்வாகவியல், பொதுப்பணி முதலான துறைகளின் சிறந்த ஆளுமையாகத் திகழ்பவர்.
திரு. இராஜா கிருஷ்ணமூர்த்தி – Director HRD, Talent Maximus India ltd
டேலண்ட் மேக்சிமஸ் நிறுவனத்தின் இயக்குநர், நிர்வாகவியல், தொழில்நுட்பம், கட்டுமானத் துறைகளின் ஆளுமையாக விளங்குபவர்.
திரு.A.D.பத்மசிங் – Chairman & Managing Director, AACHI GROUP :
ஆச்சி மசாலா குழுமத்தின் பெருந்தலைவராகப் பொறுப்பு வகிப்பவர். நிர்வாகவியல், வணிக மேம்பாடு, சந்தைப்படுத்துதல், உற்பத்தித்திறன் மேம்பாடு முதலிய துறைகளின் வல்லுநர்.
திரு சுப்ரமணியன் முனியசாமி – CTO, Dept of HR, Maryland State :
மேரிலாந்து மாகாண அரசின் முதன்மைத் தொழில்நுட்ப இயக்குநராகப் பொறுப்பு வகிப்பவர். தொழில்நுட்பம், கொள்வனவு, மனிதவளமேம்பாடு முதலிய துறைகளில் சிறந்து விளங்குபவர்.
திரு ஹேமச்சந்திரன் லோகநாதன் – Founder CEO , Brand Avatar and Celebrity Badminton League :
Brand Avatar and Celebrity Badminton League இன் நிறுவனரும் தலைவருமாகத் திகழ்பவர். தகவற்தொழில் நுட்பம், மக்கள் தொடர்பு, கேளிக்கை, விளையாட்டு முதலிய துறைகளின் வல்லுநர். இருபத்து ஐந்துக்கும் மேற்பட்ட நூல்களுக்கான ஆசிரியராகவும் விளங்குகிறார்.
திரு பிரபாகரன் முருகையா – CEO, TechFetch :
TechFetch நிறுவனத்தின் தலைவர். மென்பொருள் கட்டுமானத்துறை, அயல்வனவு, மனிதவள மேம்பாட்டுத்துறை, தொழில்நுட்பம் முதலான துறைகளின் ஆளுமையாக விளங்குபவர்.
திரு மது குமார் – President & Head of North America, Digility Inc :
Digility Inc நிறுவனத்தின் தலைவர். தொழில்நுட்பம், நிர்வாகம், மென்பொருள் கட்டுமானம், வர்த்தக அபிவிருத்தி, உற்பத்தித்திறன் மேம்பாடு போன்ற துறைகளின் ஆளுமையாக, பெருநிறுவனங்கள் 500 எனும் பட்டியலில் இடம் பெற்றுள்ள பல நிறுவனங்களுக்கு ஆலோசகராகவும் வழிகாட்டியாகவும் திகழ்பவர்.
மேற்கூறிய ஆளுமைகளுடன் இன்னும் பல ஆளுமைகள் மாநாட்டில் கலந்து கொள்ளத் தொடர்ந்து இசைவளித்த வண்ணம் இருக்கின்றனர். விளம்பரதாரர்களும் தொழில்நிறுவனங்களும் கொடையளித்து மாநாட்டை சிறப்புறச் செய்வது அனைவருக்கும் பயனளிப்பதாய் அமையும்.
மேலும் தகவலுக்கு:
அண்மையத் தகவலுக்கும் கூடுதல் தகவலுக்கும் பேரவையின் இணையதளத்தின் https://tefcon.fetnaconvention