பில்கேட்ஸை முந்தும் அமென்சியோ ஒர்டிஹா : கடை உதவியாளராக தொடங்கி உலகின் மிகப் பெரிய பணக்காரராக உயர்ந்த ஒர்டிஹா
2011 ஆம் ஆண்டு உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலை அறிவிக்கிறது போர்ப்ஸ் இதழ், இதில் பில்கேட்ஸ் (bill gates) முதலிடம் பெறுகிறார், 43 வது இடம் பிடித்து முதல் முறையாக போர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடிக்கிறார் ஒருவர். 2016 ஆம் ஆண்டு பணக்காரர்கள் பட்டியலை வெளியிடுகிறது போர்ப்ஸ் இதில் வழக்கம்போல் முதலிடம் பிடிக்கிறார் பில் கேட்ஸ், 2001 ல் 43 வது இடத்தில் இருந்தவர் 2 வது இடத்தை பிடிக்கிறார். கொஞ்ச நாட்களில் ஒரு செய்தியை வெளியிடுகிறது போர்ப்ஸ், இதில் பில் கேட்ஸை ஒருவர் முந்திவிட்டார் என தெரிவிக்கிறது. இப்படி பில் கேட்ஸை முந்தும் அளவிற்கு உலகின் மிகப் பெரிய பணக்காரராக உயர்ந்த ஒருவர் தான் ஸ்பெயினைச் சேர்ந்த ஒரு ரயில்வே தொழிலாளியின் மகன் அமென்சியோ ஒர்டிஹா (Amancio Ortega).
Zara என்ற உலகின் மிகப் அதிக ஆடை விற்பனை கடைகளை (world’s largest apparel retailer) கொண்டுள்ள Inditex group நிறுவனத்தை தொடங்கியவர் அமென்சியோ ஒர்டிஹா. Zara ஆடை விற்பனை நிலையங்கள் 91 நாடுகளில் 7000 க்கும் மேற்பட்ட இடங்களில் கிளைகளை விரித்து இன்று மிகப் பெரிய சாம்ராஜ்யமாக வளர்ந்துள்ளன. Zara Home, Massimo Dutti, Bershka, Oysho, Pull and Bear, Stradivarius மற்றும் Uterqüe போன்ற ஆடை சார்ந்த பல பிரபலமான பிராண்டுகளை (brand) உருவாக்கியுள்ளது இவரது Inditex நிறுவனம்.
ஆரம்பகால வாழ்க்கை
அமென்சியோ ஒர்டிஹா (Amancio Ortega) 1936 ல் ஸ்பெயின் நாட்டில் லியோன் மாகாணத்தில் உள்ள ஒரு குட்டி கிராமத்தில் பிறந்தார். அவரது தந்தை ரயில்வே தொழிலாளியாக பணிபுரிந்தார். அவரது தந்தையின் வேலை நிமித்தம் காரணமாக 14 வயதில் கொருணா என்ற ஊருக்கு அவரது குடும்பம் குடிபெயர்ந்தது. பிறகு அவரது குடும்ப சூழ்நிலை காரணமாக 14 வயதில் தனது பள்ளி படிப்பை நிறுத்தினார்.Gala என்ற ஆடை தயாரிக்கும் உள்ளூர் நிறுவனத்தில் உதவியாளராக பணியில் சேர்ந்தார்.
அங்கேதான் அவர் ஆடை தயாரிக்கும் கலையை கற்றுக்கொண்டார். வாடிக்கையாளர்களுக்கு என்ன வேண்டுமோ அதை கொடுத்தால் பணத்தை ஈட்டலாம் என்பதை உணர்ந்தார். வாடிக்கையாளர்களின் ஆசைகளை எப்படி கண்டறிவது, அவர்களுக்கு எது முக்கியம், அவர்களின் தேவைகளை எப்படி பூர்த்தி செய்வது (meet that demand) போன்ற பல விசயங்களை ஒர்டிஹா கற்றுக்கொண்டார்.
Zara கடை தொடங்குதல்
அமென்சியோ ஒர்டிஹா 1972 ல் Confecciones Goa என்ற பல உள்ளூர் பெண்கள் சேர்ந்த தையல் கூட்டுறவு நிறுவனத்தை தொடங்கினார். இதில் குளியல் அங்கியை உற்பத்தி செய்து விற்பனை செய்தார்.
1975 ல் ஒர்டிஹா, அவர் மனைவி ரோசலியா மேராவுடன் சேர்ந்து முதல் Zara ஆடை சில்லறை விற்பனை கடையை திறந்தார். தனது கடைக்கு Zorba என்று பெயர் வைக்க விரும்பினார், ஆனால் அந்த பெயரில் ஏற்கனவே வேறொரு கடை இருந்ததால் Zara என்ற பெயரை தேர்ந்தெடுத்தார்.
அந்த முதல் Zara கடையில் ஆடைகள் நன்றாக விற்பனை ஆனது. பிறகு அந்த முதல் வெற்றி கொடுத்த நம்பிக்கையின் காரணமாக 10 ஆண்டுகளில் ஒர்டிஹா, ஸ்பெயின் முழுவதும் பல கடைகளை திறந்தார்.
1985 Inditex குழுமத்தை தொடங்கி அதில் Confecciones Goa, Zara கடைகள் மற்றும் பல பிராண்டுகளையும் ஒருங்கிணைத்தார். 2001 ல் Inditex group முதல் முதலாக தனது பங்குகளை (initial public offering) பங்குச் சந்தையில் (stock exchange) வெளியிட்டது. Inditex குழுமத்தில் ஒர்டிஹா 59.29% பங்குளை (shares) தன் வசம் வைத்துள்ளார்.
2003 இல், Inditex குழுமம் Zara Home brand ஐ தொடங்கியது. படுக்கைகள், கண்ணாடி பொருட்கள் மற்றும் பல்வேறு வீட்டு அலங்கார பொருட்கள் விற்கும் சில்லறை விற்பனை கடை ஆகும். 2010 ல் Zara இ-கமெர்ஸ் ( e-commerce) சந்தையில் நுழைந்தது. பல்வேறு நாடுகளில் இதன் ஆன்லைன் தளத்தை (e-commerce platform) நிறுவியது.
2011 இல், ஒர்டிஹா Inditex குழுமத்திலிருந்து தனது ஓய்வை அறிவித்தார். அவர் பப்லோ ஈசலா (Pablo Isla) என்பவரை தனது பதவியில் நியமித்தார். இப்போது பப்லோ ஈசலா Inditex குழுமத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.
Zara வெற்றி பெற்றதின் தனித்தன்மை
உலகின் மிகப்பெரிய ஆடை விற்பனையாளரான Inditex குழுமத்தின் மதிப்பு 2015 ல் $.100 பில்லியன் டாலரை தாண்டியது. Zara அதிகபட்சமாக 3 வாரங்களில் இதன் ஆடைகளை வடிவமைத்து, உற்பத்தி செய்து, அதன் கடைகளுக்கு கொண்டு சேர்த்து விற்பனையில் இறங்கிவிடுகிறது.
பெரும்பாலும் நிறுவனங்கள் எதிர்கால விற்பனைக்காக குறைந்தது ஆறுமாதம் காலம் வரை 100% ஆடைகளை கையிருப்பை வைத்துக்கொண்டு முடங்கி விடும். ஆனால் Zara 15-20 சதவீத வரை மட்டுமே ஆடைகளை கையிருப்பில் வைத்துக்கொள்ளும். கடை மேலாளர்கள் அதன் வாடிக்கையாளர்களின் (customers) வார்த்தைகளை காது கொடுத்து கேட்பார்கள், அவர்களின் எண்ணங்களுக்கு மதிப்பளிப்பார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் 12,000 மேற்பட்ட புதிய வடிவமைப்புகளை (designs) வெளியிடுகிறது. Zara கடைகளில் வாடிக்கையாளர்கள் விருப்பப்படி தேர்வுசெய்யும் படியான பலவிதான ஸ்டைல், டிசைன், நிறம் மற்றும் அளவுகளில் ஆடைகள் இடம்பெற்றிருக்கும்.
நிறுவனம் விளம்பரத்திற்காக (zero advertising) எந்த வித செலவும் செய்வதில்லை. மாறாக இது ஈட்டும் வருமானத்தில் (revenues) பெரும்பாலான தொகையை புதிய கடைகளை திறப்பதற்காகவே செலவு செய்கிறது. இதன் உற்பத்தி மையங்களை அதிகமான விற்பனை ஆகும் நாடுகளுக்கு அருகிலேயே அமைத்துள்ளது.
2011 ல் Greenpeace என்ற முறையை முன்னெடுத்தது இதில் உடலுக்கு தீங்கு விளைவிக்காத நச்சு அல்லாத ஆடைகளை உற்பத்தி செய்ய தொடங்கியது. இது வாடிக்கையாளர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. Zara வின் ஒவ்வொரு வெற்றியின் பின்புறத்திலும் அமென்சியோ ஒர்டிஹாவின் கனவின் வெளிப்பாடு இருந்தது.
மற்ற தொழிலதிபர் போல் அவர் பணக்கார குடும்பத்தில் பிறந்தவர் இல்லை. ஆனால் அவர் தனது குடும்ப பின்னணியும் தாண்டி இன்று உலகின் மிகப் பெரிய தொழில் முனைவோராகவும், பணக்காரராகவும் தனது இடைவிடாத உழைப்பின் மூலம் உயர்ந்திருக்கிறார்.
போர்ப்ஸ் (forbes) இதழின் உலகின் பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸை அடிக்கடி மிஞ்சி இடம்பெற்றுள்ள அமென்சியோ ஒர்டிஹாவின் சொத்து மதிப்பு $.77.5 பில்லியன் டாலர் ஆகும். இத்தனைக்கும் இவர் ஊடகத்தில் அதிகம் வெளிப்படாதவர். அவரின் பேட்டியை விரல் விட்டு எண்ணிவிடலாம். அவர் தன் வாழ்க்கையை மிகவும் எளிமையாக அமைத்துக்கொண்டவர். நிச்சயம் இவரின் வாழ்க்கை பயணம் வெற்றி பெற துடிப்பவர்களுக்கு மிகுந்த ஊக்கத்தை கொடுக்கும்.
Please Read Also :