CRR (Cash Reserve Ratio), Repo Rate, Reverse Repo Rate, Bank Rate, SLR (Statutory Liquidity Ratio) ஆகியவற்றின் விளக்கங்கள்
செய்திதாள்களிலும், தொலைகாட்சிகளிலும் அடிக்கடி தென்படும் செய்தி CRR (Cash Reserve Ratio) (ரொக்க இருப்பு விகிதம்), Repo Rate (ரெப்போ ரேட்), Reverse Repo Rate (ரிவர்ஸ் ரெப்போ ரேட்), Bank Rate, SLR (Statutory Liquidity Ratio)-ஐ ரிசர்வு வங்கி (Reserve Bank Of India) அதிகரித்துள்ளது அல்லது குறைத்துள்ளது என்ற செய்தி. இவை வங்கி பொருளாதாரம் சம்மந்தமான சொற்களாகும்.
வங்கிகள் வைப்பு நிதிகளை (Deposits) வாடிக்கையாளர்களிடமிருந்து பெறுகின்றன மற்றும் வாடிக்கையாளர்களுக்கு கடன்களை (Loans) வழங்குகின்றன. இந்த இரண்டும் வங்கிகளின் முக்கிய செயல்பாடுகளாகும் .வங்கிகள் அது கொடுக்கும் கடன்கள் மூலம் கிடைக்கும் வட்டியிலிருந்து வருமானத்தை (Revenue) பெறுகின்றன. இதன் மூலம் வங்கிகள் லாபத்தை (Loan) ஈட்டுகின்றன.
CRR (Cash Reserve Ratio) (ரொக்க இருப்பு விகிதம்)
நாம் 100 ரூபாய் வங்கியில் வைப்பு நிதியாக செலுத்துகிறோம் என்றால், அந்த 100 ரூபாயையும் வங்கி முழுவதுமாக தனது வர்த்தக பயன்பாட்டிற்கு பயன்படுத்த முடியாது. வங்கிகள் நாம் செலுத்திய 100 ரூபாயில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை ரிசர்வு வங்கியில் ரொக்க இருப்பாக (Cash Reserve) வைக்க வேண்டும். வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் (Reserve Bank Of India) வைக்க வேண்டிய இந்த தொகை விகிதமே CRR (Cash Reserve Ratio) (ரொக்க இருப்பு விகிதம்) ஆகும்.
நாட்டின் பணமதிப்பை சமநிலையில் வைத்திருப்பதற்கும், பொதுமக்கள் செலுத்திய வைப்புதொகைகளின் பாதுகாப்பை உறுதிச் செய்வதற்கும், வங்கியின் பணம் வழங்குதலை (money supply) கட்டுபடுத்துவதற்க்கும், பணவீக்கம் மற்றும் பணபுழக்கத்தை கட்டுபடுத்தவும் ரிசர்வ் வங்கி இதை கட்டாயமாக்கியுள்ளது.
இப்போது CRR (Cash Reserve Ratio) 4%-மாக உள்ளது. உதாரணத்திற்கு நாம் செலுத்தும் 100 ரூபாயில் 4 ரூபாயை வங்கி ரிசர்வு வங்கியிடம் ரொக்க இருப்புத் தொகையாக வைக்க வேண்டும்.
பாரத ரிசர்வ் வங்கியில், வங்கிகள் வைக்கும் ரொக்க இருப்புத் தொகைக்கு (Cash Reserve) வட்டி (Interest) எதுவும் வழங்காது.
SLR(Statutory Liquidity Ratio)
நாம் செலுத்திய 100 ரூபாயில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை வங்கி அரசாங்கம் சார்ந்த பத்திரங்கள் (Government approved securities) , தங்கம் (Gold) போன்றவற்றில் முதலீடு செய்யவேண்டும். ரிசர்வ் வங்கி விதிக்கும் இந்த முதலீட்டு விகிதமே SLR (Statutory Liquidity Ratio) ஆகும். இப்போது SLR (Statutory Liquidity Ratio) 21.5%-மாக உள்ளது.
உதாரணத்திற்கு நாம் செலுத்தும் 100 ரூபாயில் 4 ரூபாய் ரிசர்வு வங்கியிடம் ரொக்க இருப்புத் தொகையாகவும், 21.5 ரூபாயை பத்திரங்கள் மற்றும் தங்கம் ஆகியவற்றில் முதலீடாகவும் வங்கி செலுத்தும். மீதமுள்ள 74.5 ரூபாய் மட்டுமே வங்கி தனது பயன்பாட்டிற்கு பயன்படுத்த முடியும்.
Rs.100-Rs.21.5 (SLR) +Rs.4 (CRR) = Rs.100-Rs.25.5=Rs.74.5 (வங்கி பயன்பாட்டிற்கு உபயோகிக்கும் தொகை )
பணவீக்கம் மற்றும் பணபுழக்கத்தை கட்டுபடுத்துவதற்க்கும், நாட்டின் வளர்ச்சிக்கு வங்கிகள் உதவுவதற்கும் ரிசர்வ் வங்கி SLR-ஐ கட்டாயமாக்கியுள்ளது.
PLEASE READ ALSO : ஹெச்டிஎப்சி வங்கி அடிப்படை வட்டி விகிதத்தை 0.05 சதவீதம் குறைத்துள்ளது (HDFC Bank has reduced base rate by 0.05%)
Repo Rate (ரெப்போ ரேட்)
வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு கடன் கொடுப்பதற்கான பணத்தை இன்னொரு வாடிக்கையாளர்களிடமிருந்து வைப்பு நிதியாகப் (Deposits) பெறுகின்றன. அதற்கு அந்த வாடிக்கையாளருக்கு வட்டியை (Interest) வழங்குகின்றன. ஆனால் கடன் வழங்குவதற்கு இந்த வைப்புநிதிகளின் (Deposits) மூலம் பெறப்பட்ட நிதிகள் மட்டும் போதாது. அதனால் வங்கிகள் ரிசர்வு வங்கியிடமிருந்து குறுகிய காலக் (Short Term Loan) மற்றும் நீண்ட காலக் கடன்களை (Long Term Loan) பெறுகின்றன. இந்த கடன்களுக்கு ரிசர்வ் வங்கி ஒரு குறிப்பிட்ட வட்டியை (Interest) வங்கிகளுக்கு விதிக்கின்றது.
ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய காலக் கடன்களுக்கு விதிக்கும் வட்டி விகிதமே ரெப்போ ரேட் (Repo Rate) ஆகும். ரிசர்வு வங்கி நீண்ட காலக் கடன்களுக்கு விதிக்கும் வட்டி Bank Rate ஆகும்.
உதாரணத்திற்கு, ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட் விகிதத்தை (Repo Rate) 7.25% நிர்ணயித்தால் வங்கிகள் ரிசர்வு வங்கியிடமிருந்து பெற்ற குறுகிய காலக் கடன்களுக்கு 7.25% வட்டியை (Interest) செலுத்த வேண்டும்.
தொழிற்துறையில் (Industry) சுணக்கம் ஏற்பட்டால் ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட் விகிதத்தை குறைத்து வெளியிடும். ரெப்போ ரேட் (Repo Rate) குறைக்கப்படும்பட்சத்தில் வங்கிகள் தாங்கள் பெற்ற பயனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் விதமாக வழங்கும் கடன்களுக்கான வட்டியையும் குறைக்கும். குறைந்த வட்டியில் கடன்கள் கிடைப்பதால் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான முதலீட்டினை வங்கியிலிருந்து கடனாக பெறுவார்கள். இதேபோல் வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் வாங்குவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து, அவர்கள் அதிக அளவில் தொழில்துறை சார்ந்த பொருட்களை (Car, Cement, Steel, Electrical & Electronics & etc) வாங்குவார்கள். இதனால் தொழில் துறை சார்ந்த நிறுவனங்களின் விற்பனையும் அதிகரிக்கும் இதனால் தொழிற்துறையில் வளர்ச்சி ஏற்படும் என்பது ஒரு பொருளாதார கோட்பாடாகும்.
Reverse Repo Rate (ரிவர்ஸ் ரெப்போ ரேட்)
நாம் வங்கியிடம் வைப்பு நிதி செலுத்துவதுப் போல, வங்கிகளும் தங்களிடமுள்ள அளவுக்கு அதிகமான பணத்தை, ரிசர்வ் வங்கியிடம் குறிப்பிட்ட காலத்திற்கு வைப்புத் தொகையாக வைக்கும். இந்த வைப்புத் தொகைக்கு ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு கொடுக்கும் வட்டி விகிதமே Reverse Repo Rate (ரிவர்ஸ் ரெப்போ ரேட்) ஆகும். இப்போது Reverse Repo Rate (ரிவர்ஸ் ரெப்போ ரேட்) 5.75%-மாக உள்ளது.
நாட்டின் பணவீக்கம் (Inflation) மற்றும் பணபுழக்கத்தை கட்டுப்படுத்துவதற்கும் பணத்தின் மதிப்பை சமநிலைபடுத்துவதற்கும் ரிசர்வ் வங்கி CRR (Cash Reserve Ratio) (ரொக்க இருப்பு விகிதம்), Repo Rate (ரெப்போ ரேட்), Reverse Repo Rate (ரிவர்ஸ் ரெப்போ ரேட்), Bank Rate, SLR (Statutory Liquidity Ratio) ஆகியவற்றை குறைத்தும், அதிகரித்தும் மாற்றியமைக்கும்.
ரிசர்வ் வங்கி (Reserve Bank Of India) காலாண்டிற்கு ஒருமுறை நிதிநிலை அறிக்கையை (Monetary policy) வெளியிடுகிறது.