சின்னம் பெரிது பகுதி-5 : ரோம் நகரின் ரோமிங் சிம்மா நாம்?
அதே மெர்சண்ட் ஆஃப் வெனிஸ் நாடகத்தை அடால்ஃப் பார்த்தான். ரோம கத்தோலிக்க மதச் சடங்குகளில் அதீத நம்பிக்கையுடைய தாயின் அரவணைப்பில் வளர்ந்த அவன் மத நம்பிக்கையில் பெரிய பற்றுதல் இல்லாவிடிலும் கத்தோலிக்க நம்பிக்கைப்படி வட்டிக்கு பணம் கொடுத்தல் என்பது பாவ காரியம். ஆதலால் ஆண்டோனியோ ஷைலக் எனும் யூத வணிகனிடம் கடன் வாங்கலானான். கடல் வாணிபம் போன்ற அபாயகரமான வர்த்தகங்களுக்கு அதிக கெடுபிடியுடன் கடன் வழங்கினான் ஷைலக். இருப்பினும் ஒரு பவுண்ட் சதையை ஈடாகக் கேட்டதில் வணிக நோக்கை தாண்டி யூதனான ஷைலக்கின் கத்தோலிக்க காழ்ப்புணர்வு அப்பட்டமானது. பிற்காலத்தில் இதுவே யூதர்கள் மீதான துவேஷமாக ஹிட்லர் மனதில் உருவெடுத்தது.
அது சரி. ஒரு புறம் இருக்கட்டும். ஷைலக்கிற்கு ரோமானியர் மீது அப்படி என்ன பகை என்ற சந்தேகம் வருகிறதா? வராவிட்டாலும் அதை விளக்காமல் ஏன் தங்கம் இவ்வளவு மதிப்புடையதாகிற்று. நாணயத்தின் மதிப்பு நிர்ணயம் பற்றி எல்லாம் சொல்ல முடியாது. ஆகவே……
எல்லா பண்டைய நாகரிகங்களும் தழைத்து வளர்ந்தது பல்லாயிரக்கணக்கான படையெடுப்புகளாலும், ஆக்கிரமிப்புகளாலும், சூறையாடலாலும், பண்பாட்டுத் திணிப்பாலும், வரலாற்றுத் திரிபாலும். ஆனால் ரோம நாகரிகம் பிறந்தது ரோம் எனும் ஒரே நகரத்தில். சுமார் 600 ஆண்டுகளில் ரோமப் பேரசர்கள் இத்தாலி, க்ரீஸ், பிரான்ஸ், பிரிட்டன், எகிப்து, ஆசியா உள்ளிட்ட பல நாடுகளில் கண்டம் கடந்து தன் முத்திரையைப் பதித்தனர்.
தடம் பதித்த இடங்களில் எல்லாம் தாங்கள் தான் உலகிலேயே பண்பட்டவர்கள் என்ற பிம்பத்தை நிறுவுவதிலும், ஆவணப்படுத்துதலிலும் தான் ரோமர்களிடம் தமிழன் தோற்றான். அட முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சு போடாதேயப்பா. என்ன அத்தாட்சி ரோம நாகரிகத்திற்கு இணையானது தமிழர் மரபு என்பதற்கு? அவசரம் வேண்டாம். தயவு கூர்ந்து இன்னும் சில நாழிகை பொறுமை காக்கவும்.
ஆனானப்பட்ட ரோமர்களுக்கே சிம்ம சொப்பனமாக விளங்கியவன் ஒருவனிருந்தான். கூலிப்படையின் தலைவனாக இருந்த அவன் ரோமப் பேரரசர்கள் தொடுத்த போர்களுக்குப் படைதிரட்டுவதையே பிரதான தொழிலாக வைத்திருந்தான். அந்த நாடோடிக்கூட்டத்தின் தலைவன் தன் உழைப்பிற்கேற்ற ஊதியம் தராத ரோமச் சக்கரவர்த்திகளுக்கு சரியான பாடம் புகட்ட எண்ணி சிதறிக்கிடந்த நாடோடி இனங்களை ஒன்று திரட்டி ஹூன சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினான். ரோம் அடிபணிந்தது. இதுவரை பல்வேறு சக்கரவர்த்திகளின் கீழ் வாழ்ந்த வெவ்வேறு இன மக்கள் அட்டில்லாவின் கீழ் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
ஏனென்றால் அவனது இலக்கு தான் வீரத்தில் எவருக்கும் சளைத்தவனல்ல என்பதை உரக்கச்சொல்வதில் இருந்ததே தவிர சுக போகங்களில் மூழ்கித்திளைப்பதிலோ, அதிக வரி வசூலிப்பதிலோ, ஹூன சடங்குகளை மற்ற இனத்தவர் மீது திணிப்பதிலோ இருக்கவில்லை. எல்லைகளை விரிவுபடுத்தவிதிலேயே சதா சிந்தித்தவன் எளிமையான வாழ்க்கையையே வாழ்ந்தான்.
ஹூனர்களின் ஆசியக் கனவுகள் குப்தர்கள் காலத்திற்குப் பின் வந்த கடைசி வடஇந்தியப் பேரரசன் ஹர்ஷவர்தனின் அண்ணன் ராஜவர்தனால் தகர்க்கப்பட்டது. உலகின் பெயர்போன பராக்கிரமசாலிகள் கடைசியாக முற்றுகையிட்ட அல்லது ஆள முற்பட்ட நிலப்பரப்பு ஆசிய துணைக்கண்டத்தில் அதுவும் தற்போதைய இந்தியா என்ற வரையறுக்கப்பட்ட நிலத்தின் வடகிழக்குப் பகுதியாகவே இருக்கும். மிதமான தட்பவெட்பம், செழிப்பான பூமி, இதை மிஞ்சி எங்குச் செல்வது என்ற நிறைவை அல்லது அடங்கா ஆசையைத் தருவதாக அது இருந்தது.
ஆனால் ரோமர்கள், கிரேக்கர்கள், மங்கோலியர், மொகளாயர், தொடங்கி மௌரிய வம்சாவழி வந்த இந்திய சாம்ராட் அசோகனால் கூட காஷ்மீர் முதல் குமரி வரை ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் ஆசை நிறைவேறவில்லை. கலிங்கத்துப் போரிற்குப் பிறகு அசோக சக்கரவர்த்தி மனம் மாறி புத்த மதத்தைத் தழுவினார். தன் மகன் மகளைக் கூட காஞ்சி, ஈழதேசம் சென்று புத்த மதத்தைப் பரப்பச் சொன்னார். மற்ற படி அசோகர் மரம் நட்டார், சாலைகள் அமைத்தார் இத்தியாதி இத்தியாதி என்று மழுப்புகிறது இந்திய வரலாற்றுக் குறிப்புகள்.
ஆனால் உண்மை சோழர்களின் குடையின் கீழ் ஒன்று கூடிய சேர, பாண்டியப் படையை அசோகரால் முறியடிக்க முடியவில்லை. காரணம் சங்கம் வளர்த்த தமிழ் மன்னர்கள் ஆண்டது தமிழ் நாட்டைமட்டுமல்ல தென்மதுரையைத் தலைநகராகக்கொண்ட குமரிக்கண்டத்தை. ரோமர்களின், சீனத்துக் குறிப்புகளில் அது லெமூரியகண்டம் என்ற குறிப்பு இருக்கும். குமரிக்கணடத்தைப் பற்றிய குறிப்புகள் அர்த்த சாஸ்திரத்திலும் உண்டு. என்ன நம்பும்படியாக இல்லையா?
சரி சமீபத்தில் வெளிவந்த ஐஸ் ஏஜ் (Ice Age) படங்களைக் குழந்தைகளோடு குழந்தையாக மாறி விரும்பிப்பார்தவரா நீங்கள். அதில் லெமூர் வகையறா குரங்குகள் தான் கதாநாயகன் இல்லையா?. அந்த லெமூர்கள் வாழ்ந்தப் பணிப் பிரதேசம் தான் லெமூரியா. இப்பொழுது நம்பும்படியாக உள்ளது அல்லவா?.
20000 வருடங்களுக்கு ஒரு முறை பனிக்காலம் வரும். ஆமாம் நீங்கள் மட்டும் தோசை மாவையும், காய்கறிகளையும் ஃப்ரிட்ஜுக்குள் வைத்து, தேவையான போது எடுத்து சூடுபடுத்திக் கொள்வதில்லையா என்ன?. இயற்கை அதையே மெகா பட்ஜட்டில் செய்யும். இதுவரை உலகில் 6 ஐஸ் ஏஜ்கள் வந்துள்ளன. ஒரு விண்கல்லோ அல்லது எரிமலை வெடித்தோ மீண்டும் பனியுருகி உயிர்கள் தழைக்கும். அப்போது கடல் மட்டம் கூடும். பூகோளம் மாறும். அப்படி கடல் மட்டம் கூடியதால் மூழ்கிய நிலப்பரப்பு தான் குமரிக்கண்டம். அது குமரி முனையிலிருந்து மடகாஸ்கர், ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இலங்கை எல்லாவற்றையும் தமிழ்நாட்டுடன் பிணைக்கும் பாலமாகவிருந்தது. அதனால் முதல் நாகரிகம் என்பதைத் தாண்டி மனிதக் குலம் தோன்றியதே தமிழ் பிராந்தியத்தில் தான் என்பது வரலாறு.
கூட்டிக் கழித்துப் பார்த்தால் அடுத்த ஐஸ் ஏஜை ஆரத்தழுவ நாம் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறோம். பூமியின் கணக்குப்படி அது சுண்டைக்கா 5000- 10000 வருடத்திற்குள் நிகழ்ந்துவிடும். நாம் நம் அறிவியல் முன்னேற்றத்தால் நம்மால் இயன்ற அளவு துரிதப்படுத்திக் கொண்டிருக்கிறோம் அவ்வளவு தான். சரி நம் கதைக்கு வருவோம்.
குமரிக்கண்டம் மூழ்கியதும் தலை நகரைக் கபாடபுரத்திற்கு மாற்றிக்கொண்டு ஆட்சி புரிந்தான் நெடியோன் என்ற பாண்டிய மன்னன். அவனுக்குப் பாரதன் என்ற இன்னோர் பெயரும் இருந்தது. நம் பாரத தேசமென்றே தோள் கொட்டுவோம் என்ற பாடல் நினைவுக்கு வருகிறதா? ஏன் பாரதம் என்று அழைக்காமல் இந்தியா என்றே அடையாளப்படுத்துகிறோம்? ஏன் அசோகரின் ஸ்தூபியே தேசியச் சின்னமானது? ஏனென்றால் தமிழர்கள் தனி கண்டத்தின் கடைசி கங்கு. அடுத்த பெருவெள்ளம் வந்தால் அது அணைந்துவிடும் என்ற அலட்சியம்.
இரண்டாம் சங்கம் வரையிலான எல்லாக் குறிப்புகளும் நீர்க்கிறையாகின. அதனால்தான் பிரிட்டிஷ், பரங்கி, பிரென்சு படையெடுப்பிற்குப் பின் நாம் ரோம் நகரின் ரோமிங் சிம் ஆனோம். ஏனென்றால் இன்று உலகில் பெரும் தொழில் சாம்ராஜ்ஜியங்கள் நடத்தி வருபவர்கள், ராஜ பரம்பரையைச் சேர்ந்தவர்கள் எல்லாம் ரோம் நகரிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள். சேர, சோழ, பாண்டியர்கள் கடல் வாணிபத்தை தன் கைக்குள் வைத்திருந்தனர். ‘எரியும் திரைக் கடல் என்று நாம் கூறியதைத்தான் கிரேக்கர்கள் எரித்ரியா என்று குறிப்பு எழுதினர். இன்றைய இந்திய மகா சமுத்திரம் அது தான்.
பண்டமாற்று முறையே உலக வழக்கமாக இருந்த காலத்தில் கடல் கடந்த வாணிபம் மிகுதியான பின் ஒரு நிலையான சமன்பாடு தேவைப்பட்டது. மிருகத்தோல் விற்கும் ஒருவனுக்கு நெல் வேண்டும். ஆனால் நெல் விற்பவனுக்குத் தோல் தேவையில்லை. அப்பொழுது நெல்லுக்கு இணையான வேறோர் பொருளை அவன் கொடுக்க வேண்டும். அப்படித் தோன்றியது தான் தங்கம், வெள்ளி மற்றும் வெங்களக் காசுகள். அன்றாடச் செலவுகளுக்கு வெள்ளி மற்றும், வெங்களக் காசு, வரி கட்ட அல்ல. சொத்துக்கள் வாங்கத் தங்கக்காசு என்பது மெல்ல மெல்ல உலக வழக்கமாக மாறியது. ஆனால் ஒவ்வொரு நாட்டிலும் உள்நாட்டுக் கணைக்குப்படி ஒரு பவுன் தங்கக் காசு எதற்குச் சமமானது என்பது வேறுபடும்.
இந்திய மன்னர்கள் ஒரு இந்திய ரூபாய் இவ்வளவு நெற்கதிர்களுக்கு சமம், வேறு சில நாடுகளில் இத்தினை கடல் திமிங்களத்தின் பற்களுக்குச் சமம் என்ற கணக்கெல்லாம் இருந்தது. உலோகங்களைத் தவிர்த்து பவளங்களும், வைரம், மரகதம், மாணிக்கம், இரத்தினம் போன்ற அரியக் கற்களும் விலைமதிப்பில்லா பொக்கிஷங்களாகக் கருதப்பட்டன. இமயம் முதல் குமரிவரை என்னென்ன வெகுமதிகள் கிடைக்கும் என்பதைப் பட்டியலிட்டு பிற்காலத்தில் சோழ தூதுவர்கள் சீன மன்னர்களைச் சந்தித்தனர். அப்படித்தான் ஹுவாண்ட் சாங் புத்த மதத்தின்பால் ஈர்க்கப்பட்டிருக்க வேண்டும். பெரிப்பிலஸ் மேரி எரித்ரேயி என்கிற கிரேக்கோ- ரோம கடல் வாணிபக் குறிப்பில் சேர, பாண்டிய மன்னர்களுடனான கடல் வணிகம் பற்றிய குறிப்புகள் உள்ளன என்பது உபரிச்செய்தி.
காலம் பொன்னானது. அதை நாம் பழம்பெருமை பேசியே பாழ் செய்து விட்டோம். முகலாயப் படையெடுப்புகளின் பொழுது அக்பர் காலம் முன்பு வரை ஜியா வரி என்பது இஸ்லாமியர் அல்லாதவரிடம் வசூலிக்கப்பட்டது. அதன் பிறகு கடல்வழி இந்தியா வந்தடைந்த பரங்கியரும், ஆங்கிலேயரும் ஒரு உடன்பாட்டிற்கு வந்தனர். மிளகு, கிராம்பு, ஏலக்காய் போன்ற நறுமணப்பொருட்களின் மொத்த குத்தகை பரங்கியருக்கே என்றும் பஞ்சு, பட்டு உட்பட்ட ஜவுளி எல்லாம் ஆங்கிலேயருக்கும் என்பது தான் அது.
ஆனால் நாள்போக்கில் இந்திய ஏற்றுமதி ஜவுளிக்கான சந்தை நறுமணப்பொருட்களை விட பெரிதாக விரிவடைந்தால் மொத்தக் கட்டுப்பாடு கிழக்கிந்திய கம்பேனியின் கையில் சென்றது. இதற்கிடையில் புதுவைத் துறைமுகத்தை முற்றுகையிட்ட பிரான்ஸ்காரர்கள் வேகமாக வளர்ந்தார்கள். ஆனால் ஆங்கிலேயப் பிரபு ராபர்ட் கிளைவ் ப்ளாசே யுத்தத்தில் வென்றதன் மூலம் பிரன்சு அபரிமித வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தினார்.
அடடே! நல்ல வேளை. இல்லாவிட்டால் நாம் பிரான்சு காலனியாக அல்லவா மாறியிருப்போம் என்று அப்பாவித்தனமாகக் கேள்வி கேட்பவர்கள் இருக்கவே செய்கிறார்கள். அவர்கள் பொருட்டு அப்படி ஒரு வேலை பிரான்ஸ் வெற்றி பெற்றிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்பதைப் பார்ப்போம். தெரிந்தவர்கள் காதை மூடிக்கொள்ளவும்.
பெரிய மாற்றம் ஏதுமில்லை நாமெல்லாம் இன்று ஆங்கிலத்திற்குப் பதிலாக பிரெஞ்சு பேசிக்கொண்டிருப்போம். புதுவையில் இன்றும் பிரெஞ்ச் குடியுரிமை உடையவர்கள் வசிக்கிறார்கள். ஆங்கிலேயர் இந்தியாவிற்குச் சுதந்திரம் கொடுத்து விட்டாலும் புதுவைக்கு சுதந்திரம் பிரெஞ்ச் குடியரசிலிருந்து 1950களில் தான் கிடைத்தது. அதனால் அது மாநிலம் அல்ல, மத்திய அரசின் நேரடிக் கண்காணிப்பில் வரும் யூனியன் பிரதேசம்.
ஒன்றுப்பட்ட இந்தியாவில் தமிழகம் மத்திய அரசிற்குச் செலுத்தும் ஒவ்வொரு ரூபாய் வரிக்கும் மானியமாக 40 பைசாவை மானியமாகப் பெறுகிறது. அதிகபட்சமாக மத்தியபிரதேசம் ஒரு ரூபாய்க்கு 1.8 ரூபாய் பெறுகிறது. இது அந்தந்த மாநிலத்தின் நிலப்பரப்பு, இயற்கை கணிமவளம், நீர் நிலைகள் போன்ற பல்வேறு காரணிகளால் வேறுபடும். அது கிரிக்கெட்டில் வரும் டக்வர்த் லூயிஸ் கணக்கை விடக் குழப்பமானது. அதனால் அதை விட்டுவிடுவோம். இந்த வித்தியாசம் உள்ளதாலேயே பல மாநிலங்கள் சுயாட்சியையோ அல்லது, இன்னமோர் பிரிவினையோ வலியுறுத்துகிறது. சிங்கப்பூர் போல செயற்கையாக உருவாக்கப்பட்ட தம்மாத்தூண்டு நாடு இப்பேர்ப்பட்ட வளர்ச்சி அடைந்திருக்கும் பொழுது அதை விட அதிக நிலப்பரப்பும், மக்கள்தொகையும், இயற்கைவளமும் உள்ள நாங்கள் வளர மாட்டோமா என்கிற இருமாப்பு.
நாம் சங்ககாலத்திலிருந்து தற்கால தங்கம், வெள்ளி நிலவரம் பற்றிய ஒரு கண்ணோட்டம் காணலாமா?
ஆங்கிலேயர் நமக்கு சுயாட்சி வழங்கியதற்கு நம் விடுதலைப் போராட்டம் கொடுத்த நெருக்கடி பெரும் பங்கு வகித்தாலும் உன்மையில் அவர்களால் உலக யுத்தத்தில் ஏற்பட்ட பின்னடைவுகளை சமாளிக்க முடியவில்லை என்பது தான் உண்மை. தவிர காலனி நாடுகளிலிருந்து மூலப்பொருட்களை லண்டனுக்குக் கொண்டு வரும் தளவாடங்களை வலுவாக அவர்கள் உருவாக்கிவிட்டார்கள். இந்தியா போன்ற நாடுகளில் உற்பத்தி செலவு குறைவு. ஏனெனில் கூலி குறைவாகக் கொடுத்தால் போதும் என்ற நிலைமாறி குறைந்த செலவில் அதிக ஊற்பத்தி செய்யும் இயந்திரங்களை அவர்கள் உருவாக்கிவிட்டார்கள்.
மற்ற கிழக்காசிய நாடுகளை ஒப்பிடுகையில் நாம் முன்பாகவே சுதந்திரம் பெற்று விட்டாலும் வல்லரசாகும் போதையில் நாம் பின்னடைவை சந்திக்க, ரூபாய் மதிப்பு சீன யுவானுடனோ, ரஷ்ய ரூபிளுடனானோ, குவைத் தினாருடனோ, சிங்கப்பூர் டாலருடனோ, மலேசிய ரிங்கட்டு உடனோ குறைவாகவே இருக்கக் காரணம் என்ன?
முகலாயர்கள் ஆசியா முழுவதும் விரவிக்கிடந்த தேர்ந்த கலைப்பொருள் விற்பன்னர்களையும் சந்தைப்படுத்தினர். திறன்களை ஒருங்கிணைத்தனர். ஆங்கிலேயர்கள் கிழக்காசிய மற்றும் ஐரோப்பிய சந்தைக்குமான வணிக உறவுகளைக் கட்டமைத்து விரிவுபடுத்தினர். இதற்குக் கொடுத்த விலையாக நாம் இழந்த செல்வங்களை – கோஹினூர் வைரம் உட்படக் கணக்கு எழுதிவிட்டு முன்னேறுவதற்கான வழியைப் பார்த்திருந்தோமேயானால் இந்த நிலை வந்திருக்காது. வாங்கி வந்த வரமே சாபமாக வாய்ப்பதுண்டு சிலருக்கு.
நம்மிடமுள்ள இயற்கை வளத்தையும், தட்பவெட்பத்தையும் பயன்படுத்தி நாம் புதிய கண்டுபிடிப்புகளுக்கான முன்னெடுப்புகளில் தீவிரம் காட்டவில்லை. எல்லாக் காலகட்டத்திலும் நாம் தொழில் நுட்பத்தில் மற்ற நாட்டைச் சார்ந்தவராகவே இருந்து வந்துள்ளோம். உலகயுத்த காலத்தில் துப்பாக்கி, தொழிற்புரட்சி காலத்தில் எரிவாயு, கச்சா எண்ணெய், மின்விளக்கும் இப்படி எல்லாவற்றிலுமே அயல் நாட்டவர் உரிமம் பெறப்பெற நாம் அவர்களிடம் கைக்கட்டியே நிற்க வேண்டிய சூழல்.
உலகப்போர்களுக்கு முந்தைய காலகட்டத்தில் இந்திய மொழிகளில் முதல்முறை அச்சுப்பிரசுரமானது தமிழ். ஏனென்றால் திரைகடலோடி திரவியம் தேடு என்று உலகிற்குறைத்தவர்கள் நம் முன்னோர். ”தம்பிரான் வணக்கம்” என்ற முதல் அச்சு நூலைத் தமிழ் மற்றும் ரோமானிய எழுத்துக்களுடன் கூடிய புத்தகமாக அச்சிட நிதியுதவி அளித்தது தூத்துக்குடி மீனவர்கள். பவளத்தின் புகலிடம் கொற்கை. இன்று வரை நாம் தட்டச்சு செய்யும் விசைப்பலகைகள் ஆங்கில சார்புடையதாகவே உள்ளது.
ஆனால் உலகமயமாக்கலுக்குப் பிறகு பவளமும் மற்ற அரிய வகைக் கற்களும் அலங்காரப் பொருள்களாக மட்டுமே பாவிக்கப்பட்டன. ஏனென்றால் அவற்றின் தொழில்துறைப் பயன்பாடுகள் குறைவு. அதனால் இவை 50% வரை தன் மதிப்பை இழந்தன. வைரம் இன்றும் தன் தொழில்துறைப் பயன்பாட்டைத் தக்க வைத்துள்ளது. ஆனால் எல்லா இடத்திலும் வைரம் கிடைப்பதில்லை. எந்த நிலப்பரப்பு ஒரு காலத்தில் காடுகளாக இருந்தனவோ- காட்டுத்தீ, எரிமலை வெடித்தல், நிலச்சரிவு போன்ற இயற்கைச் சீற்றங்களால் அதிக அளவு பாதிக்கப்பட்ட ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் தான் இவை அதிகம் கிடைக்கும். தவிர வைரத்தின் இயற்கையான அளவு, வண்ணம், காரட், வெட்டப்பட்ட விதம், தூய்மை போன்ற பல்வேறு காரணிகளால் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
உலகம் முழுவதும் ஒரே மாதிரியான தரக்கோட்பாடோ, மதிப்பீடோ கிடையாது. மேலும் பட்டைதீட்டும் தொழில்நுட்பம் இன்னும் செம்மைப்படுத்தப்பட்டால் வைரத்தின் விலை கணிசமாக வீழ்ந்து விடும். தங்கம் ஒன்று தான் மண் இருக்கும் எல்லா இடத்திலும் இருக்கும். தொழிற்துறை உபயோகம் அதிகம். எல்லா நாடுகளிலும் ஒரே மாதிரியான விலை நிர்ணயம். அவ்வளவு சீக்கிரம் மங்கிவிடாது. துருப்பிடிக்காது, வளையும் தன்மை அதிகம். இப்படி ஓராயிரம் காரணத்தால் ஒரு நாட்டின் தங்க இருப்பே அதன் நாணயத்தின் மதிப்பை நிர்ணயம் செய்கிறது. தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தில் குறைவதில்லை.
Please Read Also: சின்னம் பெரிது பகுதி-4 : ரோம் நகரின் ரோமிங் சிம்மா நாம்?