சாமானியனின் பார்வையில் கோவை விவசாயக் கண்காட்சி 2016
இந்தியாவின் முக்கியமான வேளாண் வர்த்தக கண்காட்சியான கோவை விவசாயக் கண்காட்சி ஜூலை 15 – 18 ஆம் தேதி வரை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.
பாரம்பரிய விதைகள் எனக் கூறிக்கொண்டு விற்பனை செய்யப்படும் ஒட்டு ரக விதைகள், அதை போட்டி போட்டுக்கொண்டு வாங்கும் மாடித்தோட்ட மற்றும் விடுமுறை நாள் விவசாயிகள்,
இயற்கை விவசாயம் செய்து பார்த்தாலாவது ஆகும் செலவையும், கடனையும் கட்டுப்படுத்த முடியுமா?, அதிக வருமானம் ஈட்ட முடியுமா, நஞ்சில்லாத உணவை உற்பத்தி செய்ய முடியுமா? என பலவிதக் குழப்பத்தில் வரும் விவசாயிகளை மேலும் குழப்பித் தங்கள் பொருள்களை விற்பனை செய்ய முயலும் இயற்கை உர உற்பத்தி நிறுவனங்கள்,
மக்களுக்கு நஞ்சில்லாத உணவு மேல் ஏற்பட்டிருக்கும் ஆர்வத்தை தவறாக பயன்படுத்தி நஞ்சுல்ல பொருள்களையே மிக அதிக விலைக்கு விற்கும் சில கொள்ளைக்கார வியாபாரிகள்,
வெளியில் விற்கும் விலையை விட அதிக விலை சொல்லி கொடுக்கப்படும் ஸ்டால் ஆபர்கள்,
இதை எல்லாம் தெரிந்தும் நொந்துபோகாமல், படபடப்பு அடையாமல் தனக்கு வேண்டியதை தேடி நகர்ந்து கொண்டே செல்லும் விவரமான அனுபவமுள்ள விவசாயிகள்.
இத்தனை இடர்பாடுகள் இருந்தாலும் இந்தக் கண்காட்சி வெற்றி பெற காரணமே, ஆழ்ந்த தேடலில் இருக்கும் உண்மையான நேரடி விவசாயிகள் மற்றும் அந்தத் தேடலை பூர்த்தி செய்ய விரும்பும் பல நிறுவனங்களுமே, ஆனால் நாம் போக வேண்டிய தூரம் மிக அதிகம்.
அடுத்த வருடம் நடக்கும் கண்காட்சியில் கண்காட்சி நிர்வாகம் அல்லது மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் தேவையை 100% அறிய ஒவ்வொரு துறைக்கும் ஒரு வல்லுநர் குழுவை அமைத்து, தேவையுள்ள விவசாயிகள் தங்களின் மனதில் உள்ள தேவைகளை துறை வாரியாக உள்ள அந்தக் குழுவில் தெரிவித்து, அந்தக் குழு அந்த விவசாயியின் மனதில் உள்ளதை ஒரு படைப்பாக வெளியே கொண்டு வரும் வரை சேர்ந்து வேலை செய்ய வேண்டும், இது போல் செய்தால் விவசாயிகளுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும்.
நன்றி : திரு . சொ .ஜெய்சங்கர், சிவகிரி, ஈரோடு
Please Read Also:
சீனாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆவதற்கு முன்பு அதிக தோல்விகளையும் புறக்கணிப்புகளையும் சந்தித்த AliBaba நிறுவனர் ஜாக் மா