பிள்ளைகளுக்கு : பிரச்சனைகள், சவால்கள், கடினமான சூழ்நிலைகளை நிர்வகிப்பதற்கு கற்று கொடுப்போம்
எங்கள் நிறுவனத்தில் என்னுடன் வேலை பார்க்கும் ஒருவர் ஒரு வேலை தொடர்பான சிறிய பிரச்சனை ஏற்பட்டபோது அதை சமாளிப்பதற்கு தைரியம் இல்லாமல் துவண்டு போனார். அந்த பிரச்சனை சமாளிக்க கூடிய ஒன்றே என்றாலும், அவர் துவண்டு போனதற்குக் காரணம் மன தைரியம் இல்லாததே. யாரவது லேசாகத் திட்டினால் கூட மிகவும் வருத்தப்படுவார். இதேபோல் பல சவால்களை சமாளிக்க முடியாமல் திணறுவார். இத்தனைக்கும் அவர் பள்ளி, கல்லூரிகளில் மிகவும் நன்றாக படித்தவர்.
இத்தகைய சூழ்நிலைகளை சமாளிக்க (manage) முடியாத இயலாமைக்கு காரணம் அவர் இளமையில் வளர்க்கப்பட்ட விதம்தான் என்பதை அவரே பல நேரங்களில் ஒப்புக்கொண்டிருக்கிறார். இப்பொழுது பெரும்பாலான வீடுகளில் உள்ள பிள்ளைகளின் வளர்ப்பு முறைகளை ஒத்த வளர்ப்பு முறையில்தான் அவரும் வளர்ந்தது.
பெரும்பாலான பெற்றோர்களால் இன்று பிள்ளைகள் ஒரு சௌகரியமான சூழ்நிலைகளில் (comfort zone), மிகவும் பாதுகாப்பாக வளர்க்கப்படுகிறார்கள். வெறும் புத்தக அறிவு மட்டும் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிடலாம் என்ற சுற்றுப்புறத்தால் உருவாக்கப்பட்ட மாய உலகை நம்பி தங்கள் பிள்ளைகளிடம் படிப்பை மட்டுமே முன்னிறுத்துகிறார்கள்.
பிள்ளைகளை சமூக தொடர்புகளை ஏற்படுத்தவிடாமல், வெளியில் யாரிடமும் பேச விடாமல், நண்பர்களுடன் பழக விடாமல், விளையாடவிடாமல், சொந்தங்கள் மற்றும் சுற்றத்தார் வீட்டிற்கே போகவிடாமல், எந்தவித திருவிழா, நிகழ்ச்சிகள் மற்றும் விசேஷசங்கள் கலந்துகொள்ள விடாமல், எந்தவித சாகசம், விருப்பம், கற்பனை சார்ந்த விஷயங்களில் பங்குபெற விடாமல் செய்கிறோம். இதன் காரணம் பிள்ளைகள் படிப்பு மற்றும் படிப்பு சார்ந்த விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தவேண்டும் மற்றும் பிள்ளைகளுக்கு எவ்வித பிரச்சனைகளும், சவால்களும் ஏற்பட்டுவிடகூடாது.
பிள்ளைகளை அறிவாளி ஆக்குகிறோம், வாழ்க்கையில் வெற்றி பெற செய்கிறோம் என்று நினைத்து படிப்பை மட்டும் திணித்து பிள்ளைகளின் ஆளுமையை வளர்க்க செய்யாமல், சவால்களை சமாளிக்கும் திறமையை, தோல்வியில் துவளாமல் மீண்டு வரும் குணத்தை, எடுத்த காரியத்தை விட்டுவிட கூடாது என்ற மனநிலையை,
கற்பனை வளம், தன்னம்பிக்கை, சுயமாக சிந்திக்கும் தன்மை, சமூக பிணைப்பு, சக மனிதர்களுடன் பழகும் விதம், தலைமைத்துவம், எதையும் கையாளும் திறமை, பேச்சு திறமை வளர்க்கவிடாமல் செய்துகொண்டிருக்கிறோம்.
இன்றைக்கு பல துறைகளில் சாதனையாளர்களாக உள்ளவர்கள் பல பேர் ஏதோ ஒரு தருணங்களில் பிரச்சனைகளையும், சவால்களையும் சந்தித்தவர்கள்தான். அந்த பிரச்சனைகளிலிருந்து தங்களின் கனவுகளை வடிவமைத்து அதை அடைய முயற்சி செய்து வெற்றி பெற்றவர்கள்.
பிள்ளைகள் வெற்றி பெறவேண்டும் என்று நினைக்கும் நாம் அவர்களுக்கு பிரச்சனைகளும், சவால்களும் ஏற்படாதவாறு படிப்பை மட்டும் முன்னிறுத்தி ஒரு சௌகரியமான சூழ்நிலையில் வளர்ப்பது அவர்கள் எதிர்காலத்தில் பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கும், சவால்களை சமாளிக்கும் ஒரு முன் அனுபவத்தை அழிப்பதற்கும் சமம்.
பிள்ளைகளுக்கு பிரச்சனைகள் (problems), சவால்கள் (challenges), கடினமான சூழ்நிலைகள் (tough situation) வந்தால் எப்படி எதிர்கொள்வது, நிர்வகிப்பது என்ற ஆலோசனைகளையும், தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் கொடுத்து பிள்ளைகளை தயார்படுத்தவேண்டுமே தவிர, பிரச்சனைகளே வரக்கூடாதவாறு வளர்ப்பது, அவர்களின் எதிர்காலத்தில் பிரச்சனைகளை உருவாவதற்கு நாமே வழிவகுப்பதற்கு சமம்.
Please Read This Article:
கார்ப்பரேட்டும், நம்மூர் ஐயப்பன் டீ கடையும்!