Sam Walton (Founder Of WallMart) அறிவுரைகள்
Wallmart என்ற மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை தொடங்கியவர் Sam Walton. Sam Walton தொடங்கிய Walmart-தான் உலகின் மிகஅதிக சில்லறைவர்த்தக அங்காடிகளை கொண்டது. Sam Walton தொழில்முனைவோர் வெற்றி பெறுவதற்கென சில அறிவுரைகளை கூறியுள்ளார்.
1.தீர்க்கமுடியாத பிரச்சனை என்று எதுவுமே கிடையாது.மேல்பார்வைக்குத் தீவிரமாகத் தோன்றுகிற சாவால்களைக்கூட தைரியமாக ஏற்றுப் போராடுங்கள். ஜெயித்தால் சந்தோஷம், தோற்றால் அனுபவம் – இரண்டுமே விலைமதிக்க முடியாத சொத்துக்கள்!
2.வெற்றி என்பது எல்லோருக்கும் சொந்தமானது. சரியான வாய்ப்பும் ஊக்கமும் தரப்பட்டால், சாதாரண மனிதர்களால் கூட, பல பெரிய வெற்றிகளை பெறமுடியும்.
3.நீங்கள்தான் முதலாளி என்பதற்காக, யாரும் வேலையிலிருந்து நீக்கமுடியாது என்று நினைத்துவிடாதீர்கள். உங்களையும் வெளியே அனுப்பக்கூடிய ஒருவர் இருக்கிறார், அவர்தான் வாடிக்கையாளர்!
4.வணிகத்துறையில் பெரியதாக ஜெயிக்கவேண்டுமென்றால், நாம் நம்முடைய லாபத்துக்காக மட்டும் உழைக்கக்கூடாது. நமது வாடிக்கையாளர்களுடைய லாபத்துக்காகவும் உழைக்கவேண்டும்.
5.ஒரு கடைக்கு பலவிதமானவர்கள் வருவார்கள். ஆகவே அவர்கள் எல்லோருடைய எதிர்பார்ப்புக்கும் பொருந்தும்படியான பொருள்களைத் தருவது அவசியம்.
6.அடுத்தவர்கள் செய்கிற நல்ல விஷயங்கள்,லாபம் ஈட்டும் முறைகள், தொழில் உத்திகளை கவனித்து, அவற்றை தாராளமாக பின்பற்றுங்கள். இந்த விஷயத்தில் காப்பியடிப்பது தவறே இல்லை.
7.ஊழியர்களுக்கு லாபத்தின் ஒரு பகுதியைத் தரும்போது அவர்களுடைய செயல்திறனும், ஊக்கமும் அதிகரிக்கும். பல திறமைசாலி ஊழியர்களைக் கண்டறிந்து அவர்களிடம் பொறுப்பை ஒப்படைப்பதுதான், பெரிய அளவில் வளர்வதற்கான வழி.
8.விற்பனை மையங்கள் நகரின் மையமான இடத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். அதிக நேரம் திறந்திருக்கவேண்டும். அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களை ஈர்க்க இதுதான் வழி.
9.நமது கடைக்குள், வாடிக்கையாளர்கள் எந்த அளவு செளகாரியமாக உணர்கிறார்களோ, அந்த அளவு அவர்கள் அதிகம் பொருட்களை வாங்குவார்கள். அவர்களை சிரமப்படுத்தாதபடி வேண்டிய வசதிகளை செய்துகொடுங்கள். ஷாப்பிங் என்பதை ஓர் உற்சாகமான அனுபவமாக மாற்றுங்கள். உங்கள் கடையில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும், லாபமும் தானாக அதிகரிக்கும்.
10.ஒரு நல்ல யோசனையை, உடனே செயல்படுத்துங்கள். ஆனாலும் அதைச் யோசித்து செயல்பட மறவாதீர்கள்.
11.நாம் நம்முடைய பழைய சாதனைகளில் திருப்தியடைந்து மகிழ்ந்துவிட்டால், நாம் அங்கேயே தேங்கி நின்று விடுவோம். அதை மறந்துவிட்டு, அடுத்து என்ன என்கிற ஆர்வத்துடன் வாழ்க்கையை அணுகினால், மேலே மேலே சென்று கொண்டே இருக்கலாம்.
12.நமது தொழிலைப் பல பகுதிகளுக்கு விரிவுபடுத்தும்போது, அந்த பகுதிகளில் உள்ள மக்களோடு நெருங்கிப் பழகுவதற்கான, அவர்களுடைய மனதில் நம் நிறுவனத்தின் பெயரை பதிவு செய்வதற்கான முயற்சிகளை தொடங்கவேண்டும். மக்களிடம் ஏற்படும் இந்த நெருக்க உணர்வுதான் அவர்களை நம்முடைய வாடிக்கையாளர்களாக்கும்.
13.வளர்ச்சி என்பது முடிவற்ற ஒருநிலை. ஆகவே சின்னச் சின்ன எல்லைகள், இலக்குகளில் திருப்தியடைந்துவிடக் கூடாது.
14.ஒரு நிறுவனத்தின் அடிப்படை கொள்கைகள், நம்பிக்கைகள் என்னென்ன என்பதை நிறுவனத்தின் கடைநிலை ஊழியர்கள்வரை எல்லோருக்கும் சென்று சேரவேண்டும். அப்படி உருவாகும் இயல்பான கலாசாரம்தான், அந்நிறுவனத்துக்குப் பெரிய வெற்றிகளைத் தேடித் தரும்.
15.தனிப்பட்டமுறையிலும், தொழிலிலும் சிக்கனம் என்பது மிகப் முக்கியமான விஷயம். நாம் சேமிக்கிற ஒவ்வொரு துளியும், தவிர்க்கிற ஒவ்வொரு அநாவசிய செலவும் நமது லாபத்தை அதிகரிக்கும்.
16.எல்லா தொழில்களிலும் காலப்போக்கில் பல மாற்றங்கள் உருவாகிக்கொண்டுதான் இருக்கும். தேவைப்பட்டால் அவற்றுக்கேற்ப நமது செயல்பாடுகளை மாற்றிக்கொண்டு தொடர்ந்து முன்னேறவேண்டும் .
17.நிறுவனங்களின் பொறுப்பு வெறும் விற்பனையோடு மட்டும் முடிந்துவிடவில்லை. நிறுவனத்தில் இயங்கும் எல்லா பிரிவுகளும் சிறப்பாகச் செயல்பட்டால்தான் ஒட்டுமொத்த வெற்றியும் லாபமும் அதிகரிக்கும்.
18.நம்முடைய வெற்றிக்கு நாம் மட்டும் உரிமைகொண்டாடமுடியாது. வெற்றிக்கான பயணத்தில் நமக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவியவர்கள் எல்லோரையும் மறக்காமல் நினைவு கூர்வதும், அவர்களோடு அந்த வெற்றியை பகிர்ந்துகொள்வதும் அவசியம்.
19.தொழிலில் வெற்றிபெருவதற்குப் ‘பழைய’ அந்தகால கொள்கைகள், நம்பிக்கைகளெல்லாம் சரிபடாது என்று நினைக்காதீர்கள். அவை எக்காலத்துக்கும் பொருந்தக்கூடியவை.
20.பணமும், வெற்றியும் நமக்கு கிடைக்கும்போது, அதோடு சேர்ந்து வரும் விஷயம் பொறாமை. நம்மைப்போல் வெற்றியடையமுடியாதவர்கள், அந்த இயலாமையை காட்ட நம்மைப்பற்றி பலவிதமாக பேசுவார்கள். நமது முன்னேற்றத்திற்கு தடைப்போட முயல்வார்கள். அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல், நமது வெற்றிப் பயணத்தை தொடரவேண்டும்.