நாட்டின் முன்னணி தொழிற் குழுமமான டாடா வின் தலைமை பொறுப்பில் தமிழர்கள்: திரு.நடராஜன் சந்திரசேகரன், திரு.ராஜேஷ் கோபிநாதன், திரு.கணபதி சுப்ரமணியம்
சந்தை முதலீடு மற்றும் வருவாய் அடிப்படையில், இந்தியாவின் மிகப்பெரிய தனியார் பெருநிறுவன குழுமமாக டாட்டா குழுமம் (TATA Group) உள்ளது. டாட்டா குழுமமானது தற்போது பல வணிகப் பிரிவுகளில் 100 க்கும் மேற்பட்ட நிறுவனங்களையும் துணைநிறுவனங்களையும் கொண்டுள்ளது. டாட்டா குழுமம் 6 கண்டங்களில் 85 நாடுகளுக்கும் மேலாக தனது செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. இந்தக் குழுமமானது அதன் நிறுவனர் ஜாம்சேத்ஜி டாட்டா அவர்களால் தொடங்கப்பட்டது.
டாடா சன்ஸ் குழுமம் (Tata Sons Ltd), சர்வதேச அளவில் டாடா குழுமத்தின் துணை நிறுவனங்கள் மற்றும் வர்த்தக பணிகளை நிர்வகித்து வருகிறது. இந்நிறுவனத்தின் தலைவராக கடந்த 2011ம் ஆண்டு நியமிக்கப்பட்ட சைரஸ் மிஸ்த்ரி (Cyrus Mistry) பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் சைரஸ் மிஸ்த்ரி நீக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழகத்தை சேர்ந்த திரு.நடராஜன் சந்திரசேகரன் (Natarajan Chandrasekaran) அவர்கள் டாடா சன்ஸ் குழுமத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ரத்தன் டாடா (Ratan Tata) தலைமையிலான 5 பேர் கொண்ட குழு புதிய நிறுவன தலைவரை தேர்வு செய்தது.
# நடராஜன் சந்திரசேகரன் (Natarajan Chandrasekaran)
திரு.நடராஜன் சந்திரசேகரன் (53 வயது) அவர்கள் நாமக்கல் அருகே மோகனுரில் 1963-ல் பிறந்தவர்.கோயம்புத்தூர் தொழில்நுட்ப கல்லூரியில் Applied Sciences ல் இளநிலை பொறியியல் பட்டத்தை பெற்றார். திருச்சி ஆர்.இ.சி கல்லூரியில் (இப்போது என்.ஐ.டி, திருச்சி) Computer Applications ல் முதுநிலை பொறியியல் பட்டம் பெற்றவர். இப்போது நடராஜன் சந்திரசேகரன் தற்போது டிசிஎஸ் (TCS) நிறுவன தலைமைச் செயல் அதிகாரியாக (Chief Executive Officer) உள்ளார். பிப்ரவரி 21, 2017 முதல் டாடா சன்ஸ் நிறுவன தலைவராக செயல்படுவார்.
1987-ம் ஆண்டு டிசிஎஸ் நிறுவனத்தில் நடராஜன் சந்திரசேகரன் சேர்ந்தார். இவரது தகுதி மற்றும் திறமை இவரை தலைமைச் செயலதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் பதவிகளுக்கு உயர்த்தியது.
# ராஜேஷ் கோபிநாதன் (Rajesh Gopinathan)
திரு.நடராஜன் சந்திரசேகரன் டாடா சன்ஸ் நிறுவன புதிய தலைவராக நியமிக்கப்பட்டதை அடுத்து திரு.ராஜேஷ் கோபிநாதன் (Rajesh Gopinathan) அவர்கள் தற்போது டிசிஎஸ் (TCS) நிறுவன புதிய தலைமைச் செயல் அதிகாரியாக (CEO) நியமிக்கப்பட்டுள்ளார். 2011 ஆண்டிலிருந்து டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக (Chief Financial Officer) இருந்து வருகிறார். 1994 இல் திருச்சி என்.ஐ.டி யில் மின் மற்றும் மின்னணு பொறியாளர் பட்டம் பெற்றவர். முதுநிலையை ஐ.ஐ.எம் (IIM) அகமதாபாத் முடித்தவர்.
# கணபதி சுப்ரமணியம் (Ganapathy Subramaniam)
திரு.N கணபதி சுப்ரமணியம் (N Ganapathy Subramaniam) அவர்கள் தற்போது டிசிஎஸ் நிறுவன தலைவர் மற்றும் புதிய முதன்மை இயக்கு அலுவலராக (chief operating officer) நியமிக்கப்பட்டுள்ளார். டிசிஎஸ் நிர்வாக குழுவின் இயக்குனராகவும் (director on the board) தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். இவர் டாடா சன்ஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திரு.நடராஜன் சந்திரசேகரன் அவர்களின் அண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது. சுப்ரமணியம் அவர்கள் TCS Financial சொலுஷன்ஸ் தலைவராக செயல்பட்டு வருகிறார்.
டிசிஎஸ் (TCS) $ 16.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் 371,000 ஊழியர்களை கொண்டுள்ள நாட்டின் மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமாகும்.
நாட்டின் முன்னணி தொழிற் குழுமத்தின் தலைமை பொறுப்பில் தமிழர்கள் அமருவது முன்மாதிரியாகவும், மிகவும் பெருமைபட வேண்டிய விஷயமாகும்.
Please Read Related Article: