13 ஆயிரம் ரூபாயில் தொடங்கி இந்தியாவின் மிகப் பெரிய பால் பொருள்கள் நிறுவனமான ஹட்சன் நிறுவனத்தை உருவாக்கிய : ஆர். ஜி. சந்திரமோகன்
அருண் ஐஸ் கிரீமை சுவைக்காதவர் நம்மில் யாரும் இருக்கமுடியாது. அருண் ஐஸ் கிரீம் மட்டுமல்ல ஆரோக்யா பால், கோமாதா பால், Hatsun Dairy பொருட்கள், Oyalo Gravy & snacks, சந்தோசா கால் நடை தீவனம் மற்றும் நம்மை கவர்ந்திழுக்கும் Ibaco Ice Cream என்று நாம் எல்லோரும் கேட்டு வாங்கும் படியான பிராண்டை உருவாக்கியவர் ஆர். ஜி. சந்திரமோகன்.
இந்தியாவின் மிகப்பெரிய பால் சார்ந்த பொருள்கள் நிறுவனமான ஹட்சன் (Hatsun Agro Product) நிறுவனத்தை நிறுவியவர் சந்திரமோகன் (R.G. Chandramogan). இந்த ஆண்டு வருமானம் ரூ . 3,600 கோடிக்கும் மேல் ஆகும். இத்தனைக்கும் இங்நிறுவனம் வெறும் 13,000 ரூபாயில்தான் தொடங்கப்பட்டது.
தொடக்கம்
சந்திரமோகன் சிவகாசிக்கு அருகில் உள்ள திருத்தங்கல் என்கிற ஊரில் பிறந்தார். தந்தை ஆசிரியர். இவர் வசதியான குடும்பத்தை சேர்ந்தவரில்லை. பியுசி தேர்வில் தோல்வியடைந்தவர்.
சிறு வயதில் ஐஸ் கிரீம் என்பது அவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகவே இருந்திருக்கிறது. அதை வாங்குவதற்காக சில்லறைகளை சேர்த்து வைப்பாராம். இந்த விருப்பமே பிற்காலத்தில் ஐஸ் கிரீம் சார்ந்த மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்க தூண்துதலாக இருந்திருக்கிறது.
தன் குடும்ப சொத்துக்கள் சிலவற்றை விற்று, அதன்மூலம் கிடைத்த 13,000-ரூபாயில் ஆர். ஜி. சந்திரமோகன் அன் கோ., என்ற நிறுவனத்தை 1970 ல் நிறுவினார். அருண் ஐஸ் கிரீம் என்று பெயர் வைக்கப்பட்டது. அப்போது அவருக்கு வயது 21. முதலில் தள்ளுவடியில் சென்று 10 பைசாவிற்கு ஐஸ் கிரீம் விற்றார்.
எந்த ஒரு தொழிலும் உடனடியாக வெற்றிக்கனியை சுவைத்து விடுவதில்லை. பயணங்களில் பல தடைக்கற்களை சந்தித்த பிறகே வெற்றி இலக்கை எட்டி இருக்கிறார்கள். அதேபோல் அவரும் 10 ஆண்டுகள் பல போராட்டங்களை சந்தித்தார்.
அந்த சமயத்தில் நிதியளவிலும், சந்தையளவிலும் பெரிய நிறுவனங்களாக இருந்த Dasaprakash, Joy and Kwality ஐஸ் போன்றவரிடமிருந்து போட்டியை சந்தித்தார். அவருக்கு மார்க்கெட்டிங் பற்றின அறிவு அப்பொழுது குறைவானதாகவே இருந்தது. அதனால் சபரி கல்லூரியில் marketing management, export management and personal management course ஐ படித்தார்.
1986-ல் இது Hatsun Foods Private Ltd என்று பெயர் மாற்றி நிறுவப்பட்டது. 1991 ல் 3 கோடி வருமானத்தை ஈட்டியது. ஐஸ் கிரீம் செய்வதற்கு பாலை கொள்முதல் செய்யவேண்டும் என்பதால் பாலையும் விற்கலாம் என்று தோன்றவே, 1995 ல் ஆரோக்கிய பால் தொடங்கப்பட்டது.
எந்த ஒரு தொழிலையும் வெற்றி பெற சிறந்த ஐடியா முக்கியம். அந்த வகையில் “அர்ஜூன் அம்மா யாரு?” என்ற வித்தியாசமான விளம்பரத்தை பயன்படுத்தி ஆரோக்கியா பாலினை மக்களிடம் கொண்டு சேர்த்தது ஹட்சன் நிறுவனம்.
இன்று ஆரோக்கியா பால் மட்டும் வருடத்திற்கு ரூ.1400 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுகிறது. பால் மட்டுமல்ல மோர், தயிர்,வெண்ணெய், நெய் மற்றும் பிற பால் பொருட்களையும் உற்பத்தி செய்கிறது ஹட்சன் நிறுவனம்.
2012 ல் Hatsun நிறுவனம் மற்றொரு ஐஸ் கிரீம் பிராண்டான Ibaco ஐ தொடங்கியது. 8000 கிராமங்களில் உள்ள 3.5 இலட்சம் விவசாயிகளிடமிருந்து பாலை கொள்முதல் செய்கிறது. இதன் பணியாளர்கள் பாலை கொள்முதல் மற்றும் விற்பனை செய்ய தினசரி 402500 கி.மீ. பயணிக்கின்றனர்.
மகனை நன்றாக படிக்கவைக்கவேண்டும் என்று ஆசைப்பட்ட அப்பாவின் எண்ணத்தை பியுசியில் தோல்வியடைந்து பொய்யாக்கினாலும், தொழில் செய்து வெற்றி பெற்று அமெரிக்காவின் ஹார்வார்டு பல்கலைக்கழகம் உட்பட பல பல்கலைக்கழகத்தில் உரையாற்றி அப்பாவின் ஆசையை விட அதிகமாக சாதித்து காட்டினார்.
ஒருமுறை சந்திரமோகன் விஜய் டிவியில் உன்னால் முடியும் நிகழ்ச்சியில் கூறியது, “அது 1970-ம் ஆண்டு. என் கையில் பதினைந்தாயிரம் ரூபாய் பணமிருந்தது. ‘பணத்தைப் பெருக்கணும். அதேசமயம், அது பாதுகாப்பாவும் இருக்கணும். என்ன செய்யலாம்’னு யோசிச்சேன். அனுபவம் நிறைந்த பெரியவர் ஒரு யோசனை சொன்னார். ‘கையில் வைத்திருக்கிற பணத்தில் ஒரு பகுதியை, தங்கத்தில் முதலீடு செய். இன்னொரு பகுதியைக்கொண்டு நல்ல இடத்தில் வீட்டு மனை ஒன்றை வாங்கிப் போடு. மிச்சமிருக்கும் பணத்தை வட்டிக்கு விடு. இந்த மூன்று ஏரியாக்களிலும் பணத்தைப் பிரித்து முதலீடு செய்வதுதான் புத்திசாலித்தனம்’ என்றார்.
அதன்படி, என்னிடமிருந்த பணத்தைத் தங்கத்தில் முதலீடு செய்திருந்தால், அன்று சுமார் 125 சவரன் வாங்கியிருக்க முடியும். இப்போது அதன் விலை சுமார் ஆறு லட்சம் ரூபாயாகப் பெருகி இருக்கும்.
அதே பதினைந்தாயிரம் ரூபாயைக் கொண்டு, அப்போது சென்னையில் இரண்டு வீட்டு மனை வாங்கியிருக்க முடியும். அப்படிச் செய்திருந்தால் அதன் இன்றைய விலை அறுபது லட்சமாகப் பெருகியிருக்கும்.
என்னிடமிருந்த தொகையை பன்னிரண்டு சதவிகித வட்டிக்கு விட்டிருந்தால், அது இன்று சுமார் பதின்மூன்று லட்ச ரூபாயாக வளர்ந்திருக்கும்.
ரிஸ்க் எடுக்க விரும்பாமல் பாதுகாப்பான வழியில் பணத்தை முதலீடு செய்திருந்தால் அதிகபட்சமாக இந்த அளவுக்குதான் நான் பணத்தைப் பெருக்கியிருக்க முடியும். ஆனால், நான் கையிலிருந்த பணத்தைத் தொழிலில் முதலீடு செய்தேன். இப்போது அது, பலநூறு கோடிகள் மதிப்புள்ள தனியார் துறையின் நம்பர் ஒன் பால் உற்பத்தி செய்யும் நிறுவனமாக வளர்ந்திருக்கிறது”.
Please Read Also:
1009 முறை விடாமுயற்சி செய்து 65 வயதில் KFC என்ற மிகப்பெரிய பிராண்டை உருவாக்கிய கேணல் சாண்டர்ஸ்