விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வரை 7% வட்டியில் குறுகிய கால பயிர்க்கடன்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
நடப்பு நிதியாண்டில் (2016-17) விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வரை 7 சதவீத வட்டியில் குறுகிய கால பயிர் கடன் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. வட்டி மானியத் திட்டத்துக்கு (interest subvention scheme) மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி நடப்பு நிதியாண்டில் விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வரை 7 சதவீத வட்டியில் (interest) குறுகிய கால பயிர் கடன் (short-term crop loans) வழங்கப்படும். இந்த கடனை ஓராண்டுக்குள் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு மேலும் வட்டி மானிய சலுகையாக 3 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும். இதன்மூலம் குறிப்பிட்ட காலத்தில் கடனை திருப்பிச் செலுத்துவோர் 4 சதவீத வட்டியில் கடன் பெற முடியும்.
நடப்பு நிதியாண்டில் வங்கிகளுக்கான வேளாண் கடன் இலக்கு ரூ.9 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் வேளாண் கடனுக்கான வட்டி மானியத் திட்டத்துக்காக (interest subvention scheme) வங்கிகளுக்கு மத்திய அரசு 15 ஆயிரம் கோடி வழங்கும்.