அமெரிக்காவில் தமிழ் அன்னைக்கு மகுடம் சூட்டிய : FeTNA – 2016 “தமிழ் சங்கங்களின் சங்கமம்”
வட அமெரிக்க தமிழ் சங்கப் பேரவையின் 29 வது விழா FeTNA – 2016 ஜூலை மாதம் முதல் நான்கு நாட்களில் நியூ ஜெர்ச்சி நகரில் அரங்கேறியது. திரை கடல் ஓடிய தமிழர்கள், பல அமெரிக்க தமிழ் சங்கங்கள் நியூ ஜெர்ச்சியில் ஒன்றாய் திரண்ட அன்றைய தினத்தில் தமிழ் அன்னைக்கு மகுடம் சூட்டப்பட்டது. தமிழ் மண்ணில் மதிப்பை குறைந்து வரும் பறையாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், காவடியாட்டம், கும்மியாட்டம் போன்ற பல தமிழரின் கலைகள் அங்கு நடந்தேறி நிகழ்ச்சியின் மதிப்பை கூட்டின.
நாஞ்சில் பீட்டர் ஐயா முன்னின்று நடத்திய இலக்கிய வினாவிடை போட்டி, உலக பொதுமுறை திருக்குறளை கற்றுத் தேர்ந்தவருக்கான குறள் தேனீப் போட்டி, நாடகங்கள், நாட்டிய நாடகம், இலந்தை இராமசாமி அவர்களின் தலைமையில் நடந்தேறிய கவியரங்கம், ‘நலவாழ்வுக்குப் பெரிதும் உதவுவது உணவா? மருந்தா?’ என்ற தலைப்பில் மருத்துவர் சிவராமன் நடத்திய கருத்துக்களம், தமிழ் பிள்ளைகளை தமிழில்தான் வாழ்த்த வேண்டும் என்று பறைசாற்றிய வலைத்தமிழ் வழங்கிய ‘தமிழில் பிறந்தநாள் வாழ்த்து’ பாடல் வெளியீடு,
தமிழின் வேர்களைத் தேடி உலகமெங்கும் சுற்றும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நிறுவனர் சுபாசினியின் உரை, பேராசிரியர் இராமசாமி அவர்களின் தமிழ் மொழிக் கல்வியின் வேறுபட்ட நிலைமைகளும் தேவைகளும் பற்றிய சொற்பொழிவு, டி.எம்.கிருஷ்ணா அவர்களின் தமிழிசை, பாடகர்களின் மெல்லிசை நிகழ்ச்சிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் குறும்படங்களின் கவுரவிப்பு நிகழ்ச்சி, ஈழத்தின் பெருமை பேசிய பாஸ்டன் நகர குழந்தைகளின் ஈழம் வெல்லும் ஒருநாள், 70 பேர் பங்கேற்ற வாஷிங்டன் தமிழ் சங்கத்தின் மரபு கலைகள், சாலை விதிகள் பற்றி பேசி மவுன நாடகம்,
பல நூற்றாண்டிற்கு முன்பே கடல் கடந்து வாணிபம் செய்த தமிழினத்தின் விழுதுகள் நாம் என்பதை உறுதி செய்யும் வகையில் நடந்த தொழில்முனைவோர் இணையரங்கு (TEFCON2016), தமிழன் கடல் கடந்து வந்தது வாழ்வதற்கு மட்டுமல்ல ஆள்வதற்கும் தான் என்று மார்தட்டும் விதத்தில் அமைந்தது அயல் மண்ணில் அரசியல் களம் கண்ட கேரி ஆனந்த சங்கரி மற்றும் இராஜா கிருஷ்ண மூர்த்தியின் வருகை,
சாதனை தமிழருக்கு விருது வழங்கிய அமெரிக்க தமிழர் முன்னோடி விருது வழங்கும் விழா, அனைத்து மாநில தமிழ் சங்கங்களின் கொடி அணிவகுப்பு போன்ற தமிழை வளர்க்கும் பல நிகழ்ச்சிகள் அமெரிக்காவில் அரங்கேறியது.
நிகழ்ச்சியின் விழா மலரை பேராசிரியர் இராமசாமி வெளியிட மருத்துவர் சிவராமன் பெற்றுக்கொண்டார்.