கார்ப்பரேட்டும், நம்மூர் ஐயப்பன் டீ கடையும்!
வியாபாரம் என்பது பல செயல்களை ஒருங்கிணைத்து இலாபம் பண்ணுகிற நோக்கத்தோடு பொருள்களையே, சேவையையோ விற்பனை செய்வது. கார்ப்பரேட் ஆனாலும் சரி, உள்ளூர் கடைகள் ஆனாலும் சரி அவர்கள் விற்பனை செய்வது பொருள்களையும், சேவையையும் தான். கார்ப்பரேட்களுக்கும் (corporate), நம்மூர் கடைகளுக்கும் அடிப்படை தொழில் நிர்வாக (business administration) தத்துவங்கள் எல்லாம் ஒன்றுதான்.
நம் வீட்டிற்கு வெளியே எட்டிப் பார்த்தால் போதும். நம் வீட்டிற்குப் பக்கத்தில் ஒரு டீக்கடை இருக்கிறது. ஐயப்பன் டீ ஸ்டால் என்ற கடை. முதலாளி ஐயப்பன். அவர் கடையில் ஸ்டராங் டீ குடித்தால் தலைவலி பறந்தோடும், புத்துணர்வு கிடைக்கும், மூளை சுறுசுறுப்பாகும். காலையில் இட்லி, பொங்கல், மதியம் குஸ்கா, தக்காளி, லெமன், தயிர் சாதம், இரவு புரோட்டா, தோசை, இட்லி என அந்த ஊரின் டீ மற்றும் ஹோட்டல் உணவு தேவையை பூர்த்தி செய்து வருகிறது.
கொதிக்கும் பாய்லர் பக்கத்தில் நின்றுகொண்டு ஐயப்பன்தான் டீ போடுவார். அவரே கல்லாவையும் பார்த்துக்கொள்வார். டிபன், மதியம் சாப்பாடு தயாரிக்க மற்றும் இரவு புரோட்டா போடுவதற்கு மாஸ்டர் கணேஷ் மற்றும் செந்தில், பாத்திரங்கள் கழுவ, காய்கறி வெட்ட மற்றும் இதர வேலைகளுக்கு காவேரி அம்மாள், உணவு பரிமாற, பார்சல் கட்ட, மற்ற எடுபிடி வேலைகளுக்கு கோபால் என்ற இளைஞன்.
ஐயப்பன் கடையில் என்ன செய்கிறார்கள் என்று ஒரு நாள் கவனிப்போம். அதிகாலையில் ஊர் பால் காரரிடம் பால் வாங்குகிறார். பிறகு பாண்டியன் மளிகை கடையில் டீத்தூள், சர்க்கரை, மற்ற மளிகை சாமான் வாங்குகிறார். கதிரவன் காய்கறி கடையில் காய்கறி வாங்குகிறார். டீ போடுகிறார்கள். உணவு சமைக்கிறார்கள். வியாபாரம் நடக்கிறது .
இரவு கடை மூடுமுன், ஐய்யப்பன் வரவு செலவுக் கனக்குப் பார்க்கிறார். டீத்தூள், சர்க்கரை, மளிகை சாமான் பாக்கி இருக்கிறதா, வாங்க வேண்டுமா, எவ்வளவு வாங்க வேண்டும் என்று முடிவு எடுக்கிறார். ஐயப்பன் எதற்காக வியாபாரம் செய்கிறார் ? வருமானத்திற்காக.
பால், டீத்தூள், மளிகை பொருட்கள், காய்கறி வாங்குகிறார், ஹோட்டலில் வேலை செய்பவர்களுக்கு சம்பளம் தருகிறார், கடை வாடகை கொடுக்கிறார், போன்ற பல செலவுகளை செய்கிறார். அவர் செய்யும் அனைத்து செலவுகளுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டவேண்டும். அதற்கு அவர் அதிகமாக டீ, சாப்பாடு விற்பனை செய்ய வேண்டும். அவர் செய்த செலவிற்கு அதிகமாக ஈட்டும் பணம்தான் ஐயப்பனின் இலாபம். அவர் உழைப்பது, தொழில் செய்வது இந்த இலாபத்திற்காகத்தான்.
ஐயப்பன் பால், டீத்தூள், மளிகை சாமான் எவ்வளவு இருக்கிறது என்று கணக்கிடுகிறாரே அதுதான் Inventory control. தேவைப்படும் பொருள்களை வாங்குவது Purchase. டீ, டிபன், சாப்பாடு தயாரிப்பது புரொடக்சன் (Production). தேவையான பொருட்களை வாங்குவது முதல் டீ மற்றும் உணவு தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பது வரை Operation Management.
வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் சுவையான டீ போடுவது, உணவு சமைப்பது, வாடிக்கையாளர்களிடம் நட்பாக பேசி அவர்களை நிரந்தர வாடிக்கையாளராக ஆக்குவது இதெல்லாம் மார்க்கெட்டிங் (Marketing). ஐயப்பன் டீ ஸ்டால் என்று பெயர் பலகை வைத்திருக்கிறாரே அது விளம்பரம் (Advertisement).
வரவு செலவுக்கு கணக்கு பார்ப்பது, சம்பளம் கொடுப்பது, பொருட்களை வாங்க பணத்தை ஒதுக்குவது இதெல்லாம் நிதி நிர்வாகம் (Finance Management). கடையில் வேலை பார்ப்பவர்கள் சரியாக வேலை பார்க்கிறார்களா என்று கவனிக்கிறாரே அது ஊழியர் நிர்வாகம் (personnel Management) மற்றும் மனித வள மேலாண்மை (human resource management) . எல்லா வேலைகளும் சரியாக நடக்கிறதா என்று ஐயப்பன் கவனிக்கிறாரே, அது பொது நிர்வாகம் (General Management).
இவை எல்லாத்தையும் ஒருங்கிணைத்து இலாபம் (profit) ஈட்டுகிறாரே இதுதான் பிசினஸ். உலகெங்கும் 5 நட்சத்திர ஹோட்டல்களை கொண்டுள்ள பெரிய கார்ப்பரேட்டான டாட்டா தாஜ் ஹோட்டல்களில் (Taj Hotel) உள்ளது போல், உள்ளூர் ஐயப்பன் டீ ஸ்டாலிலும் புரொடக்சன், ஆபரேஷன், மார்க்கெட்டிங், நிதி நிர்வாகம், மனித வள மேம்பாட்டு, பொது நிர்வாகம் என்ற தொழிலின் அத்தனை பிரிவுகளும் உண்டு.
வித்தியாசம் என்னவென்றால் ஐயப்பன் டீ ஸ்டாலை விட ஆயிரம் மடங்கு அளவிலும், பிரமாண்டத்திலும் பெரியது. ஐயப்பனிடம் வேலை பார்ப்பது 4 பேர் , தாஜ் ஹோட்டலில் வேலை பார்ப்பது 10 ஆயிரம் பேர். ஐயப்பனின் வருமானம் ஆயிரக்கணக்கில், தாஜ் ஹோட்டல் வியாபாரம் ஆயிரம் கோடிக்கும் மேல். ஆனால் உள்ளூர் டீ கடைக்கும் தாஜ் ஹோட்டலுக்கும் அடிப்படை பிசினஸ் முறைகள் எல்லாம் ஒன்றுதான்.
ஹிந்துஸ்தான் யுனி லீவர், இன்போசிஸ், டாடா, ரிலையன்ஸ், ஐடிசி, ஹூண்டாய், ஆதித்யா பிர்லா, மாருதி போன்ற கார்ப்பரேட்களுக்கும், உள்ளூர் கடைகளுக்கும் அடிப்படை பிசினஸ் தத்துவங்கள் ஒன்றுதான்.
Please Read This Article:
தோற்றாலும் ஜெயித்தாலும் மீசையை முறுக்கு : கல்லூரி படிப்பை தொடர முடியாமல் தங்களது கனவை நிறைவேற்றிய 10 கோடீஸ்வரர்கள்