கார்ப்பரேட் கட்டப்பாக்கள்
சுதந்தர இந்தியாவின் தொழிற்துறை பரிணாம வளர்ச்சிக்கு 1991 தாராளமயமாக்கும் கொள்கை வித்திட்டது. அன்று பாய்ச்சிய பாசனத்தில் நடுத்தட்டு குடும்பங்களில் கொழுந்துவிட்ட, படிப்பு என்ற மூலதனத்தைக்கொண்டு வாழ்வில் முன்னேறலாம் என்ற நம்பிக்கை இன்று சிலிக்கான் வேலி (silicon valley) என்று அழைக்கப்படும் சான்ப்ரான்சிஸ்கோவில் ஆலமரமென வீற்றிருக்கும் கணினி வன்பொருள்\ மென்பொருள் நிறுவன கிளைகளில் கொடிகளாய்ப் படர்ந்து தழைத்து வருகிறது.
கொள்கையில் தாராளம் என்பது தன் தோட்டத்து கணிகளை மாற்றான் தன் வளாகத்தில் இருந்தபடியே வளைத்துப் பறிக்கும் அளவிற்கு பிடி தளர்ந்ததுதான் சோகம். புலம்பெயர்ந்த இந்தியர்கள் தங்கள் சந்ததியினருக்கு தாய்நாட்டின் அருமை பெருமைகளை எடுத்துரைக்க முதலில் அவர்களுக்கு வரலாற்று\ பாரம்பரியரீதியில் சரியான புரிதல் இருக்கிறதா?
“கிஸ்தி, திரை, வரி, வட்டி.! வானம் பொழிகிறது பூமி விளைகிறது உனக்கேன் கொடுப்பது கிஸ்தி” என்ற பிரபல வசனத்தை நம் பிள்ளைகளுக்கு இன்றும் மாறுவேடப்போட்டிகளில் ஒப்பனையோடு ஒப்புவிக்க பழக்கியுள்ளோம். அவர்களைப் பொருத்தவரை சிவாஜி கணேசன்தான் வீரபாண்டிய கட்டபொம்மன். வி.கே. ராமசாமிதான் எட்டப்பா. சி.ஆர். பார்த்திபன்தான் ஜாக்சன் துரை.
கப்பம் கட்டச் சொல்லி நிர்பந்தித்ததை எதிர்த்து போராடிய குற்றத்திற்காக, பாஞ்சாலங்குறிச்சி மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மனை ஆங்கிலேயர் ஆட்சியில் திருநல்வேலி ஜில்லா ஆணையராக இருந்த ஜாக்சன் துரை எட்டயபுர ராஜா எட்டப்பனுடன் சிறைபிடிக்க சதித்திட்டம் தீட்டி வஞ்சம் தீர்த்துக்கொண்டான்.
இதுதான் இரத்தினச்சுருக்கமாக நாம் படத்தில் பார்த்த, பாடத்தில் படித்த செய்தி. கட்டபொம்மனை வீரத்தின், அடிமை எதிர்ப்பின் சின்னமாகக் கொண்டாடுகிறோம். நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்துகொள்ளாத எவரையும் எட்டப்பன் வேலை செய்பவன் என்று இகழ்கிறோம். ஆனால் ஆய்வாளர்கள் இதிலுள்ள வரலாற்று பிழையை அடிக்கோடிட்டுக் காட்ட பலமுறை முற்பட்டுள்ளனர்.
அதாவது எட்டப்பனுக்கு ஆங்கில அதிகாரிகளுடன் நல்லிணக்கம் இருந்ததே தவிர உண்மையில் கட்டபொம்மனைக் காட்டிக்கொடுத்தது புதுக்கோட்டை பாளையக்காரர்கள்தான். போரில் தான் வீழ்த்திய மற்றொரு மன்னனின் எட்டுப் பிள்ளைகளுக்கு அப்பனாகியதால் அவர் எட்டப்பர் என்று அழைக்கப்பட்டார்.
இது வேர்களைத் தேடும் காலம். சக்கரத்திலிருந்து சர்க்கரை வரை, விண்வெளிக்கலன்களிலிருந்து வைர அணிகலன்கள் வரை, பூஜ்ஜியத்திலிருந்து முதல் சாம்ராஜ்ஜியம் வரை, சதுரங்கத்திலிருந்து எஃகு, இரும்பு போன்ற உலோகம் வரை உலகிற்கு அறிமுகப்படுத்தியது இந்தியர்கள்தாம் என்று மார்தட்டி பழம்பெருமை பேசிவருகிறோம்.
இவை எல்லாம் நிகழ்ந்தது பல நூற்றாண்டுகளுக்குப் முன்னர். ஆனால் இந்த இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்த சரித்திரத் திரிவுகள், கலாச்சாரத் திணிப்புகள், பொருளாதாரச் சுரண்டல்கள் எத்தனை? நிதர்சனத்தில் நாம் எப்படிப்பட்ட வாழ்க்கைமுறையை, கோட்பாடுகளை, அறநெறிகளை பின்பற்றி வருகிறோம்? அவற்றை வகுத்தது யார், விழுந்தது யார்? என்ற பிரக்ஞைகூட இல்லாமல் வெறும் கோஷம் போடும் கும்பலாக, சுய பச்சாதாபத்துடன் குமைந்து கொண்டிருக்கிறோம்.

“மேக் இன் இந்தியா” (Make In India) என்று உலகநாடுகளை வேண்டி அழைக்கிறோம். அந்நிய முதலீடு இல்லாமல் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பை உயர்த்த முடியாது. அதனால் பன்னாட்டு நிறுவனங்கள் இங்கே கிளை தொடங்குவதைத் தவிர்க்க முடியாது. இனி வெள்ளையனே வெளிவேறு என்ற முழக்கங்கள் பயனளிக்காது. அடுப்பெரிப்பது முதல் அணுகுண்டு தயாரிப்பது வரை அந்நிய முதலீடுகள் பாய்ந்துள்ளன.
போராட்டங்களும், வீண் முழக்கங்களும் நம் அந்நிய முதலீட்டாளரை பதட்டமடையச் செய்யும் என்பதால் அமைதி காப்பதை நாம் காந்தியவாதம் என்று சொல்லி சப்பைக் கட்டுகட்டுகிறோம். இனி நாம் மீண்டும் ராட்டையக் கையில் எடுக்க முடியாது. கதர் ஆடைகளை மட்டுமே உடுத்துங்கள் என்று மேடை போட்டுக் கதறினாலும், இதெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராது என்று நம்மைப் புறந்தள்ளிவிட்டு போய்க்கொண்டே இருப்பார்கள்.
என்னதான் மேற்கத்திய வாழ்க்கைமுறை நம்மில் இரண்டறக் கலந்துவிட்டாலும் மனதின் அடி ஆழத்தில் நம்மை இரட்சிக்க ஒரு மீட்பர் மீண்டும் தோன்ற மாட்டாறா என்ற ஆதங்கம் சன்னமான குரலில் ஒலித்துக்கொண்டேதான் இருக்கிறது. கட்டற்ற சுதந்திரத்தை அனுபவிக்கிறோம். இருப்பினும் இனம்புரியாத ஒரு அடிமை மனோபாவம் நம்மை ஆட்டிப்படைக்கிறது.
சான்றாக உலகளாவிய தமிழர்கள் அண்மையில் சிலாகித்த வரலாற்றுப் புணைவு பஹுபலி, கொண்டாடிய நபர் சுந்தர் பிச்சை (Sundar Pichai) என்ற தமிழ் வம்சாவழி அமெரிக்கர்.
கர்மசிரத்தையுடன் சிவாஜிகணேசன் எப்படி கட்டபொம்மனைக் கண்முன் கொண்டுவந்து நிறுத்தினாரோ அதேபோல் தன் இத்தனை ஆண்டு திரையுலக பயணத்தை அங்கீகரித்து மகுடம் சூட்டியது போல் கதாபாத்திரத்தில் கணக்கச்சிதமாகப் பொருத்தியுள்ளார் இயக்குநர். கட்டபொம்மனையும் எட்டப்பனையும் ஒரே அச்சில் வார்த்து எடுத்தது போல் உள்ளது கட்டப்பா கதாப்பாத்திரத்தின் வடிவமைப்பு. வீரம், தியாகம், விசுவாசத்தின் ஒற்றை வடிவமாக ஆஜானபாகுவாக பவனி வருகிறார் கட்டப்பா. இருப்பினும் நம்பிக்கை துரோகம் எனும் நிழல் அவரைச் சூழ்ந்துள்ளது.

“எங்களுக்கென்று தனி சாம்ராஜ்ஜியம் கிடையாது, காலகாலமாக மகிழ்மதி நாட்டின் அரசகுலத்திற்கு நாங்கள் அடிமைகள் என்று எங்கள் மூதாதையர் சாசனம் எழுதிகொடுத்துவிட்டார்கள்” என்று கட்டப்பா சொல்லும்பொழுது பன்னாட்டு நிறுவனங்களில் வேலை பார்த்துக்கொண்டு, தகுதிக்கு ஏற்ற வாய்ப்புகள் இங்கு கிடைப்பதில்லை, லஞ்சமும், ஊழலும் இங்கே எல்லா மட்டங்களிலும் புரையோடிக் கிடக்கிறது. ஜம்பமாகச்சவுடால் பேசித் திரியும் ஒவ்வொருவர் மனத்திலும் ஒரு நெறிஞ்சி முள் தைக்கும்.
சிலந்தி வலையில் சிக்கிய எட்டுக்கால் பூச்சிபோல் மற்ற தேடல் எஞ்சின்கள் இணையத்தில் தத்தளித்து கொண்டிருக்கையில் கூகுள் (google) பிறந்தது. தகவலை வரிசைப்படுத்தி, பட்டியலிட்டு சீவி சிக்கெடுத்து குறைந்த நேரத்தில் சரியான பதிலை பரிந்துரைப்பதில் தனக்கென தனி முத்திரையைப் பதித்தது. இணையத்தில் சரியான தகவலைப் பெற ஒரு உலாவி (browser) மட்டும் இருந்தால் போதாது, தேடல் பொறிதான் (search engine) பணி இன்றியமையாதது என்பதை வெள்ளாவியில் வெளுத்தது பளிச்சென புரியவைத்தனர் லேரி பேஜ் , செர்ஜி ப்ரின் கூட்டணி.
குறுகிய காலத்தில் எல்லாம் உலாவிகளும் கூகுளையே தங்கள் ஆஸ்தான தேடல் பொறியாக நியமிக்கும் அளவிற்கு அசுர வேகத்தில் வளர்ந்தது கூகுள். அடுத்த கட்ட வளர்ச்சிக்கு புதிய கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்த வேண்டும்.
ஆனால் இருக்கும் இடத்தை தக்கவைக்க நாளொருமேனி பொழுதொருவண்ணம் விரிவடைந்துவரும் சமூக வலைத்தளங்கள், கைபேசி தயாரிக்கும் நிறுவனங்களுடன் ஈடுகொடுத்து வளர்ச்சிப்பாதையில் வழிநடத்த லேரி,சர்ஜி சாம்ராஜ்ஜியத்திற்கு ஒரு கட்டப்பா தேவைப்பட்டார். அதற்கு முழு தகுதி பொருந்தியதாக அவர்கள் மனதில் தோன்றியது சாட்ஷாத் சுந்தர் பிச்சைதான்.
நிறுவன வளர்ச்சியில் சுந்தர் பிச்சையின் அர்ப்பணிப்பும், கணிசமான பங்களிப்பும் உண்டு என்பதை யாரும் மறுப்பதிற்கில்லை. வெறும் தேடல் பொறியாகவே இல்லாமல் நமக்கான தனி உலாவியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று மேல் நிர்வாகத்திற்குப் புரியவைத்தார். கணினிகள், மடிக்கணினிகளின் உற்பத்தியில் உள்ள தேக்க நிலையைக் கண்டறிந்து இனி வருங்காலம் ஸ்மார்ட் போன்களுக்குத்தான் என்று முன்கூட்டியே கணித்து ஆன்டிராய்டு உற்பத்தியில் இறங்கினார்.
அவர் முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையிலும், தொழில் போட்டிக்கிடையே அவரைத் தக்கவைக்கும் பொருட்டும் அளித்த பதவி உயர்வுதான் நடுத்தட்டு தமிழ்குடும்பத்திலிருந்து வந்த சுந்தர் பிச்சையை கூகுள் CEO வாக முன்னிருத்தியுள்ளது. இது திறமையைக் காட்டிலும் அவரது நேர்மைக்கும், விசுவாசத்திற்கும் கிடைத்த வெகுமதி.
Please Read Also:
கிரீஷ் மாத்துருபூதம் ஆகிய நான், எப்படி Freshdesk-ஐ உலகளாவிய நிறுவனமாக உருவாக்கினேன்
இது ஏதோ எதேர்ச்சியாக வைத்த பெயரோ, போகிற போக்கில் நடந்த படிநிலை மாற்றும் பரிவர்தனையோ இல்லை. a-z about mobility என்ற அடிப்படை சித்தாந்தத்தில் இயங்கும் alphabet.com என்பது ஏற்கனவே BMW கார் நிறுவனம் பதிவு செய்துள்ள வலைதளத்தின் பெயர். அதையொட்டியே alphabet.inc என்று தன் நிறுவனத்தை பதிவுசெய்வதன் மூலம் BMW உட்பட எல்லா கார் தயாரிப்பு நிறுவனகளுக்கும் சந்தைக்குள் இறங்கும் முன்னரே அறைகூவல் விட்டுள்ளது கூகுள்.

கூகுளுக்கு ஒரு சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட்க்கு ஒரு சத்யா நாடெல்லா (satya nadella), பெப்ஸிக்கு ஒரு இந்திரா நூயி (indra nooyi), ஆர்செல்லருக்கு ஒரு லக்ஷ்மி மிட்டல் என்று எத்தனை பேரை நாற்றாங்கால் நட்டாலும், இந்தியா அதிகப்படியாக ஏற்றுமதி செய்வது உலகத்தரம் வாய்ந்த CEO க்களைத்தான் என்ற விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளோம்.
இப்படிப்பட்ட சூழலில் நம் சந்ததியினருக்கு சரியான முன்மாதிரிகளை அடையாளம் காட்டவேண்டிய நிர்பந்தத்தில் உள்ளோம். ‘மேக் இன் இந்தியா’ (Make In India) என்பதைவிட ‘மேக் பார் இந்தியா என்பதுதான் சரியான கண்ணோட்டம் என்று. ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் வலியுறுத்தியிருக்கிறார்.
போர்கருவிகள், ஏவுகணைகள் உற்பத்தி செய்வதில் தன்னிறைவு என்ற அந்தஸ்தை அடைந்ததன் மூலம் இந்தியா தன் வல்லரசு கனவைத் தக்கவைத்துகொண்டது. ஆக சர்வ வல்லமை பொருந்திய மேலை நாடுகள் மீண்டும் நம்மை அடிமைப்படுத்த முயற்சி எடுக்காமல் இருப்பதற்கும், தங்களுக்கு நிகரான பலம் கொண்ட நாடு என்று மதிப்பதற்கும் காரணம் சமூக அந்தஸ்து, செல்வாக்கு, புகழ் ஆகிய சுகபோகங்களுக்காக தங்கள் அடையாளத்தையும் விட்டுக்கொடுக்கத் துணிந்த சுந்தர் பிச்சை போன்ற அறிவு ஜீவிகளால் அல்ல,
எப்பாடுபட்டாலும் அந்நியனிடம் கையேந்தாமல் இந்திய விண்வெளி பயணத்தையும், அணு ஆயுத சோதனையையும் இங்கேயே அரங்கேற்றுவேன் என்ற வைராக்யத்துடன் வாழ்ந்துகாட்டிய மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் போன்ற தன்னலமற்ற தியாகிகளால்தான் என்பதை ஆவணப்படுத்த வேண்டும்.
