பொருளாதாரத்தை மேம்படுத்துவது சிறு வணிகர்கள்தான்-பிரதமர் நரேந்திர மோடி
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது சிறு வணிகர்கள்தானே தவிர, பெரு நிறுவனங்கள் அல்ல என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நாடு முழுவதும் உள்ள காய்கறிக் கடைக்காரர்கள், பால்காரர்கள், நெசவாளர்கள், செய்தித்தாள் விற்பனையாளர்கள் உள்ளிட்ட சிறு வணிகர்களுக்கு அவர் 2015,மார்ச் 31ஆம் தேதி கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் மோடி கூறிருப்பதாவது:
சிறு வணிகர்களான நீங்கள்தான் இந்த நாட்டின் உண்மையான முதுகெலும்பு. பொருளாதாரத்துக்கு நீங்கள் அளிக்கும் வலிமையானது யாராலும் கவனிக்கப்படாத விஷயமாக உள்ளது.
உங்களுக்குப் பயனளிப்பதற்காக முத்ரா வங்கி உள்பட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. உங்களின் கரங்கள் வலுப்படுத்தப்பட்டால் நாட்டை பெரிய உச்சங்களுக்குக் கொண்டு செல்வீர்கள் என்று நம்புகிறேன்.
உங்கள் தொழிலை எளிதாக நடத்தும் நிலையில் நீங்கள் இருக்க வேண்டும். அதிகாரிகளால் துன்புறுத்தப்படாமல் இருக்க வேண்டும். அன்றாட நடவடிக்கைகளுக்காக கடன் வாங்குவது, மூலப் பொருள்களை வாங்குவது, உற்பத்திப் பொருள்களை சந்தைப்படுத்துவது ஆகியவறற்றை நீங்கள் எளிதில் மேற்கொள்ள வேண்டும்.
பொருளாதாரத்தை பெரு நிறுவனங்கள்தான் ஆதிக்கம் செலுத்துகின்றன என்று பலரும் நினைக்கின்றனர். உண்மையில் நாடு முழுவதும் உள்ள 5.5 கோடி சிறு வணிகர்கள்தான் தங்களின் சிறிய அளவிலான உற்பத்தி, சந்தைப்படுத்துதல் நடவடிக்கைகள் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை இயக்குகின்றனர். சுமார் 11 முதல் 12 கோடி பேருக்கு நீங்கள் வேலைவாய்ப்புகளை அளிப்பது பாராட்டத்தக்கது. உங்களிடம் வேலைவாய்ப்பைப் பெறுவோரில் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபான்மையினர் ஆவர். இவ்வகையில், இந்தியா தனது வளர்ச்சி, வேலைவாய்ப்பு, செழுமை ஆகியவற்றுக்கு உங்களையே சார்ந்துள்ளது.
நீங்கள் அனைவரும் நிதி நெருக்கடியில் இருந்து பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும். எதிர்காலம் குறித்த பாதுகாப்பு உணர்வுடன் நீங்கள் இருக்க வேண்டும். இந்த நிலை உருவானால், இந்த நாட்டை உயர்த்தும் வலிமை மிக்கவர்களாக நீங்கள் இருப்பீர்கள்.
மத்திய அரசின் திட்டங்கள்: சிறு வணிகர்களின் மேம்பாட்டுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. குறைந்தபட்ச விண்ணப்பங்களுடன், நியாயமான வட்டிக்கு கடன் வழங்குவதை உறுதிப்படுத்துவதற்காக முத்ரா வங்கியை அரசு அமைத்துள்ளது.
பிரதமரின் ஜன் தன் திட்டத்தின் மூலம் சிறு வணிகர்கள் தங்களின் வர்த்தகத்த் தேவைக்காக ரூ.5,000 வரை வங்கிகளில் கடன் பெற முடியும்.
சிறு வணிகர்களின் குழந்தைகளுக்காக சேது (சுயவேலைவாய்ப்பு, திறன் பயன்பாடு) என்ற அமைப்பை அமைக்க உள்ளோம். வர்த்தகம் தொடங்குவதற்கான அனைத்து விஷயங்களிலும் உதவுவதே இதன் நோக்கம். இதேபோல், புதிய தொழில்நுட்பத்தை அறிய விரும்புவோருக்காக எய்ம் என்ற புதிய அமைப்பை ஏற்படுத்தியுள்ளோம்.
அரசு ஊழியர்கள் அனைவரும் தங்கள் பணிக் காலத்துக்குப் பின் ஓய்வூதியம் பெறுவது குறித்துக் கேள்விப்பட்டிருப்போம். இதேபோல், சிறு வணிகர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் முதுமைக் காலப் பயன்பாட்டுக்காக, அடல் ஓய்வூதியத் திட்டத்தை நாங்கள் கொண்டுவந்துள்ளோம்.
இத்திட்டத்தின்கீழ் நீங்கள் 60 வயதை எட்டும்போது உங்களுக்கு மாதம்தோறும் ரூ.5,000 ஓய்வூதியம் கிடைக்கும். இதற்காக நீங்கள் இளம் வயதில் இருந்து மாதத்துக்கு ரூ.250 சேமித்தாலே போதுமானது.
மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்துத் திட்டங்களும் விரைவில் அமல்படுத்தப்படும் என்று தனது கடிதத்தில் மோடி தெரிவித்துள்ளார்.