தொழிலை விரிவுப்படுத்த வங்கியை தாண்டிய Venture Capital முதலீடுகள்
தொழில்முனைவோர்கள் முதலீடு இல்லாமல் நிறுவனத்தை வளர்க்க முடியாது. வங்கியை தாண்டி பலவற்றிலிருந்து முதலீட்டிற்கான தொகையைப் (funding) பெறலாம். அவற்றில் ஒன்று வென்ச்சர் கேபிடல் நிறுவனங்கள் (Venture Capital Firms). நாம் வருமானத்தை அதிகப்படுத்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான முதலீடுகளை (investments) செய்கிறோம். பிக்ஸட் டெபாசிட் (Fixed deposit), அஞ்சலக சேமிப்பு (post office saving), தங்கம் (gold), இடம் (real estate), மியூச்சுவல் பண்ட் (mutual fund), பங்கு சந்தையில் (share market) முதலீடு என பல விதமான முதலீடுகளைச் செய்கிறோம்.
மிகப்பெரும் முதலீட்டாளர்களின் (investors) ஒருவித முதலீட்டு வகைதான் வென்ச்சர் கேபிடல். பல முதலீட்டாளர்கள் ஒன்று சேர்ந்து ஒரு வென்ச்சர் கேபிடல் நிறுவனத்தை (Venture Capital Firms) ஆரம்பிப்பார்கள். வளர்ந்து வரும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தேர்வு செய்து அதில் முதலீடு (investment) செய்வார்கள். வென்ச்சர் கேபிடல் நிறுவனம் தொழில் அதிபர்கள், மேலாண்மை நிபுணர்கள், தொழில் நுட்ப நிபுணர்கள் ஆகியவற்றை கொண்டு இருக்கும்.
நிறுவனங்களை முதலீட்டிற்காக தேர்ந்தெடுக்கும் விதம்
தொழில் ஐடியா (Startup Idea), நிறுவனத்தின் வருமானம் (revenue) மற்றும் லாபத்தின் மதிப்பு(profit), நிறுவனம் செயல்படும் விதம், தொழிலுக்கு எதிர்காலத்துக்கு உள்ள வளர்ச்சி வாய்ப்புகள் (growth factor), தொழில் முனைவோரின் கல்வித்தகுதி, அனுபவம் (experience) போன்ற பல விஷயங்களை அலசிய பிறகுதான் வென்ச்சர் கேபிடல் நிறுவனங்கள் தொழிலில் முதலீடு செய்வார்கள். வென்ச்சர் கேபிடல் நிறுவனங்கள் செய்யும் முதலீட்டுக்கு ஏற்ப சம்மபந்தப்பட்ட நிறுவனங்களில் அவர்களுக்கு பங்குகள் (Shares) வழங்க வேண்டும்.
நிறுவனத்தில் வென்ச்சர் கேபிடலின் பங்கு
வென்ச்சர் கேபிடல் நிறுவனங்கள் பல வகையான ஒப்பந்தங்களுக்குப் (Agreements) பிறகுதான் தொழிலில் முதலீடு செய்வார்கள். இதில் முக்கியமான ஒப்பந்தம், ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் இயக்குநர் குழுவில் (Board of Directors) வென்ச்சர் கேபிடல் சார்பாக சிலர் பங்கு பெறுவார்கள். நிறுவனத்தில் முக்கியமான முடிவுகள் எடுக்கும் பட்சத்தில் அவர்களின் அனுமதி தேவை.
உதாரணத்துக்கு தொழிலை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்கிறபட்சத்தில் இயக்குநர் குழுவில் பங்குப் பெற்றுள்ள வென்ச்சர் கேபிடல் நிறுவனத்தின் அனுமதி வேண்டும். அவர்களின் அனுமதி இல்லாமல் தன்னிச்சையாக தொழில்முனைவோர்களால் முடிவு எடுக்க முடியாது. நிறுவனங்களுக்கு தேவையான ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் வென்ச்சர் கேபிடல் நிறுவனங்கள் வழங்கும்.
PLEASE READ ALSO: ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு முதலீட்டை பெற தேவையான நடைமுறைகளை செய்து கொடுக்கிறது Startup CFO’s
லாபம் ஈட்டும் விதம்
வென்ச்சர் கேபிடல் நிறுவனங்கள் முதலீடு செய்த நிறுவனங்கள் வளர்ச்சிப்பெறும் போது அவர்களின் பங்குகளின் மதிப்பும் உயரும்.
பங்குகளை எப்படி விற்பார்கள்
பொதுவாக குறிப்பிட்ட வருடங்கள் என மனதில் வைத்து நிறுவனத்தில் முதலீடு செய்வார்கள். முதல் சில வருடங்களை தொழிலில் முதலீடு செய்வதற்கும், அடுத்த சில வருடங்களை தொழிலில் இருந்து முதலீட்டை வெளியே எடுப்பதற்கும் பயன்படுத்திக் கொள்வார்கள்.
முதலாவதாக இன்னொரு வென்ச்சர் கேபிடல் நிறுவனங்களுக்கு நிறுவனத்தில் உள்ள தங்கள் பங்கினை விற்க முயற்சிப்பார்கள் அல்லது வேறொரு பெரிய நிறுவனத்திற்கு தங்கள் பங்கினை விற்று அந்த நிறுவனத்துடன் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை இணைத்து விடுவார்கள் அல்லது ஸ்டார்ட் அப் நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிடுவதன் மூலம் தங்களது முதலீட்டை வெளியே எடுத்து விடுவார்கள்.
PLEASE READ ALSO: ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முதலீட்டை எதிர்பார்க்கும் முக்கிய 12 Venture Capital நிறுவனங்கள்