சமையல் தெரியாதவர்களை சமைத்து சாப்பிட வைக்கும் சென்னையைச் சேர்ந்த ‘AwesomeChef.in’
ஒரு வருடங்களுக்கு முன்பு நானும், என் அம்மாவும் தொலைக்காட்சியில் ஒரு சமையல் நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்தோம். அப்போது அதில் பன்னீர் டிக்கா சமைப்பது எப்படி என்று காட்டினார்கள். நான் என் அம்மாவிடம் அதை ஒரு முறை சமைத்துக்கொடுக்க சொன்னேன். அவர்களும் செய்துதருகிறேன் என்று சொன்னார்கள். அவர்கள் சொல்லி இரண்டு வருடங்கள் கடந்துவிட்டது. இன்னும் அதை செய்து கொடுக்க முடியவில்லை.
நான் பல நேரங்களில் என் அம்மாவிடம் “நீங்களும் தொலைக்காட்சியில் பல வருடமாக சமையல் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள், ஆனால் ஒரு தடவை கூட அதில் பார்த்தவற்றை சமைத்து கொடுத்தது இல்லை” என்று கேலி செய்வதும் உண்டு.
இதற்கு அவர்களிடமிருந்து வரும் பதில் “அதை சமைப்பதற்கு பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்கள் எங்கே கிடைக்கும் என்று தெரியாது, அத்தகைய பொருட்களை தொலைக்காட்சியில் மட்டுமே பார்த்திருக்கிறேன்” என்று கூறுவார்கள். அவர்கள் கூறுவதில் நியாயம் இருக்கிறது. இது எங்கள் வீட்டில் மட்டும் நடக்கும் நிகழ்வு இல்லை. பெரும்பாலான வீட்டிலும் நடக்கும் ஒன்றுதான்.
நம்மில் பல பேருக்கு ஹோட்டலுக்கு செல்லாமல் வீட்டிலேயே வித்தியாசமான, விதவிதமான உணவை சமைக்க முயற்சிப்பது மிகவும் பிடித்தமான ஒன்று. ஆனால் தேவையான சமையல் பொருட்கள் கிடைக்காமை, அதை எங்கு வாங்குவது என்ற குழப்பம், அப்படியே தெரிந்தாலும் ஒரு முறை செய்யும் இந்த உணவுக்காக வாங்கிய பொருட்களின் மீதி அப்படியே கிடங்கில் போடப்பட்டு வீணாகும் போன்ற பல காரணங்களால் இந்த உணவுகளை வீட்டில் சமைப்பதில்லை.
இனி அந்தக் கவலையே வேண்டாம் வீட்டிலேயே வித்தியாசமான உணவுகளை செய்ய ஏதுவாக உணவுப் பொருட்களையும், செய்முறை விளக்கத்தையும் வீட்டிற்கே அனுப்புகிறது சென்னையைச் சேர்ந்த ‘AwesomeChef‘ நிறுவனம்.
எப்படி Maggi யில் நூடுல்ஸ் (noodles) அதற்கேற்றாப் போல் மசாலா கிடைக்கிறதோ, கிட்டத்தட்ட அதேபோல் பல வித்தியாசமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உணவுகளை செய்வதற்கு தேவையான அனைத்துப் பொருட்களும் சரியான அளவுகளில் நமது வீட்டிற்கே அனுப்புகிறது ‘AwesomeChef.in’.
இதை தொடங்கியவர்கள் பிரவீன் குமார் மற்றும் அஞ்சலி ஆனந்த் தம்பதியினர். “ரெண்டு பேருமே வேலைக்கு போனதால வாரத்துக்கு ஒருமுறை வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க கடைக்கு போவோம். மகனை வைச்சுட்டு ஒழுங்கா ஷாப்பிங் செய்ய முடியலை. அதனால கையில் கிடைக்கிற பொருட்களை அள்ளிட்டு வரவேண்டிய நிலை. தவிர ஹோட்டலுக்கு அவனை கூட்டிட்டு போக முடியவில்லை.
அதனால் சில சமயம் ஹோட்டல் உணவுகளை ஆன்லைனில் ஆர்டர் செய்வோம். என்னதான் சுவையாக இருந்தாலும் அடிக்கடி ஆர்டர் தர முடியாது. ஹோட்டலுக்கு எப்பவும் போய் சாப்பிடமுடியாது.ஹோட்டலில் எப்படி சமைப்பார்களென்று தெரியாது. இப்படி நமக்கு தெரியாத பட்டியல் அதிகம். ஹோட்டல் உணவால் ஆரோக்கிய கேடும் ஏற்படலாம்.
இது தனிப்பட்ட எங்கள் குடும்ப பிரச்சனை மட்டுமல்ல. பெரும்பாலான நடுத்தர குடும்பங்களின் பிரச்சனை. அப்பொழுதுதான் ஹோட்டல் சாப்பாட்டை வீட்டிலேயே சமைத்து சாப்பிட்டால் எப்படி இருக்குமென்று யோசித்தோம். அப்படி உருவாக்கியதுதான் AwesomeChef.” என்று பிரவீன் குமார் கூறினார்.
சமையலின் மீது தீவிர ஆசை உடைய பிரவீன் குமார், சமையல் படிப்பை படிக்க விரும்பினார். ஆனால் குடும்ப வற்புறுத்தலின் பேரில் தவிர்க்க முடியாமல் பொறியியல் படித்தார். பின்னர் மேற்படிப்புக்காக இங்கிலாந்து சென்ற பிரவீன், அங்கு பகுதி நேர வேலையாக ஒரு பேக்கரியில் வேலைப் பார்க்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஓர் உணவை எப்படி சமைக்கணும், எப்படி கையாளவேண்டும் போன்ற சமையல் பற்றிய பல விஷயங்களை அவர் கற்றுக்கொண்டது அப்பொழுதுதான்.
இங்கிலாந்தில் படிப்பை முடித்த பிறகு இந்தியா திரும்பிய பிரவீன் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்தார். சமையலில் மிகுந்த ஆர்வம் இருந்த அவர்களுக்கு, சமையல் செய்முறை விளக்கம் தொடர்பாக ஓர் இணையத்தளம் தொடங்கினால் என்ன என்று தோன்றியது. அப்படி பிரவீன் தனது சமையல் ஆசையை நிறைவேற்ற தனது மனைவி அஞ்சலியுடன் முதலில் தொடங்கியதுதான் Awesomecuisine.com.
அதில் உணவுகளின் செய்முறை விளக்கங்களும், சமையல் குறிப்புகளும் மற்றும் அது தொடர்பான வீடியோக்களும் அந்த தளத்தில் பதிவு செய்கிறார்கள். இப்போது தென்னிந்திய, வட இந்திய, வெளிநாட்டு உணவுகள் உள்பட 11 ஆயிரம் மேற்பட்ட சமையல் குறிப்புகள் Awesomecuisine.com யில் இடம்பெற்றுள்ளன.
“எங்கள் தளத்தை படிக்கும் பலர், தேவையான பொருட்கள் எங்கு கிடைக்குமென்று கேட்பார்கள். தவிர அந்த பொருட்களை வாங்க கடைக்குப் போனால், மொத்தமாகத்தான் வாங்க முடியும் என்ற நிலை. உதாரணத்திற்கு பாஸ்தா செய்ய சாஸ் தேவையென்றால் அது முழு பாட்டிலாகத்தான் வாங்க வேண்டும். அதேபோல் ஆர்வப்பட்டு இன்று ஒரு குறிப்பிட்ட சமையலை செய்பவர், மறுநாளும் அதையே செய்வார்கள் என்று சொல்ல முடியாது. ஒரு முறை சமைத்து மீதமான பொருட்களை ஒரு ஓரமாக வைத்துவிடுவார்கள். அது அப்படியே வீணாகும். இதையெல்லாம் மனத்தில் வைத்துதான் ‘AwesomeChef.in’ ஐ தொடங்கினோம்.” என்று கூறினார் பிரவீன்.
AwesomeChef யில் என்ன உணவு, எத்தனை பேருக்கு சமைக்க விரும்புகிறீர்கள் என்பதை தேர்ந்தெடுத்து அதில் உங்கள் முகவரியை குறிப்பிட்டு ஆர்டர் செய்தால் போதும். தேவையான உணவுப் பொருட்களை துல்லியமான அளவோடு மற்றும் அதன் செய்முறை விளக்கத்தோடு வீட்டிற்கே அனுப்பி வைக்கிறார்கள். ஒவ்வொரு உணவுகள் குறைந்தபட்சம் 2 நபர்களுக்கு செய்ய தேவையான பொருட்கள் ஆர்டர் செய்யலாம்.
“எங்கள் நோக்கம் ஒன்றே ஒன்றுதான் சமையல் தெரியாதவர்களும் சமைத்து சாப்பிடவேண்டும். அதற்கு எங்கள் தளம் உதவும் அவ்வளவுதான் என்கிறார்” பிரவீன் குமார்.
Please Read This Success Story Also:
சென்னையில் தேநீரின் அடையாளமாக மாறிவரும் ’Chai King (சாய் கிங்)’