சின்னம் பெரிது பகுதி-4 : ரோம் நகரின் ரோமிங் சிம்மா நாம்?

Share & Like

சுதந்தர இந்தியா இன்றும் பவுண்டிற்கும், யூரோவிற்கும், டாலருக்கும் நிகரான தன் ரூபாயின் மதிப்பை நிலைநிறுத்தவும்  பண வீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவரவும் அயராது உழைத்துக்கொண்டிருக்கிறது.

2020 யில் நாம் வல்லரசாகாவிடில் நம் இலக்கை அடையத் தவறிவிட்டோம் என்று பொருளல்ல. 2020 ஆம் ஆண்டு நம் பயணத்தில் முக்கியமானதொரு மைல்கல் அவ்வளவு தான். நாம் எவ்வளவு தூரம் வந்திருக்கிறோம், இனி நாம் எந்தவிதமான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும், எவ்வளவு துரிதப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற சமன்பாடுகளை மறுசீராய்வு செய்துகொள்ள வேண்டிய ஓர் புள்ளியாக அது இருக்கும்.

India super power
Credits: thehindu
யதார்த்தத்தில் இது சாத்தியமா? வாழ்க்கை என்பது ஒரு வட்டம். அதில் ஜெயிப்பதும் தோற்பதும் சுழற்சியாக நடந்துகொண்டே இருக்கும் என்ற என்ற மாயையை நுட்பமாக நம் ஆழ்மனதில் பதித்து விட்டு நம்மைச்சுற்றி ஒரு பெரிய வட்டத்தைப் போட்டு வைத்துவிட்டு நம் அறியாமையைப் பயன்படுத்தி அழகியல் என்ற பெயரில் அழுக்கு மூட்டைகளை சுமக்கும் பொதிமாடுகளாய் நம்மைத் திரிய வைத்த அந்த சூத்திரதாரி யார்?

நாம் உண்மையிலேயே முழு சுதந்திரம் அடைந்துவிட்டோமா? அல்லது சொந்த ஊரிலேயே ரோமிங் கட்டணத்தில் எல்லா செலவுகளையும் செய்து கொண்டுள்ளோமா?  நிதிப் பற்றாக்குறையை சீர்செய்ய நம் பண்பாட்டு விழுமியங்களை மீட்டெடுப்பது எவ்வளவு முக்கியமானதாக இருக்கிறது? இப்படி இடிப்பஸ் கனவுபோல் பின்னிப் பிணைந்திருக்கும் இந்த இடியாப்ப சிக்கலுக்கு விடை கண்டுபிடிக்காமல் நாம் திடீரென்று ஒரு நாள் வல்லரசாக நம்மை நாமே அறிவித்துக்கொள்ள முடியாது.

ஓம் எனும் பிரணவ மந்திரத்தை நாம் உச்சரிக்கிறோமோ இல்லையோ. ரோம் நகரின் பண்டைய நாகரிகத்தின் வாசனையை நுகராமல் நம்மால் இந்தியாவின் எந்தவொரு பெருநகரையும் கடக்க முடியாது.

சிந்து நதி நாகரிகத்தை பாரசீகத்தில் வழக்கம்போல் ’ச’ வரும் இடத்தில் எல்லாம் ’ஹ’ போட்டு ஹிந்துவெளி நாகரிகம் என்றழைத்தது. கிரேக்க மொழியில் அதுவே ’இந்தோஸ்’ என்றும், லத்தீனில் ’இண்டஸ்’ என்றும் மருவி கடைசியில் ரோமர்கள் நம்மை உச்சி முகர்ந்து ’இந்தியா’ என்ற பெயரை அவர்கள் 3 முறை பாராயணம் செய்ததும் அதுவே நிலைத்துவிட்டது.

கொற்கையிலும், புதுவையிலும் ரோம சாம்ராஜ்ஜியத்தின் பண்டைய நாணயங்களும், மண்பாண்டங்களும் பாண்டிய மன்னர்கள் ஆட்சியின் போதே புழங்கின என்பதற்கு அகழ்வாராய்ச்சியின் போது கிடைத்த சான்றுகள் போதும் போதும் என்ற அளவிற்குக் குவிந்து கிடக்கின்றன.

இந்தியப் பெருங்கடலின் வர்த்தக உரிமையைத் தம் வசம் வைத்திருந்தவர்கள் தமிழர்கள். சேய்மையில் அட்டிகளை கொண்டு சேர்த்ததால் செட்டி என்ற பட்டம் பெற்ற வணிகர்கள் வாழ்ந்த நாட்டில், அதுவே மருவி சேட்டாகியது. வணிகன் என்றும் பனிக்கன் என்றும் அழைக்கப்பட்டவன் இன்று பனியாக்களின் துனியாவில் தன் பண்பாட்டு, கலாச்சார, பொருளாதார அடையாளங்களை அடகு வைத்துவிட்டான்.

நாள், கிழமை கணக்கு முதற்கொண்டு நிதியாண்டு வரை எல்லாவற்றிலும் ரோமர்களையே நாம் பின்பற்றுகிறோம் ஊரோடு இயைந்து வாழ்கிறோம் என்ற பெயரில். ஐம்பெரும்காப்பியங்களிலில்லாத வணிகக் குறிப்புகளா? இந்தியாவின் செல்வச் செழிப்பைச் சொல்ல வேறு சான்றுகள் தேவையா? அர்த்தசாஸ்த்திரத்தை மிஞ்சிய ஒரு பொருளாதாரக்கோட்பாடு தேவையா? உலகின் முதல் அச்சடித்த நாணயத்தைப் பயன்படுத்தியவன் தமிழன்.

அமெரிக்கா என்ற நாடே பிறப்பதற்கு முன்னால் பண்பாட்டின் தொட்டிலாக விளங்கிய சிந்துசமவெளி நாகரிகத்திலிருந்து தோன்றிய இனத்தை கடைசியாக அடக்கி ஆண்ட வெள்ளையன் விட்டுச்செல்லும்பொழுது சொன்னது: ”விவேகானந்தரைப் போல் ஒரு எழுச்சிமிக்க மனிதர் தோன்றிய நாடு இது, ஹரப்பாவையும், மொஹஞ்ஜதாரோவையும் வம்சாவழியாகக் கொண்ட இவர்கள் இனியும் அடிமையாயிருப்பதா? கூடாது.

எனவே விரைவில் இந்தியாவில் சுயாட்சி மலரும் என்ற வார்த்தையை ஆங்கிலேய பிரபுக்கள் உதிர்ப்பதற்குள் கோடிக்கணக்கான செல்வ வளங்கள் சூறையாடலும், விலை மதிப்பில்லா உயிர்கள் பலியிடப்பட்டது நடந்தேறிவிட்டன. அது பக்குவத்தால் ஏற்பட்ட மனமாற்றமா? இல்லை இருந்த இடத்திலிருந்தே இனி நம்மை ஆட்டிப்படைக்கும் நுட்பத்தை அறிந்துகொண்ட பின் நேரம் பார்த்துப் பாயலாம் என்று பதுங்கியிருத்தலா? எது எப்படியோ. கண்டம் கடந்து எல்லோரும் ஏன் இந்தியாவை வந்தடைய வேண்டுமென்றே கங்கணம் கட்டிக் கொண்டு புறப்பட்டார்கள்?


Please Read Also:

freshdeskவழக்கமான நேர்முகத் தேர்வு என்ற விதியை உடைத்தெறியும் FreshDesk நிறுவனம் : பாராட்டப்பட வேண்டிய நிறுவன காலாசாரம்


தன் காலணியைக் கழற்றி எறிந்த பொழுது கண்ணகியின் சிலம்பிலிருந்து சிதறிய மணிக்கற்களில் ஒன்று விக்ட்டோரிய மகாராணியின் காலடியிலும் விழுந்திருக்க வேண்டும். இந்தியாவின் மிளகிற்கும், பஞ்சிற்குமே நம் சொத்தை எழுதி வைக்க வேண்டும் போலயே என்று சிணுங்கிக்கொண்டே சிலுவை தேசத்து ராஜாக்கள் கடல் வாணிபத்தில் இந்தியாவுடன் ஈடுபட்டனர்.

இந்த அந்நிய செலாவணியை ஈடுகட்ட வேண்டும் என்றால் இந்தியாவைக் காலனியாக்க வேண்டும். சந்தைக்கு போகணும் ஆத்தா வையும் காசுக்குடு என்று சதா பரங்கியப் பரட்டையை துதிபாடி துன்புறுத்திக் கொண்டே இருந்தான் சப்பாணி வாஸ்கோ. அப்போது மிளகாய், கொய்யா, அன்னாசி, பப்பாளி, முந்திரி  செடிகளை பிரேசிலிருந்து இங்கு கொண்டு வந்து நட்டு வைக்க அதன் உற்பத்தி இந்தியாவில் தொடங்கியது.

சீசர் காலத்தில் வேண்டுமானால் அவர்கள் நம்மை ஆண்டிருக்கலாம். ஆனால் இன்று நாம் கத்தோலிக்கர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல! இந்திய மண்ணில் ப்ரோட்டஸ்டண்ட் கொடிகளும் பட்டொளி வீசிப் பறக்க வேண்டும். செய்வீர்களா? செய்வீர்களா? என்று முழங்கினாள் பிரிட்டிஷ் நாட்டுப் பட்டத்து ராணி.

அன்றைய இத்தாலியின் தென்பகுதியை விட வடபகுதியின் செல்வாக்கே ஓங்கியிருந்தது. காரணம் வட இத்தாலியில் வியாபாரம் விருக்தியடைய வம்சாவழியை விட திறமைக்கே முன்னுரிமை வழங்கப்பட்டது. கடல்வழிப் பயணங்களுக்கான முதலீடு (investment) பலரிடமிருந்து ஒன்று திரட்டப்பட்டது. காரணம் நஷ்டம் அடைந்தால் நொடித்துப் போய்விடாமல், இலாபத்தை சமமாக எல்லோரும் பங்கிட்டுக்கொள்ளலாம்.

ஒரு தனி மனிதனை நம்பாமல் ஒரு நடுநிலையான நிறுவனம் எல்லாவிதமான பரிவர்தனையையும் பார்த்துக்கொள்கிறது என்பது முதலீட்டாளர்களை ஆசுவாசப்படுத்தியது. இதே பாணியைப் பின்பற்றி இந்தியாவை எதிர்நோக்கிய கடல்வழிப் பயணங்களை விக்டோரிய மகாராணியின் நல்லாசியுடன் பிரிட்டன் தொடங்கியது.

bbc

நீண்ட நெடிய போராட்டத்தின்பின் முகலாயர்களின் கட்டுப்பாட்டிலிருந்த சூரத் (surat) துறைமுகத்தின் வாயிலாக இந்தியாவுடனான வணிக உறவுகளில் தடம் பதிக்கும் விதம் பரங்கியரை மீறி சகல சலுகைகளையும் பெற்றனர் ஆங்கிலேயர். படிப்படியாக முன்னேறி பம்பாய், கல்கத்தா, மதராஸ் போன்ற துறைமுகங்களிலும் தன் செல்வாக்கை வலுப்படுத்திய ஆங்கிலேய வணிகர்கள் முதன்முதலில் நம் சிற்றரசர்களின் பண நிர்வாகத்தில் தன் யோசனைகளைப் புகுத்தினர்.

அப்போது நம்பிக்கையின் பெயரில் கடல்கடந்த வாணிபத்தின் பொழுது, தன்னிடம் இருக்கும் தங்கத்திற்கு இணையான ஹுண்டிக்களை பேரரசர்கள் வினியோகித்தனர். பொன்னியின் செல்வனில் வரும் பனைமோதிரம் போல. ஆனால் இது சாதிய உட்பிரிவு அல்லது குடும்பத்தின் வம்சாவழியின் பெயரில் தான் வழங்கப்பட்டது. இயல்பாக இப்பேர்ப்பட்ட நிதியைப் பெற சாத்தியமே இல்லாத குறுநில மன்னர்களை முதலில் கம்பேனி குறி வைத்தது.

முதலீட்டாளர்களிடமிருந்து நிதி நிர்வாகத்தை தொழில்முறை மேலாளர்களிடம் ஒப்படைப்பதன் மூலம் நம்பகத்தன்மை அதிகரிக்கும் என்ற பிம்பத்தைக் கட்டமைத்ததன் மூலம் பிரித்தாளும் தந்திரத்தை மெல்ல அரங்கேற்றுவதற்கான ஒத்திகையாக அது அமைந்தது.

தமிழன் மெர்ச்சண்ட் ஆப் வெனிஸை வாயைப் பிளந்து பார்த்தான். சீத்தலை சாத்தனாரைவிட ஷேக்ஸ்பியரைக் கொண்டாடத் தெரிந்தவனே அறிவார்ந்த சமூகத்தின் பிரதிநிதி என்று பறைசாற்றப்படும் அளவிற்கு கல்வி முறையிலிருந்து சகலத்திற்கும் ஆங்கில முலாம் பூசப்பட்டது.

அது செம்மொழி அந்தஸ்துடைய தமிழாயிருந்தாலும் சரி. சிந்துநதி நாகரித்தில் மலை கடந்து வந்த பூர்வக்குடி ஆட்டு இடையர்களுக்கு ஏதுவாக இருக்கட்டுமே என்று ஆதித் தமிழனால் வகுக்கப்பட்ட செம்மைக் குருமொழியாகத் தோன்றி சமஸ்கிருதமாக உருவெடுத்த ஆரிய மொழியாக இருந்தாலும் சரி ஆங்கிலம் அவற்றை அங்குலம் அங்குலமாக அடிமைப்படுத்தியது. இனியும் நாங்கள் கோவலனைப்போல் அசமந்தமாகவோ, கண்ணகியைப்போல் முன்கோபியாகவோ, மணிமேகலையைப்போல் மேதாவியாகவோ இருக்க மாட்டோம்.

நண்பன் வாங்கிய கடனை செலுத்தாவிட்டால் உம்மிடமிருந்து ஒரு பவுண்டு சதையை வட்டியாக எடுத்துக்கொள்வேன் என்ற அரக்கத்தனமான ஷைலக்கின் நிபந்தனையைக்கூட எப்படி சாதுர்யமாக போர்ட்டியா ஒரு சொட்டு ரத்தம் சிந்தாமல் சதையை வெட்டி எடுக்கவேண்டும் என்ற சட்ட நுணுக்கத்தால் தன் கணவனையும், அவரின் நண்பனையும் காப்பாற்றினாள் என்பதை மெச்சினான். ஆனால் தாமஸ் பிட் போன்ற பெரும் ஊழல் பெருச்சாளிகள் தன் சுய செல்வாக்கை அதிகரித்துக்கொள்ளவே கம்பெனி அவர்களை உடனடியாக நீக்கியது.

மெல்ல மெல்ல கம்பெனியின் மீதான நம்பகத்தன்மை குறையவே தன் அணுகுமுறையில் தீவிர மாற்றம் கொண்டு வந்தது பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி. நியாயம் சொல்ல நடுநிலையான ஆளைத்ததேடிய குறுநில மன்னர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாக வெள்ளையன் தோன்றினான்.

வழக்காடு மன்றங்கள் தோன்றின. சட்டம் சாமானியனின் உரிமைக்காகக் குரல்கொடுக்கும் என்ற கட்டுக்கதை கற்பனைக்கு அப்பாற்பட்டதை சாத்தியமாக்கப்போகிறது என்கிற ஆருடம் காதிற்கினியதானதால் அப்பத்தைக் குரங்கின் காவலில் வைப்பது ஆபத்தானதாகப் படவில்லை இந்திய ஆட்சியாளர்களுக்கு. மெல்ல மெல்ல அரசு நிர்வாகப் பொறுப்பை ஏற்கத்தொடங்கினர்.

தங்கமும், வைரமும், பவளமும், மரகதமும் அள்ள அள்ள கொழிக்கும் நாட்டில் அச்சடித்த காகிதம் புழக்கத்தில் வந்தது. சேமிப்பு என்பது வங்கிகள் சம்பத்தப்பட்டது என்ற வெனிஸ் நகர வணிகர்களுக்கான மெர்கண்டைல் முறை இங்கும் பிரசித்தி பெற்றது. அவை ரோத்ஸைல்டு கையெழுத்திட்ட காகிதங்கள். கிட்டத்தட்ட நம் பாரம்பரிய ஹுண்டி (கணக்கியல் பயிற்சி) முறையின் நகல்.


Please Read Also:

freshdesk

கிரீஷ் மாத்துருபூதம் ஆகிய நான், எப்படி Freshdesk-ஐ உலகளாவிய நிறுவனமாக உருவாக்கினேன் 


நம் குல வரலாற்றை வரையறுத்து நமக்கே அச்சடித்து துண்டுப் பிரசுரமாக வினியோகம் செய்ய ஆரம்பித்தவன் மதப் பிரச்சாரம் என்ற நோக்கை சமத்துவம், சம உரிமை என்ற போர்வையில் அரங்கேற்றி உலக யுத்தத்திற்கு படைதிரட்ட இதையே துருப்புச் சீட்டாக பயன்படுத்தினான்.

சதுரங்கம் என்ற மௌரியர் காலத்து விளையாட்டு முறையை நமக்கே ‘செஸ்’ என்ற பெயரில் மறு அறிமுகம் செய்த ரோமர்களின் சாதுர்யத்தைப் பாராட்டாமல் இருக்க முடியாதல்லவா? ஆனால் சதுரங்கத்துடன் ஒப்பிடுகையில் செஸ் ராணி சர்வ வல்லமை பொருந்தியவளாக இருந்தாள். அது ஒரு குறியீடு.

வையத் தலைமை கொள் என்ற நோக்குடன் வலம்வந்த உலக மன்னர்கள், சர்வாதிகாரிகள், அரசுகள், பன்னாட்டு நிருவனங்கள் யாருக்கும் அது வாய்க்கவில்லை. இதுவரை அந்த பாக்கியம் கிட்டியது இரண்டே இரண்டு பேருக்கு மட்டும்தான். ஒன்று அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்ற உலக சமாதானத்தின் தூதுவராகக் கருதப்படும் அன்னை தெரசாவுக்கு.

மற்றொன்று இன்று 52 காமன்வெல்த் நாடுகளின் ராணி என்று மறைமுகமாக தன் கிரீடத்தை அலங்கரித்து வரும் பிரிட்டிஷ் ராணி எலிசபெத். காரணம்! இவர்கள் எந்த நாட்டிற்குச் செல்லவும் வீசா விண்ணப்பிக்கத் தேவை இல்லை.

இவர்கள் இருவரும் ரோம வம்சாவழி வந்தவர்கள் என்பது தற்செயலானதா? தங்கம் ஏன் மற்ற உலோகங்களைவிட அதிக அந்தஸ்து பெற்றது. அதைவிட விலைமதிப்பு அதிகம் உள்ள பொருட்கள் இருந்தனவா? இப்போதும் இருக்கின்றனவா? தங்க சமன்பாடு என்ற வழக்கு மாறி, அச்சடித்த காகிதம் புழக்கத்தில் வந்ததால் எப்படிக் குறிப்பிட்ட சில குடும்பங்களை மட்டும் நாம் பணக்காரர்களாக்குவதற்கென்றே உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

அணுஆயுத ஒப்பந்தங்களும், மின் உலைகளும் ஏன் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. நாம் அன்றாடம் பயன்படுத்தும் கடன் அட்டைகள் முதலான அத்தனை கண்டுபிடிப்புகளுக்குமான உரிமம் யார் கையில் உள்ளது. NATO, BREXIT, BRICS, WHO, UN இவற்றிற்கெல்லாம் அர்த்தம் என்ன?

ரோம் நகரின் ரோமிங் சிம்மா நாம்?

தொடரும்…..
Share & Like
Karthikeyan Pugalendi
Proprietor at Vanavil Puthakalayam and Vice President at Sixthsense Publications.
I have a flair for writing. Currently working on my first English novel and my movie script for director Sasi. I have been regularly writing columns in e-mags and Tamil journals. Most of them were tech related articles.

My scope is to go global, diversify, invoke technology in publishing and tap newer avenues.
Karthikeyan Pugalendi on FlickrKarthikeyan Pugalendi on Google

Karthikeyan Pugalendi

Proprietor at Vanavil Puthakalayam and Vice President at Sixthsense Publications. I have a flair for writing. Currently working on my first English novel and my movie script for director Sasi. I have been regularly writing columns in e-mags and Tamil journals. Most of them were tech related articles. My scope is to go global, diversify, invoke technology in publishing and tap newer avenues.

Show Buttons
Hide Buttons